புதினத்தின் வளர்ச்சி
நாவல்ல
(Novella) என்ற இலத்தீன் சொல்லே, ஆங்கிலத்தில்
நாவல் எனப்படுவதாயிற்று. இது நவீனம்
எனப்பட்டு, புதினம் எனப் பெயர்
பெறுவதாயிற்று.
சாமுவேல் ரிச்சர்ட்சன் 1740-இல் ஆங்கிலத்தில்
எழுதிய பமிலா என்ற நாவலே உலகின் முதல்
நாவலாகும். கி.பி.1879-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய
பிரதாப முதலியார் சரித்திரம் என்பது
தமிழில் எழுந்த முதல் புதினமாகும். இரண்டாவது
தமிழ்ப் புதினம் பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம்
என்பதாகும் (கி.பி.1896). மாதவையாவின்
பத்மாவதி சரித்திரம் என்பதும்
குறிப்பிடத்தக்கது. இது பெண் கல்வியை
வலியுறுத்துவது. வேதநாயகம் பிள்ளை தமிழ்
நாவலின் தந்தை எனப்படுகின்றார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற
புதினங்கள் தோன்றலாயின. அவற்றைப் பலவாக வகைப்படுத்தி அறியலாம்.
புதின வகைகள்
துப்பறியும் புதினங்கள்,
சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், வட்டாரப் புதினங்கள்
முதலியன.
1. துப்பறியும் புதினங்கள்
மர்ம நாவல்
எனப்படுவன
இவை. எதிர்பார்ப்பு, பரபரப்பு,
விறுவிறுப்பு என அமைந்து எதிர்பாராத
திருப்பங்களும்
முடிவுகளும் கொண்டு விளங்குவன.
ஆரணி குப்புசாமி முதலியாரின் இரத்தினபுரி
இரகசியம், வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் கும்பகோணம்
வக்கீல், தேவனின் ஜஸ்டிஸ்
ஜகந்நாதன், தமிழ்வாணனின் கருநாகம்
முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள், சுஜாதாவின் கொலையுதிர்
காலம், ராஜேஷ்குமாரின் ஓர் அழகான விபரீதம்
முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள் இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.
இவை கிரைம் நாவல் எனவும்
அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கென்று தனித்தனி மாத
இதழ்களும், மாதம் இருமுறை இதழ்களும் உள்ளன.
2. சமூகப் புதினங்கள்சமுதாயச் சிக்கல், சீர்திருத்தக்
கருத்துகள், பிரச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை அமையும்.
நாரண துரைக்கண்ணனின்
உயிரோவியம்,
கல்கியின் தியாகபூமி, அலைஓசை,
அகிலனின் பாவை விளக்கு,
கோவி.மணிசேகரனின் யாகசாலை,
ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மு.வரதராசனாரின் கயமை,
அகல்விளக்கு, கள்ளோ காவியமோ,
கரித்துண்டு முதலான புதினங்கள், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி
மலர்,
பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள்,
ராஜம் கிருஷ்ணனின்
குறிஞ்சித் தேன்,
லட்சுமியின் அத்தை, சிவசங்கரியின்
நண்டு
என்பவையெல்லாம் இவ்வகையின.
3. வரலாற்றுப் புதினங்கள்இந்திய வரலாறு, தமிழக வரலாறு ஆகியவற்றின் வரலாற்றுக்
குறிப்புகளை அடியொற்றிப் புனைந்துரைக் கதை நிகழ்ச்சிகளும்
கதைப் பாத்திரங்களும் கலந்து புனையப் பெறுவன இவை.
சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி,
தமிழின் முதல்
வரலாற்றுப் புதினமாகும். கல்கியின்
பார்த்திபன் கனவு,
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்,
சாண்டில்யனின்
கடல்புறா, ஜலதீபம், யவனராணி,
அகிலனின் வேங்கையின்
மைந்தன், கோவி.மணிசேகரனின் செம்பியன் செல்வி,
விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி,
கலைஞர்
கருணாநிதியின்
தென்பாண்டிச் சிங்கம்,
பொன்னர் சங்கர் போன்றனவை
இவ்வகைமைக்குத் தக்க சான்றுகளாகும்.
4. மொழிபெயர்ப்புப் புதினங்கள்காண்டேகரின் மராத்தி நாவல்களைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களும்,
வங்காளம், இந்தி, குஜராத்தி நாவல்கள் பலவற்றைத்
துளசி
ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத் போன்றோரும் தமிழில்
மொழிபெயர்த்துள்ளனர். தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன்
சுந்தர ராமசாமியால்
மலையாளத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
5. வட்டாரப் புதினங்கள்
தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில்
வெவ்வேறு வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றின் செல்வாக்கோடு,
மண்வாசனை கமழ எழுதப் பெறுவன வட்டாரப் புதினங்களாகும்.
தோப்பில் முகமது மீரானின் ஒரு
கடலோரக் கிராமத்தின் கதை, வே.சபாநாயகம் அவர்களின்
ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது, பெருமாள்
முருகனின் ஏறுவெயில்,
தமிழ்ச்செல்வியின் மாணிக்கம்,
கண்மணி குணசேகரனின் அஞ்சலை
போன்றன இவ்வகையில்
அமைந்தனவாகும்.
நாவல்கள் மாலைமதி, ராணிமுத்து
முதலான பருவ இதழ்களிலும் வெளியிடப் பெறுகின்றன.
வானதி பதிப்பகம் முதலானவற்றில் தனி நூல்களாகவும் இவை வெளிவருகின்றன.
நாவல்களில் அளவு
குறைந்தவை குறுநாவல்கள் எனப்பெறுகின்றன. இவையும் நாவல்களுக்குரிய
இலக்கணங்களைக் கொண்டு திகழ்கின்றன.
இவை புதினம் பற்றிய செய்திகளாகும்.
|