2.6 தொகுப்புரை

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் வைணவர்களின் வேதம் என்பதையும் அவற்றைப் பாடியருளியவர்கள் பன்னிருவர் என்பதையும் இப்பாடத்தில் பார்த்தோம். பன்னிருவர் யார் யார் என்பதையும் அவர்கள் அருளிச் செய்த பாசுரங்கள், அவற்றின் பெயர், எண்ணிக்கை ஆகியவற்றையும் விரிவாகப் பார்த்தோம். திவ்வியப் பிரபந்தத்திற்கு உரைகண்ட சான்றோர்களையும் அவர்களது உரைகளின் பெயர்களையும் அறிந்து கொண்டோம். சைவத்திற்கு அடியார்கள் போன்று வைணவத்திற்கு ஆழ்வார்கள் பக்தி இயக்கக் காலத்தில் பாசுரங்களை அருளிச் செய்து தொண்டாற்றினார்கள் என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அனைவருக்கும் புரியும்படி உரை எழுதிய வைணவச் சான்றோர்கள் பற்றிய குறிப்பையும் இப்பாடத்தின் வழி அறிந்திருப்பீர்கள் இல்லையா?

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் வைணவர்கள் - ஆழ்வார்கள் எழுப்பிய பக்தி மாளிகை, அவற்றின் தூண்கள் பன்னிரு ஆழ்வார்கள். அதை மேலும் அலங்கரித்தவர்கள் வைணவத் தொண்டர்கள்.

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் ஞானத் தேனீக்கள் கட்டிய தேன்கூடு; இசைக் களஞ்சியம்; வரலாற்றுப் பெட்டகம், கோயில்களின் பண்ணை.

மா, பலா, வாழை ஆகிய முக்கனி போல, பொருள், இசை, நடை ஆகிய மூன்றும் இணைந்து பக்திச் சுவைக்குச் சுவை சேர்க்கின்றது. பக்தியில் ஈடுபடும் ஆன்மாவுக்கு அறுசுவை உணவை வழங்கும் அற்புதமான அமுதகலசம்.

திவ்வியப்பிரபந்தம் பக்தனுக்குக் காமதேனு; பாமரனுக்குக் கற்பக மரம்; பிறவியைக் கடப்பவனுக்கு ஒரு பாய்மரம் அல்லது தோணி; ஞானத் தமிழில் எழுதிய ஞானக் களஞ்சியம்; ஞானப் பேழை.

திவ்வியப்பிரபந்தம் திருமாலைப் பற்றிய பாசுரங்கள் மட்டுமல்ல; படிப்பவரையும் பக்தனாக மாற்றும் ஆற்றலுடைய ஞானப் பழங்கள்.

திருமால் திருப்பாற் கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டதாகக் காட்டுவர்; அப்பாம்பின் பெயர் ஆதிசேடன் என்பதாகும்.

வைணவ உலகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் தரும் பொருள் வைணவ பக்தி இலக்கியக் கலைச் சொற்களாகக் கொள்ளத்தக்கன.

சேவித்தல்

வழிபடுதல்

திவ்ய தேசம்
திருமால் கோயில் கொண்டருளும்
இடம்
அவதாரம்

திருமால் தோன்றிய பிறப்புகள்

நின்றான்

திருமாலின் நின்ற திருக்கோலம்

இருந்தான்
திருமாலின் இருந்த/ அமர்ந்த கோலம்
கிடந்தான்
திருமாலின் கிடந்த /பள்ளிகொண்ட
கோலம்
அனந்த சயனம்
அல்லது அறி துயில்

திருமாலின் நித்திரை

அவதரித்தல்

பிறத்தல்

மங்களாசாசனம்
ஆழ்வார்களால் போற்றப்பட்ட பெருமை



தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
திருமங்கை ஆழ்வார் அருளிய தாண்டகம் இரண்டினைக் குறிப்பிடுக.
2.

திருமாலை என்ற நூலை அருளியவர் யார்?

3.

படி - விளக்கம் தருக.

4.

முப்பத்தாறாயிரப்படி - அருளியவர் யார்?

5.

செயலால் பெயர் பெற்ற நூல்களைக் குறிப்பிடுக.