4.8 தொகுப்புரை பெரியபுராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த போதும், அது தனித்தன்மை உடையது என்பது இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டது. இறைவனுக்கு இணையாக இறையருள் பெற்று மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும் போற்றவும் வணங்கவும் பட வேண்டும் என்பதைப் பெரியபுராணம் வற்புறுத்துகிறது. சாதிகளால் பிரிவுண்டு பிளவுபட்டு நின்ற மனித குலத்தை, ஒரு சமயத்தை மையப்படுத்தி ஒன்று படுத்த இயலும் என்பதைப் பெரியபுராணம் காட்டுகிறது. முடியாட்சிக்கு எதிரான தனிமனித உரிமைப் போராட்டத்திற்கும் இங்கே கால்கோள் விழா நடத்தப்பட்டுள்ளது. பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் உள்ளார்ந்த முயற்சியில் சேக்கிழார் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள், தெய்வங்களோடு திருக்கோயிலுக்குள் திருவுருவமாக எழுந்தருளிப் பெருமை பெற இயலும் என்பதை இந்நூல் துணிவுடன் பறைசாற்றுகிறது. தமிழர் வாழ்வில் இந்நூல் ஏற்படுத்தியிருக்கும் பெரும்தாக்கம் நீள நினைந்து போற்றப்பட வேண்டியது. |