|
|
|
2.4
குறுங்கவிதை
|
|
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய அறிவியல் உலகில், சுருங்கிய வடிவில் ‘நறுக்’ எனக் கருத்தினைக் தெரிவிக்கும் புதுக்கவிதை வடிவையும் கடந்து, இன்னும்
சுருக்கமாக ‘நச்’ என்று கருத்துரைக்கும் குறுங்கவிதை வடிவம் தோன்றலானது. மூன்றடி வடிவக் கவிதையே
குறுங்கவிதையாகும். ஜப்பானிய இலக்கிய
வடிவத் தாக்கமாக
எழுந்ததே இது. தமிழின்
ஐங்குறுநூற்றிலும் மூன்றடிப்
பாடல்கள் உள்ளன எனினும் அடி எண்ணிக்கையில் தவிரக்
குறுங்கவிதைக்கும் அதற்கும் ஒற்றுமை காணுதல் அரிது.
குறுங்கவிதையைத் துளிப்பா (ஐக்கூ), நகைத்
துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைப்படுத்தலாம்.
|
|
2.4.1
துளிப்பா (ஐக்கூ) |
|
ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும்
அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை
விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது.
தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள்
சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது.
துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண்,
அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம்
எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது.
|
|
படிமம்
|
|
துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம
உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும்
ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற
உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத்
திறன் மிக்கது இது.
|
|
எடுத்துக்காட்டு :
1. கட்புலப் படிமம்
சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி
(பரிமள முத்து)
2. விளையாட்டுப் படிமம்
நல்ல கயிறு
எறும்பின் பாதை
பம்பரம் சுற்ற (மித்ரா)
3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்
அதிக
சுமையா?
மெ.
.ல் . . .ல நகரும்
நத்தை (மு.முருகேஷ்)
|
|
குறியீடு
|
|
செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும்
உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக்
குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு
எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்;
சுட்டிக்காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்துவிடலாம். இயற்கை,
சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே
பெரும்பான்மை எனலாம்.
|
|
எடுத்துக்காட்டு :
1. இயற்கைக் குறியீடு
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
(அமுதபாரதி)
2. சமயக் குறியீடு
இதயத்தில்
இறுக்கம்
இதழ்களில்
மௌனம் இங்கே
சிலுவையில் நான் (பரிமள
முத்து)
3.வாழ்க்கைக் குறியீடு உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை (அறிவுமதி)
|
|
தொன்மம்
|
|
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ,
மறுத்தோ இக்கால நிலைக்கேற்பக் குறியீடாக்குதல் தொன்மப்
படிமம் ஆகும். |
|
எடுத்துக்காட்டு :
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை
இராமனின்
கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து
பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில்
இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
ஆராய்ச்சிமணி அடித்த
மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை
இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன்
மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப்பட்டது.
நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும்,
முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டுநடப்பினைப்
புலப்படுத்துகின்றது.
|
|
முரண்
|
|
மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல்
முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என
வகைப்படுத்தப்படும்.
1. சொல் முரண்தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி
(ல.டில்லிபாபு)
என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண்
அமைந்தது.
2. பொருள் முரண்
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் (கழனியூரன்)
என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத்
தண்டனை
எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.
3. சொற்பொருள் முரண் மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில் (பா.உதயகண்ணன்)
என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும்
பொருளாலும் முரண்படுகின்றன.
|
|
|
அங்கதம்
|
|
சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில்
ஊசி ஏற்றுவதுபோல்
நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது
அங்கதம்
எனப்படும்.எங்கள் மக்கள்
எப்போதும் நலமே தெருவுக்கு
நான்கு டாக்டர்கள்
(பரிமள முத்து)
என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமையன்று,
நோய்
நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.
