இக்காலக் கவிதைகளில் வாழ்க்கை பேசப்படுகிறது. அன்றாடச்
சிக்கல்கள் பாடுபொருளாகின்றன. அகமும் புறமும் மட்டும்
பாடுவதென்றோ, கற்பனைகளில் மிதப்பதென்றோ அமையாமல்
அவரவரும் தத்தம் சிக்கல்களையும் தாம் தீர்வுகாண
விழைவனவற்றையும் எடுத்துரைப்பதாக அமையக் காண்கிறோம்.
காரணம், உழைப்பாளியும் படைப்பாளியும் ஒருவராக இருப்பது
எனலாம். பெண்கள் நலம்
சங்க காலம் தொடங்கி அங்கொருவர் இங்கொருவர்
என்பதன்றிப் பெண்கள் கல்வியில் மேம்பட்டிருந்ததான நிலை
இல்லை. இடைக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்
பட்டிருக்கிறது. அவர்கள் உடைமைகளாகக் கருதப்பட்டனர்;
அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களை அந்நிலையிலிருந்து
மீட்கப் பெண்ணியம் என ஒன்று எழுந்தது.
வரதட்சணையும்,
பெண் சிசுக்கொலையும் நீங்க வேண்டும், பெண்கல்வி ஓங்க
வேண்டும் என்பது இதன் நோக்கமாகின்றது.
வேலப்பனுக்குப்
பெண் பிறந்ததாகத்
தகவல் வந்தது
ஊர்க்கவுண்டர் கேட்டார்
இழவு இன்றைக்கா?
நாளைக்கா? (கவிஞர் பால்ராஜ்)
என்பது பெண்சிசுக் கொலைக் கொடுமையைப் பறை சாற்றுகின்றது.
கல்வியில் விடி
அரசியல் தெளி
சட்டங்கள் செய்
ஊர்வலம் போ
முழக்கமிடு
பெண்ணைப் பேசப்
பெண்ணே எழு (அறிவுமதி)
என்கிறார் கவிஞர் அறிவுமதி.
மொழிப்பற்று
பல்வேறு புறச்சூழல்களால் காலந்தோறும் தமிழ் மொழியோடு
வடமொழி (சமஸ்கிருதம்), பாலி, பிராகிருதம், உருது, இந்தி,
ஆங்கிலம் எனப் பல மொழிகள் கலக்கும் நிலை நிகழ்ந்து
வருகின்றது. இக்காலத்தில் ஆங்கிலத்தின் செல்வாக்கில் மூழ்கித்
தாய்த்தமிழ் மொழியையே மறக்கும் நிலை நிலவுகின்றது.
மொழிப்பற்றை ஊட்ட வேண்டிய நிலை அவசியமாகின்றது.
பாரதிதாசனார் தமிழின் மேன்மையை இனிதே உணர்த்தி
மொழிப்பற்று ஊட்டுகின்றார்.
செந்நெல் மாற்றிய
சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரம்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
நாட்டுப்பற்று
பாரத நாட்டை உணர்வு பூர்வமாகப் போற்றுகின்றார்
பாரதியார்.
மன்னும் இமயமலை எங்கள்
மலையே !
மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !
இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !
இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !
பார்மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !
தொழிலாளர் நலம்
தொழிலாளர்கள் பெரிதும் உழைத்தும் வறுமையிலேயே
வாடுகின்றனர்.
கஞ்சி குடிப்பதற்கு
வசதியில்லை
காரணங்கள் என்னவென்று
தெரியவில்லை. . .
உழைப்புதான் இவர்களின்
உயிர்மூச்சு
உற்பத்திப்பயன் முதலாளியின்
உடைமை ஆச்சு . . . . (கவிஞர்
தமிழ்ப்பித்தன்)
என்னும் கவிதை தொழிலாளர் நிலையை எடுத்துரைக்கின்றது.
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும்
தலித்தியம்
என்னும் ஒரு கவிதையியக்கம் பரவி வளர்கின்றது.
மத நல்லிணக்கம்
சமயங்கள் பலவும் நிலைபெற்றுள்ள நாடாக இந்தியா
விளங்குதலின், இடையிடையே
சமயப் போராட்டங்கள்
நிலவுகின்றன. அவற்றிடை நல்லிணக்கம் காண வேண்டியது
இன்றியமையாததாகும்.
இறைவா !
நீ
எங்கே இருக்கிறாய்?
இந்துவின் கோயிலிலா?
முஸ்லீமின் மசூதியிலா?
என்றேன்.
இறைவன் சொன்னான்
இந்த இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகைத்துக் கொள்ளும்
புன்னகையில் நான் இருக்கிறேன்
என்று ! (பா.விஜய்)
என்னும் கவிதை வேறுபட்டு மாறுபடும் மத உணர்வை மறுக்கக்
காண்கிறோம்.
மனித நேயம்
சுயநலம் மிகுந்து மனித நேயம் குறைந்து வருவதாய்
இன்றைய மானுட வாழ்க்கையின் நிலை உள்ளது. இது
மாறவேண்டும். யாவரிடத்தும் கைம்மாறு கருதாத அன்புணர்வு
கொள்ள வேண்டும்.
ஆயுதம் அழிந்து
மானுடம் மிஞ்சுமா?
இல்லை
மானுடம் அழிந்து
ஆயுதம் மிஞ்சுமா? (வைரமுத்து)
என்னும் வினா இன்றைய அறிவியல் யுகத்தில் முன்னிற்பதைக்
காட்டுகின்றார் கவிஞர்.
நட்பு, காதல், அரசியல், மூடநம்பிக்கை, எதிர்ப்பு,
பகுத்தறிவு,
அறிவியல் செய்திகள், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு
உள்ளடக்கங்களைக் கொண்டதாக இக்கால இலக்கியங்கள்
திகழ்கின்றன. |