3.0 பாட முன்னுரை | |
தமிழில் தொன்றுதொட்டு இடம் பெற்று வரும் கவிதை வடிவம், மரபுக் கவிதை வடிவம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில், புலவர் என்றும் கவிஞர் என்றும் கருதப்பட்டவர்கள் மரபுக் கவிதையைப் பாடியவர்களேயாவர். ஓசை, அடிவரையறை ஆகியவற்றால் இலக்கண வரையறை பெற்று அமைவனவே மரபுக் கவிதைகள் ஆகும். ‘யாத்தல்’ என்பதற்குக் ‘கட்டுதல்’ என்பது பொருளாகும். ‘யாப்பு’ என்பது இப்பொருள் உடையதாகும். எனவே, மரபுக்கவிதை எழுதும் முறையை எடுத்துரைக்கும் நூல்கள், ‘யாப்பிலக்கண நூல்கள்’ எனப்படும். தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களில் இக்கவிதை வடிவங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. யாப்பிலக்கண நூல்களேயன்றி, ஏனைய இலக்கண நூல்களும் மரபுக்கவிதை சிறக்கத் தோன்றியனவேயாகும். எழுத்திலக்கண நூல்கள் புணர்ச்சி விதிகளை எடுத்துரைக்கின்றன; சொல்லிலக்கண நூல்கள் சொற்களின் பயன்பாட்டை விளக்குகின்றன; பொருளிலக்கண நூல்கள் அகமும் புறமும் ஆகிய இலக்கியப் பாடுபொருள்களை விவரிக்கின்றன; அணியிலக்கண நூல்கள் கருத்தை எடுத்துரைக்கும் முறைகளாகிய அணிகள் குறித்து விளக்கியுரைக்கின்றன. யாப்பிலக்கண அடிப்படை விதிகள் குறித்தும், பா வடிவங்கள் குறித்தும், பாவின வடிவங்கள் குறித்தும், பாக்களை இயற்றும் பிற உத்திகள் குறித்தும் இப்பாடத்தில் காண்போம். |