5.4 அருணகிரிநாதரின் நூல்களுள் சில
 
தனி நூல்களுள் முதலாவது திருவகுப்பு. இதன் கண் சீர்பாத வகுப்பு முதலாகத் திருப்பரங்கிரி ஈறாக 25 பகுப்புகளில் நீண்ட பல சீர்கள் கொண்ட 25 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவதாகிய கந்தர் அந்தாதியில் காப்புப் பாடல்கள் இரண்டும், கட்டளைக் கலித்துறைகள் ஒரு நூறும் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது கந்தர் அலங்காரம். சிறந்த பாராயண நூல் இது. நூறு பாடல்கள் உள்ளன. முதற்கண் காப்புச் செய்யுள் ஒன்றும், நிறைவில் நூற் பயன் கூறும் ஏழு பாடல்களும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. நம் நிழலில் நாம் ஒதுங்க இயலாது. அதுபோல் நாம் ஈட்டிய செல்வம் நமக்கு உதவாது. இதனை உணர்ந்து ஈட்டிய பொருளை வறுமை உடையவர்களுக்கு வழங்குங்கள் என்று அருணகிரிநாதர் வற்புறுத்துகிறார்.

 

  வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி
    வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவளவேனும் பகிர்மின்கள்
    உங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின்
    வெறு நிழல் போல்
கையில் பொருளும் உதவாது காணும்
    கடைவழிக்கே
( கந்தர் அலங்காரம் - 18)

(வை = கூர்மை, வறிஞர் = ஏழைகள், பிளவு = பாதி, கடைவழி = இறுதிக்காலம்)

கந்தர் அனுபூதி

நான்காவதாக அமைவது 51 விருத்தப்பாக்களால் இயன்ற கந்தர் அனுபூதி. முதற்கண் தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. சித்தாந்தக் கருத்துகள் நிறைந்த இந்நூலும் ஒரு சிறந்த பாராயண நூலாகும். இந்நூலின் பெருஞ் சிறப்பைப் பின் வந்த தாயுமானார்

  கந்தர் அனுபூதி பெற்றுக் கந்தர் அனுபூதி சொன்ன
எந்தை அருள் நாடிஇருக்கும்
நாள் எந்நாளோ?
(தாயுமானவர் பாடல்கள் - 1114)

எனப் பேசி வணக்கம் செய்கிறார். இந்நூலில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அறம் உரைப்பனவாகவும், முருகன் அருள் வேண்டலாகவும் அமைந்துள்ளன.

 

  கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே
(கந்தர் அனுபூதி-7 )

(கதி = நல்வழி, கரவாது = இல்லை என்று மறைக்காது, வடிவேல் இறை = முருகன், நெடுவேதனை = முன்னைவினை)

 

அருணகிரிநாதரின் தனிச் சிற்றிலக்கியங்களில் ஐந்தாவதாகிய வேல் விருத்தம் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள் 10 கொண்டு அமைகிறது.

முருகனின் கை வேலின் புகழ் கூறுவது இந்நூல், ஆறாவதாகிய மயில் விருத்தம் விநாயகர் காப்பு ஒன்றும், 11 ஆசிரிய விருத்தங்களும் கொண்டுள்ளது. முருகன் ஏறிவரும் மயிலின் அழகும் ஆற்றலும் கூறுவன இந்நூல் பாடல்கள். ஏழாவது சேவல் விருத்தம். இதிலும் விநாயகர் காப்பு ஒன்றும் 11 ஆசிரிய விருத்தங்களும் இடம் பெற்றுள்ளன. முருகன் கொடியில் இடம் பெற்றிருக்கும் சேவலின் முன்னை வரலாறு கந்தபுராணத்துள்ளும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. சேவலின் திறம் உரைப்பது இச்சிறு நூல். நிறைவாக திரு ஏரகம் எனப்படும் சுவாமிமலைத் தலத்து முருகனைப் போற்றுவது ‘திரு வெழு கூற்றிருக்கை’ என்ற எண் அலங்காரப் பாடல். இப்பாடல் ஒன்றை மட்டும் பாராயணம் செய்தால் ஏனைய திருப்புகழ்ப் பாக்கள் அனைத்தையும் பாராயணம் செய்த பலன் கிட்டும் என்பது முருகன் அடியவர்கள் நம்பிக்கை.