6.5 தணிகைப் புராணம்: கச்சியப்ப முனிவர்

 
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களில் பாடப்பெற்ற சிவ தலபுராணங்களைப் போல், முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் முருகத் தலங்கள் மீதும் சில தலபுராணங்கள் பாடப் பெற்றுள்ளன. அவற்றுள் சிறந்ததும், இலக்கியச் செறிவு மிக்கதும், புலவோர்க்கு இன்பம் தருவதுமாகிய ஒன்று தணிகைப்புராணம் என்பது. இதன் ஆசிரியர் ‘கவிராட்சசர்’என்று அழைக்கப்படும் கச்சியப்ப முனிவர் என்பவர்.

இவர் தொண்டை நன்னாட்டுத் திருத்தணிகையில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் துறவு மேற்கொண்டார். மாதவச் சிவஞான சுவாமிகளின் மாணவர், விரைந்து கவிபாடும் வல்லமை மிக்கவர். திருவானைக்காப் புராணம், பேரூர்ப் புராணம், திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி, விநாயகபுராணம், சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ், காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம், கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடுதூது, பதிற்றுப் பத்தந்தாதி, பஞ்சாக்கர தேசிகரந்தாதி முதலிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன. இவர் காஞ்சிபுரத்தில் கி.பி. 1790 இல் மறைந்தார். பிற்காலத்தில் சிறந்த இயற்றமிழ் ஆசிரியர்களாக விளங்கிய விசாகப் பெருமாள் அய்யர், சரவணப் பெருமாள் அய்யர் ஆகியோரின் தந்தை கந்தப்பையர், கச்சியப்ப முனிவரின் தலை மாணாக்கருள் ஒருவர்.

6.5.1 புராண அமைப்பு

கந்தபுராணத்திற்கு நிகராகக் கற்றவர்களால் போற்றப்படும் தணிகைப் புராணம் 3161 செய்யுட்களைக் கொண்டுள்ளது. சிவன் மற்றும் முருகன் பெருமை பேசுவது. இந்நூலுள் திருத்தணிகை பல பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சில வருமாறு; சீபூரணகிரி, கணிக வெற்பு, மூலாத்திரி, கற்பசித்து, தணிகை, பிரணவார்த்த மாநகரம், இந்திர நகர், நாரதப்பிரியம். இத்தலத்து எழுந்தருளியுள்ள ஆபற்சகாய விநாயகர், வீராட்ட காசம் சிவலிங்கம், குமாரலிங்கம், பிரம தேவர் வழிபட்ட லிங்கம், அகத்தியலிங்கம், இந்திரன், திருமால், ஆதி சேடன், இராமன், நாரதர் முதலியோர் வழிபட்ட லிங்கம் முதலிய தெய்வங்களை ஆசிரியர் இந்நூலுள் போற்றிப்பாடியுள்ளார். 64 சிவத்தலங்கள் இவை எனத் தணிகைப்புராணம் இனங்காட்டுகிறது. இவற்றைப் போல் முருகத் தலங்கள் 64 ம் குறிக்கப்பட்டுள்ளன. அரிய துதிப்பாடல்கள் ஏராளம் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. சைவ சித்தாந்தக் கருத்துகள் இடையிடையே பேசப்பட்டுள்ளன. சங்க இலக்கியச் செய்திகளும், திருக்குறட் கருத்துகளும் ஆசிரியரால் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

6.5.2 நாட்டு - நகரப் படலங்கள்

திருநாட்டுப் படலத்துள் தொண்டை நன்னாட்டைக் கச்சியப்ப முனிவர் பல அரிய தொடர்களால் புகழ்ந்து போற்றியுள்ளார். எடுத்துக்காட்டாக ‘திருவினர் தக்கோர் சாலச் செறிந்தது தொண்டை நாடு’ (4). தொண்டை நாட்டின் வளத்திற்குக் காரணமான ‘பாலி’ என்ற பெயருடைய பாலாற்றையும் சிறப்பிக்கின்றார்.

சிவந்த பொருள்களோடு தோய்ந்து பாலாறு செந்நிறம் பெற்றுப் பாய்வது சிவந்த நிறமுடைய செவ்வேள் நிறத்தை நினைவூட்டுவதாகப் பாடுகிறார். நகரப் படலத்துள் திருத்தணிகைச் சிறப்புகள் பலபடப் பேசப்பட்டுள்ளன.

 

பொருவில் வள்ளியோடு
ஆடிடமாகிய புகழ்த்தணிகை
(திருநகரப்படலம் - 1)

என்றும், தணிகை மலையை,

ஆறுமுகன் அரசாளும்
நங்கள் காவியங்கிரி
(திருநகரப்படலம் - 4)


என்றும் புகழ்ந்து போற்றுகின்றார்.

• களவுப்படலம்

தணிகைப் புராணத்துள் அமைந்துள்ள களவுப்படலம், ஒரு நூலுக்குள் அமைந்துள்ள ஒரு அகப்பொருள் கோவை இலக்கியமாக அமைக்கப்பட்டுள்ளது. கோவைத் துறைகள் பலவும் இப்பகுதியில் எடுத்தாளப் பட்டுள்ளன. வள்ளி நாயகி திருமணப் படலம் கந்த புராணத்துள் இடம் பெற்றுள்ள வள்ளியம்மை திருமணப் படலத்தைப் பெரிதும் ஒத்தும், சிறிது வேறுபட்டும் அமைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளும் சடங்குகளும் இப்பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. நிறைவாக வாழ்த்து ஒன்றும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளது.