E
P20224 - திருத்தொண்டும் காதலும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  • பெரியாழ்வார்,     தொண்டரடிப்பொடியாழ்வார்,
    திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள்
    ஆகியோரின் திருத்தொண்டையும் திருமால் மீது
    அவர்கள் கொண்ட காதலையும் விவரித்துக் கூறுகிறது
    இப்பாடம்.

  • பல்லாண்டு வாழ அருள்புரியும் பெருமானுக்குப்
    பல்லாண்டு பாடிய பெரியாழ்வார், தாயாக மாறிக் கண்ணனைத்     தாலாட்டிப்     பரவசமடைந்தவர்.
    பிள்ளைத்தமிழ் இலக்கிய வகை தோன்ற வித்தூன்றிய
    பெருமைக்கும் உரியவர்.

  • தொண்டர் அடிப்பொடியாழ்வாரோ திருமாலையே
    சரணடைந்து அவன் நாமத்தைச் சொல்லுவதில் பெரும் பேறடைந்தவர்.     திருவரங்கனின் பெருமையும்
    இராமாவதாரச் சிறப்பும் இவர் பாசுரங்களில் விளக்கம் பெறுகின்றன.

  • திருப்பாணாழ்வாரின் பாசுரங்கள் இறைவனையே
    மகிழ்வித்து     நம்பாடுவான் என்ற நாமத்தைச்
    சூட்டும்படி செய்தன.

  • மன்னர் பரம்பரையில் பிறந்தும் மண்ணரசு வேண்டாது
    விண்ணரசை வேண்டி நின்றவர் குலசேகர ஆழ்வார். திருவேங்கடத்தான் கருணையை எதிர்நோக்கியிருந்தவர்,
    தானே தசரதனாகி இராமாவதாரப் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர்.

  • இறைவன் சூட வேண்டிய மாலையைத் தான் சூடிக்
    கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை அருளிச்செய்து, ஆழ்வார்களில் ஒருவராய் உயர்ந்து
    நின்றார்;     மானிடர்க்கென்று     பேச்சுப்படில்
    வாழகில்லேன் என்று இறைவனையே அடைந்தவள்.

மேற்கூறிய அனைத்தையும் இப்பாடம் விரிவாகப் பேசுகிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால்என்ன பயன் பெறலாம்?

  • பூமாலை தொடுத்துத் திருமாலை வழிபட்டவர்களாகிய பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்
    அருளிய பாசுரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • இறைவனுக்குப் பாசுரங்களால் மாலை தொடுத்துச்
    சொல்     மாலையை     இசைபாடிச்     சூட்டிய
    திருப்பாணாழ்வாரின் பாதாதி கேச (திருவடி முதல்
    திருமுடிவரை) வருணனையில் தோய்ந்து பக்தி
    இலக்கிய வகையை அடையாளங் காணலாம்.

  • இராம அவதாரத்தில் தோய்ந்து தந்தையாக நின்று,
    இராமன் மேல் கொண்ட காதலைப் புலப்படுத்திய
    குலசேகரரின் "மகன்மேல்காதல்நெறியில்" ஆழ்ந்து அனுபவிக்கலாம்.

  • பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்ணான
    ஆண்டாள் (பக்திக்) காதலின் ஆளுமையை
    அடையாளங் காணலாம்.

  • ஒவ்வொரு ஆழ்வாரும் காட்டும் பக்திக் காதலின்
    புலப்பாட்டு நெறியில் தோய்ந்து, அவர்கள் (உளவியல்
    பாங்கில் நின்று) தாயாக - தலைவியாக - தந்தையாக- அடியாராகப் பாவிக்கும் பாவனை முறைகளைத்
    தொகுத்துப் பட்டியலிடலாம்.

  • அரங்கன் மீது கொண்ட காதலில் கனிந்து நின்ற
    ஆண்டாளின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு