4.6 காப்பிய எழில் - உவமை அழகு
 
ஒரு பெருங்காப்பியத்திற்கு, கற்பனை, வருணனை, உவமை முதலிய அணிகள் மேலும் அழகு சேர்ப்பன. பக்திக் காப்பியம் என்பதால் சேக்கிழார் உவமைகளில் எல்லாம் பக்தி மணம் கமழக் காண்கிறோம். வஞ்சகத்தை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, பொய் வேடம் தரித்து வந்தவனை,

மைபொதி விளக்கே என்ன
     மனத்தினுள் கருப்பு வைத்து
(473)


வந்ததாகப் பாடுகிறார் சேக்கிழார். இறைவனைக் கண்ட கண்ணப்பர் அவரை விட்டு நீங்காத தன்மையை

வங்கினைப் பற்றிப் போகா
     வல் உடும்பு என்ன நீங்கான்
(765)

(வங்கு = பொந்து)

என உடுப்பின் தன்மையாக ஒப்புமை காட்டுகிறார். இவ்வாறான உலகியல் கலந்த உவமைகள் பல இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.