பதினொராம் திருமுறை பன்னிரு ஆசிரியர்களால்
பாடப்பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. இதில் தேவார
ஆசிரியர்கள் காலத்துக்கு முற்பட்ட நூல்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம்
திருமுறையில் முருகனைப் பற்றிய பதிகம் இணைக்கப்பட்டிருப்பதைப்போல், விநாயகர்
வழிபாட்டு நூல்கள் சில இத்திருமுறையில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சைவ அடியவர்களாகிய
கண்ணப்பர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர்மீது பாடப்பட்ட பதிகங்களும்,
சிற்றிலக்கியங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சிவன் சிறப்புரைக்கும்
திருமுறைகள் பதினொன்றாகத் தொகுக்கப்பட்டன.
பதினொராம் திருமுறையில் சைவ அடியவர்கள் குறித்த இலக்கியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அடியார் சிறப்புரைக்கும் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுக்
கொள்ளப்பட்டது. இதற்கு, பதினொராம் திருமுறைத் தொகுப்பும் ஒரு காரணமாக அமைந்தது.
2.5.1 திருமுகப்பாசுரம்
பதினொராம் திருமுறையில் முதலாவதாக இடம் பெற்றிருப்பது 'மதிமலிபுரிசை
மாடக்கூடல்’ என்று தொடங்கும் ஒரு சீட்டுக்கவி பாடலாகும். சீட்டுக்கவி என்பது
ஒருவர் மற்றவருக்கு வழங்கும் அறிமுகக் கடிதம் ஆகும். இதனைத் திருமுகப்பாசுரம்
என்று கூறுதல் வழக்கு. மதுரையில் வாழ்ந்த பாணபத்திரன் என்பவரை ஆதரிக்குமாறு
சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிக்
கொடுத்த பரிந்துரைக் கடிதமாக இது அமைந்துள்ளது.
2.5.2 காரைக்கால் அம்மையார்
பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள
பனுவல்கள் காரைக்கால் அம்மையார் அருளியன. இவரது
நான்கு பனுவல்கள் இத்தொகுப்பில் உள்ளன.
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
- மூத்த திருப்பதிகம்
- திருவிரட்டை மணிமாலை
- அற்புதத் திருவந்தாதி
|
காரைக்கால் அம்மையார்
|
என்பன அவை. அம்மையாரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்
திருத்தொண்டத்தொகையுள் ‘பேயார்’ என்று குறித்துள்ளார்.
இவர் அருள் வரலாறு
பெரியபுராணத்துள்
விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானால் ‘அம்மையே’என்று அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர். யாது வேண்டும்
என்று சிவன் வினவியபோது அம்மையார்
உரைத்த
மறுமொழிகள் பெரிதும் சிறப்புடையன.
|
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது
அடியின்கீழ் இருக்க என்றார் |
 |
(பெரியபுராணம் - 1781)
|
திருஞானசம்பந்தர், அம்மையார் பிறந்த காரைக்கால் மண்ணைக்
காலால் மிதிக்கவும் அஞ்சியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
2.5.3.
மூத்த திருப்பதிகங்கள்
காரைக்கால் அம்மையார் பனுவல்களில் வடதிருஆலங்காட்டு
இறைவன் மேல் பாடப்பெற்ற ‘கொங்கை திரங்கி' -
எனத்
தொடங்கும் நட்டபாடைப்பண் அமைந்த பதிகமும், ‘எட்டி
இலவம்’ எனத் தொடங்கும் இந்தளப்பண் அமைந்த பதிகமும்
மூத்த திருப்பதிகங்கள் எனப் போற்றப்படுகின்றன. சிவனைப்
பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதியால் தேவார ஆசிரியர்கள்
மூவரும் பாடினர். இவற்றைத் தேவாரப் பதிகங்கள் என்பர்.
இவற்றுக்குக் காலத்தால் முற்பட்டன காரைக்கால் அம்மையார்
பதிகங்கள். எனவே, இவரது பாடல் தொகுதியை
மூத்த
திருப்பதிகங்கள் என்று குறித்துள்ளனர். சமயத்துறையில் பண்
ஒன்றிய பாடல்களாகத் தோன்றியன இப்பதிகங்களேயாகும்.
‘கொங்கை திரங்கி’ என்று தொடங்கும் அம்மையாரின்
பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், சப்தஸ்வரங்கள் எனக்
கூறப்படும் ஏழு ஓசைகளுக்கும் தமிழில்
பெயர்
சூட்டப்பட்டுள்ளன. ‘துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை,
இளி, ஓசை, பண் கெழுமப்பாடி’ என்பது அப்பாடல் பகுதி.