நான்கு
கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)
என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில்
அங்கிங்கெனாதபடி பரவி நிலைபெற்றிருப்பதைப்
புலப்படுத்துகின்றது.
|
|
|
விடுகதை
|
|
பெரும்பாலான ஐக்கூப் பாடல்கள், விடுகதை
நடையில்
எது? யார்? ஏன்? எப்படி என்பது போலும் பொருண்மையில்
முன்னிரண்டடிகளும், அதற்குரிய விடையாக ஈற்றடியும் கொண்டு
திகழ்ந்து சுவைபயப்பதுண்டு.அழித்து அழித்துப் போட்டாலும்
நேராய் வராத கோடு
மின்னல்
(மேகலைவாணன்)
என்னும் கவிதையில், முயன்று தவறிக் கற்றல் என்பதன்படி,
ஒரு
முறை தவறினும் மறுமுறை திருத்திக் கொள்வது தானே
இயல்பு? ஒவ்வொரு முறையும் கோடு நேராகவில்லையென்றால்
எப்படி? அப்படிப்பட்ட கோடு எது? என அவ்வினா பல்வேறு
சிந்தனைகளைத் தூண்டுகிறது. விடையாக இறுதியடி
அமைகின்றது.
இருந்தால்
மேடு
இல்லாவிட்டால் பள்ளம்
வயிறு (மேகலைவாணன்)
என்பது எதிர்பாராத விடை கொண்ட கவிதை. உணவு
இருந்தால் இல்லாவிட்டால் எனக் கொள்ள வேண்டும். வயிறு
உணவு குறையாத நிலையில் இருந்தவன் தான் மோடு என்று
வயிற்றிற்குப் பெயரிட்டவனாதல் வேண்டும்.
|
|
பழமொழி
|
|
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை
விளக்குதலும் உண்டு.கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது
(மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட
பழமொழியை,
வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார்
கவிஞர்.
ஐந்தில்
வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமோ?’ எனப்
பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி
முறையை
விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது. |
|
|
வினாவிடை
|
|
கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு
அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே
விடையாவதும் உண்டு.வெட்ட வெட்ட
வளரும்
நீ என்ன
விரல்
நகமா? (பரிமள முத்து)
என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான
தலைப்பாக
அமைகிறது. தாகம்
தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)
என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப் பதில்
தருவதோடு,
வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.
|
|
உவமை
|
|
புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில்
காண்கிறோம்.
கவிதைகள் எழுத
நல்ல
தாள்
பனிப்புகை
(மித்ரா)
என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமையாக்கப்பட்டுள்ளது.நெருப்புதான்
பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)
என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க
வேண்டியிருப்பதால் தாய்க்கு அடிவயிற்றில் கட்டிய
நெருப்பாகவும், சமையலறையிலேயே இருத்தப்படுவதாலும்,
வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு
வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி
நெருப்பாகவும் அமைகிறாள் பெண். |
|
உருவகம்
|
|
பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது
உருவகம்.
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை (பல்லவன்)
என்பதில் இடி திட்டாகவும்,
மின்னல் பிரம்படியாகவும்,
மழை
அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும்
குழந்தையாகவும்
உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை (அறிவுமதி)
என்னும் கவிதையில் ஆலங்கட்டி
மழை ஆசிரிய
நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக
உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
|
|
2.4.2
நகைத் துளிப்பா (சென்ரியு) |
|
துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைத்
துளிப்பாவாகும். ஜப்பானின் சென்ரியு என்னும்
கவிதை
வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐக்கூவின்
அங்கத வடிவம் சென்ரியு. ஐக்கூ இயற்கை உலகில் பார்வை
செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள்
ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்ரியுவாகும்.
5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு
வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும். சென்ரியு
கவிதைகள் நடுத்தர மக்களின் அனுபவம், உணர்வு
போன்றவற்றைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை அலுப்பை
அகற்றும் சாதனமாக அமைந்து சுய அறிவுக்கு ஏற்றதாக
அமைகின்றன. இவை மறைபொருள் தன்மை உடையனவாய்
இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்றிரண்டு என்று கொஞ்சம்
கொஞ்சமாகப் படிப்பதே பயனளிப்பதாக அமையும்.
மூன்றடி, தலைப்பு இல்லாமை என்பன ஐக்கூ, சென்ரியு
என்னும் இரண்டிற்குமான ஒற்றுமைப் பண்புகள். படிம அழகு, தத்துவச் சார்பு,
இயற்கைத் தரிசனம் போன்ற கூறுகள் ஐக்கூவில் சிறப்பிடம்
பெறுகின்றன. அன்றாட வாழ்வைப் படம் பிடித்தல்; ஆழமற்றிருத்தல்; வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை போன்ற தன்மைகளுடன்
பொன்மொழி போன்றிருத்தல் ஆகியவை சென்ரியுவின் தனிச்சிறப்பாகும்.
