2.1. நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதம் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.

இறைவனின் பெருமையை நயமுற அழகாக - செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

2.1.1 ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் திருமாலின் பக்தியில் - அன்பில் - அருளில் - தோற்றத்தில் ஆழ்ந்தவர்கள் எனலாம். ஆழ்வார்கள் என்பது காரணப் பெயராகவும் அவர்கள் தொழிலால் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். திவ்வியப் பிரபந்தத்தைப் பாடி அருளியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்களை ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும் வழங்குவர். அந்தப் பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைப் பார்ப்போமா?

1.

பொய்கை ஆழ்வார்

2.

பூதத்தாழ்வார்

3.

பேயாழ்வார்

4.

திருமழிசை ஆழ்வார்

5.

மதுரகவி ஆழ்வார்

6.

நம்மாழ்வார்

7.

குலசேகர ஆழ்வார்

8.

பெரியாழ்வார்

9.

ஆண்டாள்

10.

தொண்டரடிப் பொடி ஆழ்வார்

11.

திருப்பாணாழ்வார்

12.

திருமங்கை ஆழ்வார்


• நாலாயிரம் + திவ்வியம் + பிரபந்தம்

நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். திவ்வியம் என்பது இறைவனைப் பற்றியது, அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது எனப் பொருளின் தன்மை கருதி இனிமை என்னும் பொருளைத் தரும்.

பிரபந்தம் என்பது தொகுப்பு என்றும், தனி நூல் என்றும் பொருள் தரும். தமிழில் பிரபந்தம் என்பதை இரண்டு பொருளிலும் பயன்படுத்தி உள்ளனர். எனவே திவ்வியப்பிரபந்தம் என்பதை,

(அ)

தெய்வத்தைப் பற்றிய அல்லது தெய்வீக நூல்களின் தொகுப்பு.

(ஆ)

தெய்வத்தைப் பற்றிய நூல் அல்லது தெய்வீக நூல் என்றும் பொருள் கொள்ளலாம்.

பிரபந்தங்கள் என்ற சொல்லைச் சிற்றிலக்கியம் என்னும் பொருளில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு சிற்றிலக்கியத்தையும் ஒரு தனி நூலாகக் கொண்டனர். (காட்டாக, உலாப் பிரபந்தம்) எனவே தான் சிற்றிலக்கியங்களின் வகையை 96 வகைப் பிரபந்தம் என்று அழைத்தனர்.

ஆக, பிரபந்தம் என்னும் சொல் தொகுப்பு, தனி நூல், சிற்றிலக்கியம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதைத் தமிழ் இலக்கிய வரலாறு காட்டுகின்றது.

2.1.2 தொகுப்பு

கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இயக்கக் காலமாகும். வைதிக மதத்தை மன்னர்கள் போற்றத் தலைப்பட்டனர். வைதிக மதம் என்பது சைவ வைணவ மதங்களாகும். சோழன் இராசராசன், நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளைத் தொகுத்துத் தந்தான். அது போலவே வைணவப் பாசுரங்களை 10-ஆம் நூற்றாண்டில் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்து அருளினார்.

புறச் சமயத் தாக்குதல்களில் இருந்து விடுபட்ட சைவ வைணவம் சார்ந்த வைதிக சமயத்தார் தத்தம் கடவுளர்கள் தாம் முழுமுதல் கடவுள் என நிறுவத் தலைப்பட்டனர். இதன் விளைவு பயன் உரைக்கும் பாசுரங்கள் முகிழ்த்தன.

திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் அமைந்த இறுதிப் பாடல்கள் இதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன.

திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களில் சமணம், பௌத்தம் போன்ற மதம் சார்ந்தவர்களைப் பழிக்கும் அடிகளும் இடம் பெற்றன.

பின் வந்தோர் திருமால் அவதாரத்தைக் காப்பிய நாயகனாகக் கொண்டு காப்பியங்களும் பிற சிற்றிலக்கிய வகை சார்ந்த நூல்களும் இயற்ற நாலாயிரத்தின் செல்வாக்கே காரணம் எனலாம்.

2.1.3 தொகுப்பு முறை

ஆழ்வார்களின் அருளிச் செயல்களை நாதமுனிகள்

1.

முதலாயிரம்

2.

திருமொழி

3.

திருவாய்மொழி

4.

இயற்பா

என நால் வகையாகப் பகுத்துள்ளார். இந்த வகைப்பாடு பற்றி அறிஞர்களிடையே பல கருத்துகள் உண்டு.

2.1.4 ஆழ்வாரும் பாசுரங்களும்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை தெளிவிற்காகக் கீழே கொடுக்கப்படுகின்றது.

1.

பொய்கை ஆழ்வார்

100
2.

பூதத்தாழ்வார்

100
3.

பேயாழ்வார்

100
4.

திருமழிசை ஆழ்வார்

216
5.

மதுரகவி ஆழ்வார்

11
6.

நம்மாழ்வார்

1296
7.

குலசேகர ஆழ்வார்

105
8.

பெரியாழ்வார்

473
9.

ஆண்டாள்

173
10.

தொண்டரடிப் பொடி ஆழ்வார்

55
11.

திருப்பாணாழ்வார்

10
12.

திருமங்கை ஆழ்வார்

1137

_____

3776

_____

மேற்காட்டிய பாசுரங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

• எண்ணிக்கை

ஆழ்வார்களின் பாசுரங்கள் 3776. எனவே 224 பாசுரங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை நாலாயிரம் எனக் கொள்வர்.

ஒரு சிலர் திருவரங்கத்தமுதனார் இயற்றிய பிரபந்த காயத்ரி எனப்படும்  இராமானுசரின் வரலாற்றைக் கூறும் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து 4000 எனக் கணக்கிடுவர்.