5.1 நம்மாழ்வார்

ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார். எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.

திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார். புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார்.