2.3 நாவலும் பிற இலக்கியப் படைப்புகளும்

நாவலுக்கும் சிறுகதைக்கும், நாவலுக்கும் நாடகத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி இனிப் பார்ப்போம்.

உரைநடையில் கதை கூறுவது நாவல் என்று கூறப்பட்டாலும், உரைநடையில் கதை கூறுவது அனைத்தும் நாவலாகி விடுவதில்லை. உரைநடையில் கதை கூறும் இன்னும் ஓர் இலக்கியம் சிறுகதையாகும். சிறுகதைக்கும் நாவலுக்கும் பொதுவான பண்புகள் உள்ளன.

(1) இரண்டும் உரைநடையில் அமைந்தவை.
(2) இரண்டும் மானிடப் பண்புகளை விளக்கக் கூடியவை.
(3) இரண்டும் மானிட வாழ்க்கையை விளக்கக் கூடியவை.
(4) பெரும்பாலும் பொழுது போக்கிற்குப் படிக்கக் கூடியவை.

இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு.  

எண் சிறுகதை நாவல்
1. கதைக்கரு ஓர் அனுபவமாகவோ, சிறு செய்தியாகவோ இருக்கும். பல்வேறு அனுபவங்கள்
பல்வேறு செய்திகள்
காணப்படும்.
2. வாழ்வின் ஒரு சிறு நிகழ்வை
விளக்கக் கூடியது.
வாழ்வை முழுமையாகவோ, ஒரு
பகுதி வாழ்க்கையை
விளக்கமாகவோ கூறுவது.
3.

ஏதோ ஒரு பாத்திரத்தின்
மிக மிக முக்கிய சுவையான
ஒரு செய்தியைச் சில
பக்கங்களில் விறுவிறுப்பாகக்
காட்டுவது.

பல்வேறு
பாத்திரங்களின்
பண்புகளையும் வாழ்க்கை
முறைகளையும்
அவற்றிற்கிடையே
நடைபெறும்
நிகழ்ச்சிகளையும்
ஒழுங்குபடுத்திக் கதையாகத் தருவது.
4. பத்தாயிரம் சொற்களுக்குள்
அரைமணி நேரத்தில் படிப்பதாக இருக்க வேண்டும்.
நீண்டதொரு கதையாக
ஐம்பதாயிரம் சொற்களுக்கு மேல்
இருக்கலாம்.
5. சிறுகதையை வாழ்க்கையின்
சாளரம் எனலாம்.
நாவலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்
கண்ணாடி எனலாம்.
6. சிறுகதை எழுப்பும் கலையார்வம் விரைந்து பெருகி விரைந்து முடியும் தன்மையுடையது. நாவல் எழுப்பும்
கலையார்வம் நீண்ட
நேரம் நீடித்து நிற்க வல்லது.
7. பரபரப்பு ஊட்டவல்ல ஒரு
சிறிய நிகழ்ச்சி அல்லது
உள்ளம் கவரும் ஓர் அரிய
காட்சி சிறுகதையாகும்.
நாவலுக்குப் பரபரப்பு
ஊட்டவல்ல பல காட்சிகளும் நிகழ்வுகளும் தேவை.

இவ்வாறு பல்வேறு பொதுப் பண்புகளும், வேறுபாடுகளும் கொண்டிருந்தாலும் இரண்டு இலக்கியங்களும் படைப்பிலக்கியத் துறையில் மக்களிடம் மிகச் செல்வாக்கு மிக்கனவாக இன்றுவரை விளங்குகின்றன. இரண்டு இலக்கியங்களுமே வார, மாத இதழ்கள் மூலம் மக்களிடம் மிக நெருக்கமான தொடர்பு கொண்டு விளங்குகின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர்கதையாக முதன் முதலில் வந்த காலத்தில் சிற்றூர்களில் பெண்களிடம் மிகச் செல்வாக்கோடு விளங்கியது. கல்வி அறிவுடைய பெண்கள் குறைவாக இருந்த அக்காலச் சூழலில், பொன்னியின் செல்வனைக் கல்வி அறிவுடைய ஒரு பெண் படிக்கப் பிறர் கேட்டுக் கொண்டிருப்பர். அதே போல், வீரமாமுனிவரின் பரமார்த்தகுரு கதை தொடங்கி ஜெயகாந்தனின் சிறுகதைகள் வரை மக்களிடம் சிறுகதைகளும் செல்வாக்குப் பெற்றன.

