4.2 மாலை இலக்கியங்கள்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் அருளிச் செய்த தமிழ் மரபுவழிப்பட்ட சிற்றிலக்கியங்களில் மாலை இலக்கியங்கள் மிகுதியாகும். எண்ணிக்கையளவில் இருநூறுக்கும் மேற்பட்ட மாலை இலக்கியங்கள் கிடைக்கின்றன.

இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் தோன்றிய முதல் இலக்கியமே மாலை இலக்கியம் ஆகும். பல்வேறு மலர்களால் தொடுக்கப்பட்டது. மாலையாக அமைவதைப் போல, பல்வேறு செய்யுள் யாப்புகளைக் கொண்டு இம் மாலை இலக்கியங்கள் அமைகின்றன.

4.2.1 பல்சந்த மாலை

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணும் முதல் இலக்கியம் பல்சந்த மாலையாகும். இந்நூல் இதுவரையிலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அகத்துறைப் பொருளில் அமைந்த எட்டு செய்யுட்களே கிடைத்துள்ளன. 1931ஆம் ஆண்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த களவியல் காரிகை என்னும் நூலில் இச்செய்யுட்கள், மேற்கோள் செய்யுட்களாகக் காணப்படுகின்றன.

பல்சந்த மாலை என்பது 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பன்னிருபாட்டியலார் பல்சந்தமாலைக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார். இந்தப் பல்சந்தமாலை அந்த இலக்கணத்தோடு பொருந்தவில்லை. இந்நூலில் உள்ள எட்டாம் செய்யுளில்

அல்லா என வந்து சாத்திய நந்தா வகை தொழும் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

என வரும் அடிகள் இவ்விலக்கியம் இஸ்லாமிய இலக்கியம் என்பதனை நிறுவுகின்றது.

பல்சந்தமாலை இலக்கியத்தின் ஆசிரியர் பெயரும் காலமும் தெரிந்து கொள்ள இயலவில்லை. இதில் அமைந்துள்ள சொல்லாட்சிகளைக் கொண்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை இவ்விலக்கியத்தின் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு என நிறுவுகின்றார்.

4.2.2 மிகுராசு மாலை

பல்சந்தமாலைக்குப் பின் கிடைத்திருக்கும் மாலை இலக்கியம் மிகுராசு மாலையாகும். இவ்விலக்கியம் முழுமையாகவும், இயற்றிய ஆசிரியரின் பெயரும் காலமும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளுமாறு உள்ளது. ஆதலால் முதல் இஸ்லாமியச் சிற்றிலக்கியம் மிகுராசு மாலையே எனலாம். இது இஸ்லாம் சமய வரலாற்றிலும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளமையால் இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள் என்னும் பாடத்தில் மிகுராசு மாலையைப் பற்றிப் படிப்போம்.

 • நூலின் பெயர்
 • மெஹ்ராஜ் என்பது அறபு மொழிச் சொல்லாகும். தமிழ் வழக்கில் மிகுராசு என்று வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்றம் பெறுதல், உயருதல் என்று நேரடிப் பொருள் ஆகும். ஆனால், இச்சொல் இஸ்லாம் சமயத் தீர்க்கதரிசியாகிய நபிகள் பெருமானார் புறாக் என்னும் மின்பரி (வானத்துக் குதிரை) யில் ஏறி வானுலகு சென்று உருவமில்லாது திகழும் இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கி, இஸ்லாம் சமயத்தவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளையும் இறைவனின் விந்தை மிகு படைப்புகளையும் கண்டு மீண்ட நிகழ்ச்சியினையே குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஆதலால் மிகுராசு என்பதற்கு நபிகள் பெருமானாரின் விண்ணேற்றப் பயணம் எனப் பொருள் கொள்ளலாம்.

 • நூலாசிரியர்
 • மிகுராசு மாலையை இயற்றிய ஆசிரியர் ஆலிப் புலவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மங்கை நகர் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

  மிகுராசு மாலை, காப்புச் செய்யுள் நீங்கலாகப் பன்னிரண்டு இயல்களையும் 743 செய்யுட்களையும் கொண்டுள்ளது. ஆசிரியர் இயல்களுக்கு இயல் எனப் பெயரிடவில்லை. சிறப்பு எனப் பெயரிட்டுள்ளார். காயல் பட்டினத்தில் காஜியாராக இருந்த ஷெய்க் முகம்மது அலாவுதீன் என்னும் ஆன்றோரிடம் அறபு மொழி நூல்களிலிருந்து விளக்கம் பெற்று மிகுராசு மாலையைத் தாம் இயற்றியதாக ஆலிப்புலவர் இந்நூலில் காட்டுகின்றார்.

