2.0 பாட முன்னுரை

தமிழ் நாட்டில் நிலவும் சைவசமயத்தின் முதன்மை நூல்களைச் சைவத்திருமுறைகள் என்று கூறுவது மரபு. அவற்றைப் பன்னிரண்டாகப் பகுத்துள்ளனர். சைவ சமயம் சார்ந்து எழுந்த இலக்கியப் பரப்பை அறிமுகப்படுத்தும் முந்தைய பாடத்தில் பழந்தமிழ் நூல்களில் காணப்படும் சைவம் தொடர்பான செய்திகள் திரட்டி வழங்கப்பட்டன. சைவத் திருமுறைகள் என்ற இவ்விரண்டாம் பாடத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சைவ சமய இலக்கியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருமுறைப்பகுப்பு, பகுப்பில் இடம் பெற்றுள்ள சைவ நூல்கள் - அவற்றின் ஆசிரியர்கள்- நூல் எழுந்த காலம் - நூலின் அமைப்பு - உள்ளீடு - இலக்கிய வரலாற்றில் அந்நூல்கள் வகிக்கும் இடம் - சைவ சமய வளர்ச்சியில் அவற்றின் பங்கு முதலியன இனங்காட்டப்பட்டுள்ளன. தேவாரம் மற்றும் திருவாசகம் மூன்றாவது பாடத்திலும், பெரியபுராணம் நான்காவது பாடத்திலும் விரிவாக அறிமுகம் செய்யப்படுவதால் எஞ்சிய திருமுறைகளும் அவற்றில் இடம்பெற்றுள்ள நூல்களும் இப்பாடத்தில் முறையாக விளக்கி உரைக்கப்பட்டுள்ளன.