4.5 வரலாற்றுக் காப்பியம்

தமிழ் மொழியில் அமைந்த பிற புராணங்கள் பலவும் வரலாற்று நோக்கில் அமைந்தன அன்று; சேக்கிழார் வரலாற்றுத் தரவுகளை நாடு முழுதும் சென்று நேரில் கண்டு, திரட்டி முறைப்படுத்திக் கொண்டு, இந்நூலை ஒரு


பொன் விமானம்
வரலாற்றுப் பெருங்காப்பியமாகவே படைத்துள்ளார்.

இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள் யாவும் அவரால் உற்று நோக்கி அறியப்பட்டுள்ளன. நன்கு அறிந்து தெளிந்த உண்மைகளை மட்டுமே இவர் பதிவு செய்கிறார். கற்பனைப் பதிவுகளில் இவருக்கு நாட்டம் இருக்கவில்லை. பூகோள அறிவும், காலக்கணக்குகளும், நில இயல்புகளும் இயற்கை அமைப்புகளும் மிகத் துல்லியமாக இந்நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பெரியபுராணத்தை ஒரு வரலாற்றுக் காப்பியமாகக் கொள்ள முடிகிறது.

வரலாற்றுக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சேக்கிழார் இந்நூலுள் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளவாறு பதிவு செய்துள்ளார்.

1. ஆதித்த சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தமை.
2. இமயமலையில் சோழன் புலி இலச்சினை பொறித்தமை.
3. ஒரு காலத்தில் பெண்ணை ஆறு துறையூரின் தெற்கில் ஓடியது.
4. காஞ்சிபுரத்தைக் கரிகால் பெருவளத்தான் புதுக்கியது.
5. அகத்தியர் காவிரியை வரவழைத்தது.
6. இலக்குமி திருவாரூரில் வழிபட்டது,
7. உபமன்யு முனிவர் கண்ணனுக்குச் சிவ தீட்சை செய்வித்தது
8. உமை அம்மை காஞ்சிபுரத்தில் சிவ பூஜை செய்தது
9. உமையம்மை காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது.
10. சிவபூஜை செய்து பரசுராமன் ‘பரசு’ என்ற ஆயுதம் பெற்றது.

இவ்வாறாக வரலாற்றுப் பதிவுகள் மேலும் பல பெரியபுராணத்துள் இடம் பெற்றுள்ளன.