5.0 பாட முன்னுரை

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பக்தி இயக்கக்காலம் என்பது தமிழ் இலக்கிய வரலாறு. அக்காலத்தில் பாண்டியர்களின் எழுச்சி, பல்லவர்களின் செல்வாக்கு என்பன போன்ற காரணங்கள் புறச்சமயங்களின் செல்வாக்கைக் குறைத்து, வைதிக சமயம் புத்துயிர் பெற அடிப்படைக் காரணங்களாயின.

அக்காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள் வைணவத் திருத்தலங்களுக்குச் சென்று திருமாலைப் பக்திப் பாசுரங்களால் பாடி வழிபட்டனர்; அதன்வழி, திருத்தலங்களைத் திவ்விய தேசங்களாகப் போற்றி மங்களாசாசனம் செய்தனர். மங்களாசாசனம் என்றால் ஆழ்வார்களால் துதிக்கப் பெறுதல் அல்லது வழிபாடு செய்யப் பெறுதல் ஆகும்.

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்விய தேசங்கள் 108 என்பதை ஈண்டு நினைவு கூரலாம். திருப்பாற்கடல், திருப்பரமபதம் ஆகியவை தவிர 106 திவ்விய தேசங்கள் உள்ளன; அவற்றுள் 12 வட இந்தியாவில் உள்ளன.

ஏனைய 94 தென் இந்தியாவில் உள்ளன. அதிகமாகப் பாசுரங்கள் அருளிய நம்மாழ்வாரையும் அவர் சீடரான மதுரகவி ஆழ்வாரையும், அதிகமாகத் திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை ஆழ்வாரையும் பற்றி இப்பாடத்தில் காண்போம்.