  ஆலிப்புலவர் மிகுராசு மாலை என்னும் தமிழ் நூலை இயற்றிய பின்னர், அதனை அறிஞர் பெருமக்கள் நிரம்பிய அவையில் அரங்கேற்ற விரும்பினார். திருநெல்வேலி, காயல்பட்டினம் முதலான பேரூர்களில் வாழும் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களிடம் வாய்ப்பினை வேண்டித் தோல்வியுற்றார். அந்நிலையில் நாஞ்சில் நாடு (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) வந்தார். கோட்டாறு ஜமாஅத்தார்களிடம் (ஜமாஅத் = சமயக்குழு) வேண்டினார். ''அடுத்த வாரம் வாருங்கள் பார்க்கலாம்'' என்னும் பதிலைப் பெற்றார். மனம் வருந்தினார். உச்சி வெயில் வேளையில் தெருவில் இருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய மாணவர் சிவலிங்கம் என்பார் எதிர்ப்பட்டார். பிறசமயத்தவர்களின் முன்னிலையிலேனும் மிகுராசு மாலையை அரங்கேற்றிவிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டார், புலவர். தன் மாணவரிடம் விருப்பத்தைத் தெரிவித்தார். மாணவரும் ஆசிரியரைத் தேற்றினார். அவ்வூரில் பாவாடைச் செட்டியார் என்னும் செல்வந்தர் இருப்பதாகவும், அவர் குருடர் என்றும் கூறினார். இறையருள் ஒன்றாலன்றி அவருக்குப் பார்வை திரும்ப வழியில்லை என மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் என்றும் விவரித்துக் கூறினார். அத்தகையவருக்கு ஒருவேளை உங்கள் காப்பியம் அரங்கேறும் அருளால் பார்வை திரும்பக் கூடும் என்றும் கூறினார். இருவரும் அச்செல்வந்தரை அணுகினர். அவரும் ஒப்புக் கொண்டார். அரங்கேற்றத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. இஸ்லாமிய மாதத்தில் ஏழாம் மாதமாகிய ரஜ்ஜப் மாதம் 12ஆம் நாள் வெள்ளிக் கிழமை அரங்கேற்றம் என அறிவிக்கப்பட்டது.

  மிகுராசு மாலைச் செய்யுட்கள் ஒவ்வொன்றையும் ஆலிப்புலவர் உரத்தகுரலில் இசையுடன் பாடிப் பொருளுரை, விளக்கவுரை ஆகியவற்றைக் கூறி வந்தார். கடவுள் வணக்கம், நாட்டுச் சிறப்பு என ஒவ்வொரு இயலாக முடித்து ஐந்தாவது இயலான பைத்துல் முகத்தீஸ் சிறப்பு என்னும் இயலைப் படிக்க முற்பட்டார். பைத்துல் முகத்தீசு என்பது ஜெருசலேம் நகரில் உள்ள பள்ளி வாசல் ஆகும். இதனைத் தாவூது நபியின் மகனான சுலைமான் (சாலமான்) நபி, தன்னுடைய நான்காம் ஆட்சியாண்டில் (கி.மு 986) தொடங்கி பதினொன்றாம் ஆட்சியாண்டில் (கி.மு. 975) முடித்தார்.

  தொடக்கக் காலத்தில் நபிகள் நாயகம் இறைவழிபாட்டிற்கு முன்நோக்குத் திசையாக பைத்துல் முகத்தீசையே கொண்டிருந்தார். மிகுராசு மாலையில் தாவூது நபிக்கு ஜபூர் என்னும் வேதம் அருளப்பட்ட வரலாறும் சுலைமான் நபியின் வரலாறும் காணக்கிடக்கிறது.

