2.3 வட்டார வழக்குச் சொற்கள்

மொழியானது மனிதன் வாழுமிடம், தட்பவெப்பநிலை, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இயற்கைச் சூழல், போக்குவரத்துக் காரணமாக, ஒரே மொழி பேசும் குழுவினரிடையே மொழியை ஒலிப்பதில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. இதனால் ஒரு மொழியிலிருந்து கிளை மொழிகள் தோன்றுகின்றன. இத்தகைய கிளை மொழிகள் வட்டார வழக்கு என்று அழைக்கப்படுகின்றன. சங்க காலத்திலேயே வட்டார வழக்கு இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. பன்றி நாடு, குட்ட நாடு, குடநாடு, அருவா வடதலை நாடு என்று செந்தமிழ்சேர் பன்னிருநிலம் என்ற நாட்டுப் பிரிவினையானது வட்டார அடிப்படையில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில் பின்னர் உரையாசிரியர்கள் ஒரு உயிரினம் அல்லது ஒரு பொருளைக் குறிப்பிடும் பெயரானது நாட்டினுக்கு நாடு வேறுபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று தமிழ்நாட்டினை வட்டார வழக்கு மொழி அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக மொழியியலாளர் பிரிக்கின்றனர். இவ்வாறு பிரிக்கப்படும் பிரிவினை நுட்பமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு பிரிவினுக்குள்ளும் குறைந்தபட்சம் மூன்று பிரிவுகள் இருப்பதனைக் கண்டறிய முடியும். நெல்லை வழக்குத் தமிழுடன் குமரி மாட்டத் தமிழ் வேறுபடுகிறது. குமரி மாவட்டத் தமிழுடன் நாஞ்சில் நாட்டுத் தமிழ் வேறுபடுகிறது. இவ்வாறு பல்வேறு வட்டார வழக்குகள் நிரம்பிய தமிழகத்தினைக் காணமுடிகின்றது. எழுத்து வழக்கென்னும்போது தமிழகமெங்கும் பொதுத் தமிழே வழக்கிலுள்ளது. பேச்சு வழக்கு வட்டாரந்தோறும் மாறுபடும் நிலையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் தனிப்பட்ட சொற்களஞ்சியத்தினைத் தொகுக்க முடியும். இது தவிர, கரிசல் வட்டார வழக்குச் சொற்கள், கொங்கு வட்டாரச் சொற்கள், செட்டிநாட்டு வழக்குச் சொற்கள், நாஞ்சில் நாட்டுச் சொற்கள் என்று ஏதோ ஒரு அடையாளத்தினை முன்னிறுத்தி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியை வட்டாரமாக அடையாளப்படுத்துவது சொற்கள் சார்ந்தது ஆகும். இத்தகைய வட்டாரங்களில் புழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் தொகுக்கப்பட்டு, தனி நூலாக அண்மையில் வெளியாகியுள்ளன. இவை போன்ற நூல்களும் கள ஆய்வின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சேகரிக்கப்படும் சொற்களும் சொல் மூலங்களாக விளங்குகின்றன.

2.3.1 சாதி வழக்குச் சொற்கள்

இந்தியாவில் வாழும் மக்கள் சாதி அடிப்படையில் பிளவுண்டுள்ளனர். ஒவ்வொரு சாதியினரும் தனித்த அடையாளத்தினைப் பின்பற்றுவதில் போட்டியிடுகின்றனர். குறிப்பிட்ட சாதிக்குள் மட்டும் மணஉறவு கொள்வதால், அவர்களிடையே நிலவும் பேச்சு மொழி தனித்து விளங்குகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையாக ஒரே மாவட்டத்தில் வாழும் சாதியினரின் மொழியானது தனிப்பட்ட வழக்குடையது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் கள்ளர் சாதியினரும் குமரி மாவட்டத்தில் நாடார் சாதியினரும், கோவை மாவட்டத்தில் கவுண்டர் சாதியினரும் பெருமளவில் வாழ்கின்றனர். இவர்கள் பல்லாண்டுகளாக ஒரே புவியியல் எல்லைக்குள் வாழ்ந்து வருவதால், இவர்களுடைய மொழியானது தனித்து விளங்குகிறது. உறவுமுறைச் சொற்களில் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு விதத்தினைப் பின்பற்றுகின்றனர். அப்பாவின் அப்பாவை அய்யாப்பா, அப்பச்சி, அய்யா, பாட்டையா, தாத்தா, அப்பப்பா போன்ற சொற்களில் ஏதோ ஒன்றினால் அழைப்பது ஒவ்வொரு சாதியினரிடமும் தனித்துக் காணப்படுகிறது.

பிராமணர்களில் ஐயர் பிரிவினர் ஒரு விதமாகவும், அய்யங்கார் பிரிவினர் வேறு விதமாகவும் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் பிராமணர் பேசும் தமிழ், பொதுவாகப் பிறர் பேசும் தமிழுடன் வேறுபட்டு உள்ளது. இவ்வாறு சாதி அடிப்படையில் தனித்து வழக்கிலிருக்கும் சொற்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை. இத்தகைய சொற்கள் தொகுக்கப்படும்போது, சொல்லாக்க முயற்சிகளுக்கு அவை மூலமாக அமைந்திட வாய்ப்புண்டு.