வீரமாமுனிவர்

ஜெயகாந்தன்

பொதுவாக இவ்விரு இலக்கியங்களும் மக்களிடம் வாசிக்கும் வழக்கத்தினை மிகுதியாக்கின.

இலக்கிய உலகில் செல்வாக்கு மிக்க இன்னும் ஓர் இலக்கியம், நாடக இலக்கியமாகும். நாடகமும் ஒரு கதையைச் சொல்லும் இலக்கியமாகும். ஆனால் கல்வி அறிவற்ற மக்களும், படிக்காமல், கண்ணால் பார்த்துச் சுவைப்பதற்காக ஒரு மேடையில் பாத்திரங்களின் வாயிலாகக் கதை நிகழ்த்தப் பெறும். எனவே, நாடகத்திற்கு ஒரு கலையரங்கம் தேவைப்படுகிறது. நாடகத்தில் இன்னுமொரு வகை நாடகமும் உண்டு. இந்நாடகம் மேடை நாடக முறையில் எழுதப்பட்டிருந்தாலும் படிப்பதற்காகவும் உரிய நாடகமாகும். இந்நாடகத்தை மேடையிலும் நடிக்கலாம்; படிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

  • நாடகம், நாவல் - ஒற்றுமைகள்
  • (1) நாவலைப் போல நாடகமும் ஒரு கதையைச் சொல்லுகிறது.
    (2)

    நாவலுக்கும் நாடகத்திற்கும் இடையே உயிராக உள்ளது கதைக் கோப்பாகும்.

    (3)

    நாவல், நாடகம் இரண்டும் மனித வாழ்வின் செயல்பாடுகளை ஒரு கதை மூலமாக வெளிப்படுத்துகின்றன.

    (4)

    நாவல், நாடகம் இரண்டிலும் தொடக்கம், முடிவு ஆகிய இரு நிலைகளுக்கிடையே போராட்டத்தின் வளர்ச்சியும், நெகிழ்ச்சியும், உச்சநிலையும் சுவை குன்றாமல் ஒரே முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

    நாடகத்திற்கும் நாவலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:

    எண் நாடகம் நாவல்
    (1) கலையரங்கம் தேவை. கலையரங்கம் தேவையில்லை.
    (2) நிகழ்ச்சிகள் யாவும்
    அரங்கக்காட்சி
    அடிப்படையிலேயே
    அமைக்கப்பட்டிருக்கும்.
    நிகழ்ச்சிகள் யாவும்
    வருணனை முறையிலேயே
    இருக்கும்.
    (3) பாத்திரங்களின் உணர்வுகளும், பண்புகளும் அவர்களின் முக பாவம், நடிப்பு ஆகியவற்றின்
    மூலம் வெளிப்படும்.
    உணர்வுகளையும்
    பண்புகளையும் நாவல்
    ஆசிரியரே வருணிப்பார்.
    (4) கதைமாந்தர்கள் செயல்படும் முறையிலேயே செயல்கள் வெளிப்பட வேண்டும். ஆசிரியரே விளக்கினால்
    போதுமானது.

    இவ்வாறு நாவலுக்கும் நாடகத்திற்கும் இடையே பல ஒற்றுமை, வேற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் கதையை நடத்திச் செல்வதையே அடிப்படையாகக் கொண்டவை. நாவலில் பல இடங்களில் நாடகத் தன்மைகள் நிறையக் காணப்படும். பாத்திரங்களின் உரையாடல்கள் நாடக முறையிலே அமைக்கப்பட்ட தொடக்க கால நாவல்களை நாம் அறிவோம்.

    பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள் நிறைய நாடகக் கூறுகளை கொண்டவை ஆகும்.