6.0 பாட முன்னுரை

ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, நாவல் இலக்கிய வகை தமிழில் நுழைந்தது. ஆங்கிலக் கல்வி பெற்றோர் நாவல் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தனர்.

பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவல் முதல் இன்றைய சோளகர் தொட்டி எனும் நாவல் வரை தமிழ் நாவல் இலக்கியம் பல்வேறு படிகளைத் தாண்டி வந்துள்ளது.


நாவல்கள் எனும் கதை வகை வருவதற்கு முன்பு, பொழுது போக்க இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைப் பண்டிதர்கள் படித்தனர். செல்வந்தர் வீடுகளில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தன. பிற மக்கள் இல்லங்களில் அல்லி அரசாணிமாலை, ஆரவல்லி சூரவல்லி கதை போன்ற இலக்கியங்கள் எழுதப் படிக்கத் தெரிந்தோரால் பிறருக்குப் படித்துக் காட்டப்பட்டன. அச்சு இயந்திர அறிமுகம் உரைநடை வளர்ச்சி ஆகியவற்றால் தோன்றிய நாவல் இலக்கியம் பாமரர்களும் படித்து மகிழும் நிலையில் அமைந்தது.