2.3.2 சமய வழக்குச் சொற்கள்

சமய அடிப்படையிலும் தமிழானது தனித்த அடையாளத்துடன் வழக்கிலுள்ளது. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ வேத மறையான விவிலிய காணப்படும் சமஸ்கிருதம் தழுவிய சொற்கள், இன்றும் கிறிஸ்தவர்களிடையே வழக்கிலுள்ளன. கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக் கூட்டங்களிலும் ஜெபக் கூட்டங்களிலும் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்கள் அவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் இறைவனிடம் அருள் வேண்டி மன்றாடும் பல சொற்கள் இன்று பொதுத் தமிழில் வழக்கிறந்து விட்டன. என்றாலும் அத்தகைய சொற்களுக்கு நிகரான புதிய சொற்களை வழிபாட்டில் பயன்படுத்த அவர்கள் தயாராக இல்லை. விவிலியத்தில் உள்ள சொற்கள் புனிதமாக்கப்பட்டு விட்டன.

இஸ்லாமியர்கள் தொடக்கத்தில் அரபு மொழியின் வழியே இறைவனைத் தொழுது கொண்டிருந்தனர். அண்மைக் காலமாகத் தமிழிலும் வழிபாடு நடத்துகின்றனர். அதற்குத் துணையாக குரானைத் தமிழாக்கியுள்ளனர். எனினும் அரபு மொழியிலுள்ள முக்கியமான சொற்களைத் தமிழுடன் கலந்து எழுதுகின்றனர். அரபுச் சொற்களை இயல்பாகக் கலந்து பேசுகின்றனர்.

இஸ்லாம் கிறித்தவ சமயத்தினர் சமய அடிப்படையில் அவர்களுக்கெனத் தனித்துப் பயன்படுத்தும் சொற்கள் இன்னும் தொகுக்கப்படாமலே உள்ளன. இத்தகைய சொற்கள் சேகரிக்கப்படும்போது, அவை சொல் மூலங்களாக விளங்கும்.

2.3.3 தொழில் வழக்குச் சொற்கள்

ஒருவர் செய்கின்ற தொழில் காரணமாக அவர் தொழில் செய்யும் வட்டாரத்தில் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவது இயல்பாகும். அடிப்படைத் தொழில் நுட்பம் சார்ந்து கைவேலைக்கு முக்கியத்துவம் தரப்படும் மரவேலை, சிற்ப வேலை, இரும்பு வேலை, கொத்து வேலை போன்ற வேலை செய்திடும் தொழிலாளர்கள் தாங்கள் புழங்கிடும் கருவிகள், தொழில்நுட்பம் சார்ந்த வேலையினுக்குத் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துகின்றனர். உழவர்கள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், கோயில் அர்ச்சகர்கள் போன்றோரும் தொழில் அடிப்படையில் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய சொற்கள் உருவாக்கிட வேண்டும்போது, ஏற்கனவே தொழிலாளர்கள் கைவினைஞர்கள் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவது ஏற்புடையது. ஏனெனில் இத்தகைய சொற்கள் ஏற்கனவே தமிழில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கிலிருந்தவை என்பதனால், அவற்றைப் பொதுத் தமிழில் கொண்டு வரும்போது விரைவில் பரவலான ஏற்பு கிடைத்து விடும்.

Screw driver என்ற கருவிக்குத் தமிழில் துறை வல்லுநரால் புரி முடுக்கான் என்ற கலைச்சொல் உருவாக்கப்பட்டது. ஆனால் மரவேலை செய்யும் கைவினைஞர்கள் அதனைத் திருப்பு உளி என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பிட்டு ஆராய்கையில் திருப்பு உளி என்ற சொல் பொருத்தமானது என்ற முடிவுக்கு வரலாம்.

2.3.4 பிற வழக்குச் சொற்கள்

மங்கலம் அல்லாதவற்றை மங்கலமான சொற்களால் குறிப்பிடுவது மங்கல வழக்கு என இலக்கணம் குறிப்பிடுகிறது. அவையில் சொல்லத்தகாத சொற்களை மறைத்து வேறு சொற்களால் நாகரிகமாகக் கூறுதல் இடக்கரடக்கல் எனப்படும். ஒவ்வொரு குழுவில் உள்ளோரும் யாதேனும் ஒரு பொருளினது சொற்குறியை மறைத்து வேறு சொற்குறியால் குறிப்பது குழூஉக்குறி எனப்படும்.

மங்கல வழக்கு, இடக்கரடக்கல், குழூஉக்குறி ஆகிய மூன்று வழக்குகளிலும் சொற்கள் வேறு தளத்தில் புழங்குவதனைக் காணலாம். இத்தகைய சொற்கள் ஒரு வகையில் சொற்களஞ்சியமாக விளங்குகின்றன.