பொருள்
விளக்கம் : |
பண் ஒன்றிய பாடல்கள் என்பன, இசை மற்றும் தாளக்கட்டமைப்புடன் பாடப்பெற்ற
இசைப் பாடல்களாகும்.
|
2.5.4 மணிமாலை -
அந்தாதி
இரட்டை மணிமாலை என்பது கட்டளைக் கலித்துறையும்
வெண்பாவும் அடுத்தடுத்து அமைய 20 செய்யுள்களால்
அந்தாதித்தொடை அமையப் பாடப்படுவது. அம்மையாரின்
திருவிரட்டை மணிமாலை இவ்வகையில் அமைந்த முதல்
நூலாகும். இதனை, ‘ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி’என்று சேக்கிழார் குறிக்கிறார். கட்டளைக் கலித்துறை என்ற
புதிய யாப்பும் இந்நூலிலேயே முதன்
முதல்
கையாளப்பட்டுள்ளது. அம்மையார் பேய்வடிவம் வேண்டிப்
பெற்ற போது பாடிய பனுவல் தொகுதியே
அற்புதத்
திருவந்தாதி எனப்படுகிறது. இந்நூல் வெண்பா
யாப்பில்
அந்தாதித் தொடை அமைய
101 பாடல்களால்
பாடப்பட்டுள்ளது. பக்திக் கனிவும், சிவனின் அளப்பரும்
கருணையும் இந்நூலுள் பெரிதும் பேசப்பட்டுள்ளன.
அம்மையாரின் பக்திச் சிறப்பை,
இடர்களையா ரேனும்
எமக்குஇரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில்
என்பு அறாக் கோலத்து எரியாடும் எம்மனார்க்கு
அன்பு அறாது என்நெஞ்சு அவர்க்கு |
 |
(அற்புதத்திருவந்தாதி
-2) |
என்ற அரிய பாடல் எடுத்துக்காட்டுகின்றது. மேற்கூறிய
பாடலின் பொருளாவது; நம் துன்பங்களை நீக்காவிட்டாலும்
நமக்கு இரக்கம் காட்டாவிட்டாலும், செல்ல வேண்டிய நெறி
இதுவென்று கூறாவிட்டாலும் கூட, தீ வடிவில்
எலும்பு
அணிந்து ஆடும் இறைவனிடம் கொண்டுள்ள அன்பை என்
நெஞ்சம் மறக்காது. அம்மையாரின் வாழ்வும்
வாக்கும்
பின்வந்த நூலாசிரியர்களால் பலபடப் பாராட்டப்பட்டுள்ளன.
2.5.5 க்ஷேத்திரத்
திருவெண்பா
ஐயடிகள் காடவர்கோன் என்பவரால் பாடப்பெற்ற சிறு நூல்
க்ஷேத்திரத் திருவெண்பா என்பது. 24 வெண்பாக்களைக்
கொண்டுள்ள இந்நூல் சிவத்தலம் ஒவ்வொன்றின் சிறப்பு
உரைத்து அமைந்துள்ளது. பல பாடல்கள் நிலையாமைக்
குறிப்பு அமையப் பாடப்பட்டுள்ளன.
தொட்டுத் தடவித்துடிப் பொன்றும்
காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழை மடநெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை |
 |
(க்ஷேத்திரத் திருவெண்பர்)
|
திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள தேவாரப் பாடல்பெற்ற
திருநெடுங்களம் குறித்து இப்பாடல் எழுந்துள்ளது.
2.5.6
சேரமான் பெருமாள் நாயனார்
பெரியபுராண அடியவர்களில் ஒருவரும், சேரமன்னரும்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பருமான சேரமான் பெருமாள்
பாடிய மூன்று பனுவல்கள் அடுத்துப்
பதினொராம்
திருமுறையுள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை
- பொன் வண்ணத்து அந்தாதி
- திருவாரூர் மும்மணிக்கோவை
- திருக்கயிலாய ஞான உலா
|
திருவாரூர்
|
 |
என்பன. இவற்றுள் பொன்வண்ணத் தந்தாதி தில்லையில் பாடப்
பெற்றது. கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தது. 100
பாடல்களைக் கொண்டது. இந்நூலின்
முதற்பாடல்
‘பொன்வண்ணம்’ என்று தொடங்குவதால் இந்நூல் இப்பெயர்
பெற்றது. ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை
யாப்பிலமைந்த பாடல்கள் அடுத்தடுத்து வர 30 பாடல்களால்
திருவாரூர் இறைவன் மீது பாடப்பட்ட முதல் நூல் திருவாரூர்
மும்மணிக்கோவை. தமிழில் எழுந்த முதல் உலா இலக்கியம்
திருக்கயிலாய ஞான உலா ஆகும். இந்நூல் கயிலையில் சிவன்
முன்பு அரங்கேற்றப்பட்டதாகச் சேக்கிழார் குறித்துள்ளார்.
இந்நூலில் திருக்குறளும், குறள்
கருத்துக்களும்
எடுத்தாளப்பட்டுள்ளன.