  புறாக் என்னும் மின்பரி ஏறி மக்காவிலிருந்து புறப்பட்ட நபிகள் பெருமானார், இந்த இறை இல்லத்தில் இறங்கித் தொழுது விட்டு விண்ணேற்றம் பெற வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும். எனவே பைத்துல் முகத்தீசு பள்ளியில் இறங்கிய நபிகள் நாயகம் தான் பயணம் செய்து வந்த விண்பரியை அங்கிருந்த கோலத் தூணில் கட்டிவிடக் கருதினார். எல்லாம் வல்ல அல்லாஹ்வை மனத்துள் எண்ணித் தன் கைவிரலை எழில்மிக்க அந்த வலிய தூணில் வைத்ததும் அதில் ஒரு துளை ஏற்பட்டது. இப்பொருளில் அமைந்த செய்யுளை (செய்யுள் 111) மிக்க உற்சாகத்துடன் ஏறிய குரலில் முடித்துவிட்டு, ஏறிய வாசியை தூண் துளையில் கட்டி (வாசி = குதிரை) என அடுத்த (செய்யுள் 112) அடியைத் துவக்கும் பொழுது விண்ணில் பேரொளி தோன்றியது. அவ்வொளியை யாவரும் கண்டனர். அந்தகரான பாவாடைச் செட்டியாரும் பார்த்தார். ஆம்! பார்வையைப் பெற்றார். அதேசமயம் ஆலிப்புலவரின் செவியில் ''ஆலியே! இஃது என் அல்லாஹ்விற்கும் எனக்கும் விண்ணவர் கோனாகிய ஜிப்ரயீலுக்கும் மட்டுமே தெரியும். உனக்கு எப்படித் தெரியும்!'' என மெல்லிய குரல் கேட்டது. அத்திருக்காட்சியையும் பேச்சொலியையும் கேட்ட புலவர் உணர்வுப் பெருக்கால் மயக்கமுற்று விழுந்தார். நாயகப் பேரொளியைக் கண்ட கண்ணால் இனி வேறெதனையும் காணமாட்டேன் என, கண்களைக் கட்டிக் கொண்டு அந்தகர் போல் வாழ்ந்து, இஸ்லாமிய மாதத்தில், ஒன்பதாம் மாதமாகிய ரமலான் மாதம் இருபத்தேழாம் நாள் வெள்ளிக்கிழமை மதியநேரத் தொழுகையை நெல்லை பாளையங்கோட்டையில் இருந்த ஒரு தோப்பில் தொழுது கொண்டிருக்கும் போது சஜ்தா என்னும் சிரவணக்க நேரத்தில் ஆவி அடங்கப் பெற்றார்.

 • காலம்
 • மிகுராசு மாலையை இயற்றிய புலவர் இவ்விலக்கியத்தின் காலத்தை ஹிஜிரி 998 (செய்.18) என்றும் கொல்லம் 765 (செய்.19) என்றும் தருகின்றார். இவ்விரு ஆண்டுகளும் ஆங்கில ஆண்டுக் கணிப்பின்படி கி.பி. 1590ஆம் ஆண்டாகும். எனவே மிகுராசு மாலை இலக்கியத்தின் காலம் கி.பி. 1590 எனலாம்.

 • மிகுராசு மாலையின் சிறப்பு
 • ஆலிப்புலவர் அருளிய மிகுராசு மாலை இலக்கியத்திற்குப் பின், அதனை முதல் நூலாகக் கொண்டு கி.பி. 1751 இல் மதார்சாகிப் புலவர் மிகுராசு நாமா அருளினார். மெய்ஞ்ஞானி தக்கலை பீர் முகம்மது அப்பா மெய்ஞ்ஞான தத்துவப் பொருளில் மிகுராசு வளம் வெளிப்படுத்தினார். காளை ஹசனலிப்புலவர் மிகுராசு-லி-ஆ-ரிஃபீன் என பக்திப் பரவசத்தில் படைத்தார். பின்னும் ஆலிப்புலவரைத் தழுவி இதே பொருளில் சிற்றிலக்கியங்கள் பல வந்துள்ளன.

  இவ்வகையில் மிகுராசு மாலை இலக்கியம் இஸ்லாமியச் சிற்றிலக்கிய வரலாற்றில் தலை சிறந்த சிற்றிலக்கியமாக அமைந்துள்ளது எனலாம்.

  1.

  இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எண்ணிக்கை யாது?

  2.

  இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை? அவற்றின் வகைகள் யாவை?

  3.

  இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காணும் முதல் இலக்கியம் எது? அதனைப் பற்றிக் குறிப்பு வரைக.

  4.

  முதல் மாலை இலக்கியம் எனக் கொள்ளத்தக்க இலக்கியம் எது?

  5.

  மிகுராசு மாலை - நூற்குறிப்பு வரைக.

  6. மிகுராசு மாலையின் அரங்கேற்ற வரலாற்றைக் கூறுக.
  7. மிகுராசு மாலையின் வழி நூல்கள் யாவை?