தன் மதிப்பீடு : விடைகள் - II

5)

வட்டார வழக்குச் சொற்கள் சொல் சேகரிப்பு மூலங்களாக விளங்குவதனை விவரிக்க.

மொழியானது மனிதன் வாழுமிடம், தட்பவெப்பநிலை, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இயற்கைச் சூழல், போக்குவரத்துக் காரணமாக ஒரே மொழி பேசும் குழுவினரிடையே மொழியை ஒலிப்பதில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. இதனால் ஒரு மொழியிலிருந்து கிளை மொழிகள் தோன்றுகின்றன. இத்தகைய கிளை மொழிகள் வட்டார வழக்கு என்று அழைக்கப்படுகின்றன. சங்க காலத்திலேயே வட்டார வழக்கு இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. பன்றி நாடு, குட்ட நாடு, குடநாடு, அருவா வடதலை நாடு என்று செந்தமிழ்சேர் பன்னிருநிலம் என்ற நாட்டுப் பிரிவினையானது வட்டார அடிப்படையில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில் பின்னர் உரையாசிரியர்கள் ஒரு உயிரினம் அல்லது ஒரு பொருளைக் குறிப்பிடும் பெயரானது நாட்டினுக்கு நாடு வேறுபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று தமிழ்நாட்டினை வட்டார வழக்கு மொழி அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக மொழியியலாளர் பிரிக்கின்றனர். இவ்வாறு பிரிக்கப்படும் பிரிவினை நுட்பமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு பிரிவினுக்குள்ளும் குறைந்தபட்சம் மூன்று பிரிவுகள் இருப்பதனைக் கண்டறிய முடியும். நெல்லை வழக்குத் தமிழுடன் குமரி மாவட்டத் தமிழ் வேறுபடுகிறது. குமரி மாவட்டத் தமிழுடன் நாஞ்சில் நாட்டுத் தமிழ் வேறுபடுகிறது. இவ்வாறு பல்வேறு வட்டார வழக்குகள் நிரம்பிய தமிழகத்தினைக் காணமுடிகின்றது. எழுத்து வழக்கென்னும்போது தமிழகமெங்கும் பொதுத் தமிழே வழக்கிலுள்ளது. பேச்சு வழக்கு வட்டாரந்தோறும் மாறுபடும் நிலையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் தனிப்பட்ட சொற்களஞ்சியத்தினைத் தொகுக்க முடியும். இது தவிர, கரிசல் வட்டார வழக்குச் சொற்கள், கொங்கு வட்டாரச் சொற்கள், செட்டிநாட்டு வழக்குச் சொற்கள், நாஞ்சில் நாட்டுச் சொற்கள் என்று ஏதோ ஒரு அடையாளத்தினை முன்னிறுத்தி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியை வட்டாரமாக அடையாளப்படுத்துவது சொற்கள் சார்ந்தது ஆகும். இத்தகைய வட்டாரங்களில் புழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் தொகுக்கப்பட்டு, தனி நூலாக அண்மையில் வெளியாகியுள்ளன. இவை போன்ற நூல்களும், கள ஆய்வின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சேகரிக்கப்படும் சொற்களும் சொல் மூலங்களாக விளங்குகின்றன.

முன்