நகைத் துளிப்பாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள
ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு’
என்னும் நூலிலிருந்து சில கவிதைகளை அரசியல், உறவுகள், கடவுள்,
குழந்தையுள்ளம் என்னும் தலைப்புகளில் இங்குக் காண்போம்.
|
|
அரசியல்
|
|
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி
தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று
முன்னேறி விடலாம் என்பதை,அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே
திரண்டனவல்ல; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள்.
பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெருமக்களே,
தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்டதிட்டங்களைக்
கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு
என்னாவது?
சட்டம்
ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்
(ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன்
விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்
கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கனுப்பப்பட்டதும்
நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள்
சுயநலவாதிகள்; தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.
|
|
உறவுகள்
|
|
இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக்
கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே
வியப்பு; கசப்பான உண்மை. வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு
சொன்னாள்
பணம்அனுப்ப
மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை
மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி
(ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி,
பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது
இது.
|
|
கடவுள்
|
|
வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம்
படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு
குன்றி விடுகின்றனர் என்பதை,
குருக்களாகி விட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டுநிறைய காணிக்கை
(ப.27)
எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.
|
|
குழந்தையுள்ளம்
|
|
வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும்
குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத்
திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள்
கட்டுச்சோறு போன்றன.
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம்
(ப.77)
என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது.
சொல்புத்தி
விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே
சாதிக்கவல்லதாகும்.
இனி இயைபுத் துளிப்பாவைக் காணலாம்.
|
|
2.4.3
இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) |
|
அங்கதத்தோடு மூன்றடிக் கவிதையில் முதலடியின்
ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்
தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா. இதன்
இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல்
சிறப்பு.
ஈரோடு தமிழன்பனின் சென்னிமலை
கிளியோபாத்ராக்கள் என்னும் நூல் இத்தன்மைத்தாகும்.
அந்நூற் கவிதைகளில் சிலவற்றை முரண்பாடு, சுயநலம், பொய்,
தன்பலம்
அறியாமை என்னும் தலைப்புகளில் காண்போம்.
|
|
முரண்பாடு
|
|
சொல்லொன்று, செயலொன்றாய் மனிதன் வாழ்கின்றான்.
‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்பது அவன் கொள்கையாக
இருக்கின்றது.
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம்
(ப.28)
என்னும் கவிதை அதனைப் புலப்படுத்துகின்றது.
|
|
சொல்லை வைத்து அன்பைப் புரிந்து கொள்ள முடியாத
காலமிது. நண்பனைப் போல் பழகும் உட்பகையாளர் பலர்
நாட்டில் உள்ளனர். இதனை,
|
|
வார்த்தைகள் பாசவெள்ளம்
நண்பர்க்கு நண்பர் தோண்டுவதோ வெட்டிப்
புதைக்க ஆழப் பள்ளம்
(ப.41)
என்னும் கவிதை உணர்த்தும்.
|
|
சுயநலம்
|
|
தம் இன்பத்திற்காகப் பிறர்க்குத் துன்பம் தருதல்
தகுதியுடையதாகாது.
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய்
(ப.18)
என்னும் கவிதை. சமுதாயத்திற்குத் தீங்கு தருவதைத்
தடைசெய்யாமல், தீங்கு என்று அறிவுறுத்துவதோடு நின்று,
அத்தீங்குப் பொருள்களை உற்பத்தி செய்தும் வணிகம் செய்தும்
வாழ்வோரைச் சிறப்புறச் செய்வதாய் அரசு விளங்குவதைச்
சுட்டிக் காட்டுகின்றது.
|
|
பொய்
|
|
மனிதர்கள் பலர், இல்லறத்தின் வேராம்
மனைவியை
விட்டுவிட்டுத் தகாத நெறியொழுகுதலையும்
அதற்காகப்
பொய் பேசுதலையும் இயல்பாகக் கொண்டு
வாழ்கின்றனர்.
அவர்களை,
மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான் காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி
(ப.56)
என்னும் கவிதை அடையாளம் காட்டுகிறது.
|
|
தன்பலம் அறியாமை
|
|
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில்
தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர் வாழ்வெல்லாம்
இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை
எழுதியிருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவதுதான்
கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க
முயன்றதாக,
கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான்
(ப.91)
என்னும் கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.
|