6.4 சான்றோர் சிலர்

• நாதமுனி

நாதமுனி யோக ரகசியம், நியாய தத்துவம் ஆகிய நூல்களை அருளியுள்ளார். கண்ணனின் முழு வரலாற்றையும், ஆரியப்பப் புலவரின் பாகவத புராணம் (4970 விருத்தம்), அருளாள தாசரின் வாசுதேவ கதை (9151 செய்யுள்), செவ்வைச் சூடுவாரின் விண்டு பாகவதம் அல்லது பாகவத புராணம் (4972 பாடல்கள்), வரதராச ஐயங்காரின் மகாபாகவதம் (9147 பாடல்கள்) ஆகியவை விரித்துக் கூறுகின்றன.

• வேதாந்த தேசிகர்

வடகலை மரபைத் தோற்றுவித்த வேதாந்த தேசிகர் தமிழில் 24 நூல்களை இயற்றினார். அவற்றுள் நான்கு நூல்கள் கிடைக்கவில்லை ஏனைய 20 நூல்களுள் சில:

பரமபத சோபானம்
பரமத பங்கம்
வைணவ தினசரி
திருமந்திரச் சுருக்கு
துவயச் சுருக்கு
சரம சுலோகச் சுருக்கு
கீதார்த்த சங்கிரகம்

பிரபந்த சாரம்


• அருளாளப் பெருமாள்

இராமானுசரின் மாணவர் அருளாளப் பெருமான் எம்பெருமானார் ஞானசாரம், பிரமேய சாரம் ஆகிய நூல்களை அருளியுள்ளார். ஞானசாரம் (40 வெண்பா) திருமாலின் திருவடிச் சிறப்பைக் கூறுகின்றது. பிரமேய சாரம் (10 வெண்பா) இறைவனுக்குச் செய்யும் தொண்டு வீடுபேறு அடையும் வழி எனக் காட்டுகின்றது.

• அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவாய்மொழியில் அறிய வேண்டிய உள்ளுறைப் பொருளை எளிய நடையில் உணர்த்த விரும்பி ஆசாரிய ஹிருதயம் என்னும் நூலை அருளினார். (ஆசாரிய - நம்மாழ்வார், ஹிருதயம் - மனம்.) ‘மாறன் மனம்’ என்பது இந்நூல் பெயர் தரும் பொருளாகும். ஆசாரிய பரம்பரையின் முதல்வர் நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழியின் பெருமையைக் கூறும் ஆசாரிய ஹிருதயம், ஆசாரிய பரம்பரையின் கடைக்குட்டியான மணவாள மாமுனிகளின் சிறந்த உரையைப் பெற்றுத் திகழ்கின்றது.