இல்லாரை
எல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும்
செய்வர் சிறப்பு என்னும் - சொல்லாலே அல்குற்கு
மேகலையைச் சூழ்ந்தாள் |
(திருக்கயிலாய
ஞானஉலா) |
என்ற பகுதி நோக்கத்தக்கது. அன்பர்களே,
இதில்
குறிக்கப்படும் குறளினை இனம் காண முடிகிறதா?
2.5.7
நக்கீர தேவ நாயனார்
அடுத்து, நக்கீர தேவ நாயனார் என்பவர் பாடிய ஒன்பது சிறு
நூல்கள் இத்திருமுறையுள் இடம்பெற்றுள்ளன.
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
திரு ஈங்கோய்மலை எழுபது
திருவெழு கூற்றிருக்கை
பெருந்தேவபாணி
கோபப்பிரசாதம்
காரெட்டு
போற்றித் திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
என்பன அவை. இவரைச் சங்ககால நக்கீரர் என்றும் பின்வந்த
வேறு ஒருவர் என்றும் ஆராய்ச்சியாளர்
மாறுபட்டு
உரைக்கின்றனர். சங்க இலக்கியங்களுள்
ஒன்றாகிய
திருமுருகாற்றுப்படை இத்தொகுதியுள் இடம் பெற்றுள்ளது.
இந்நூல் பற்றிய செய்திகள் முன்னரே உரைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 158 அடிகளை
உடையது.
நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப
என்
அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப
|
 |
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
: 147-148 |
என்ற அழகிய வரலாற்று வரிகள் இந்நூலுள்ளும் இடம்
பெற்றுள்ளன. ஏனைய நூல்கள் சிவன் பெருமை பேசும்
சிற்றிலக்கிய வகையில் அமைந்தன. அடுத்துக் கல்லாடர்
என்பவரால் பாடப்பெற்ற 38 அடிகளை உடைய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்ற அதே பெயரை
உடைய சிற்றிலக்கியம் ஒன்றும் இத்திருமுறையுள்
இடம்
பெற்றுள்ளது.
2.5.8 மூத்த நாயனார்
கபிலதேவர் என்பவர் பாடிய மூத்த நாயனார் திருவிரட்டை
மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை,
சிவபெருமான் திருவந்தாதி என்ற மூன்று
நூல்கள்
பதினொராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
திருமுறைகளுள் இடம்பெற்றுள்ள விநாயகர் குறித்த முதற்
சிற்றிலக்கியம் மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை.
திருஆக்கும் செய்கருமம் கைகூட்டும்
செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை |
(மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை) |
என்ற விநாயகர் வணக்கப்பாடல் சைவப்பெருமக்களுக்கு
நன்கு அறிமுகமான ஒன்று. இவ்வாறே பரணர் என்பவரால்
101 பாடல்களில் பாடப்பெற்ற சிவபெருமான் திருவந்தாதி
என்ற நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து இளம்பெருமானடிகள் பாடிய சிவபெருமான் திருமும்மணிக்கோவை
என்ற நூலும், அதிராவடிகள் பாடிய மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையும்
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பிள்ளையார் என்ற சொல் ஒருகாலத்தில் முருகனைக்
குறித்து வழங்கப்பட்டது. எனவே, விநாயகர் மூத்த பிள்ளையார்
என்று அழைக்கப்பட்டுள்ளார்
என்று அறியமுடிகிறது.
2.5.9 பட்டினத்தடிகள்
அடுத்து, பட்டினத்தடிகள் பாடிய ஐந்து நூல்கள்
இத்திருமுறையுள் இணைக்கப்பட்டுள்ளன. அவை
|
- கோயில்நான் மணிமாலை
- திருக்கழுமல மும்மணிக்கோவை
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
- திருவேகம்பமுடையார் திருவந்தாதி
- திருவொற்றியூர் ஒருபாஒருபஃது
என்பன. இவற்றுள் கழுமலம் என்பது சீர்காழித் தலத்தைக்குறிப்பது.
உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தமையும், அவர் ‘தோடுடைய
செவியன்’ |

|
என்று தொடங்கித் தேவாரப் பாடல்கள் பாடிய திறத்தையும்
இந்நூல் அழகுற எடுத்துரைக்கிறது. பட்டினத்தார் பாடியனவாகத் தனிப்பாடல்கள்
சிலவும் உள்ளன. சித்தர் பாடல்கள் தொகுப்பிலும் பட்டினத்தார் பாடல்கள் பல
இடம் பெற்றுள்ளன. எனவே பட்டினத்தார் என்ற பெயரில் இரு பெரியவர்கள் வெவ்வேறு
காலப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம். இவர் நூல்களில் இறைவன் அருள்செயலும்,
தமிழர் பண்பாடும் பதிவு செய்யப்பெற்றுள்ளன. |