6.1 தமிழ் நாவலின் வளர்ச்சி | ||||||||||||||
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழில் நாவல் இலக்கியம் ஓரளவே வளர்ந்தது. வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, இராஜம் ஐயர் ஆகியோர் காலத்திற்குப் பிறகுத் தமிழில் ஆங்கிலத் துப்பறியும் நாவல்களை தழுவி நாவல் எழுதும் நிலையை வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆதரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றோர் உருவாக்கினர். துப்பறியும் நாவல்கள் பெருமளவிற்கு வாசிப்புக்குள்ளான சூழலில்தான் வரலாற்று நாவல்களைச் சுவையோடு எழுதும் வழக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழக வரலாற்றில் பேரரசர்களாகத் திகழ்ந்த நரசிம்ம பல்லவன், இராஜராஜ சோழன் போன்றோரைப் பற்றிச் சுவையுடன் வரலாற்று நாவல்களைத் தொடர்கதைகளாகக் கல்கி எழுதத் தொடங்கினார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகியவை நரசிம்ம பல்லவன் வரலாற்றையும், பொன்னியின் செல்வன் இராசராச சோழன் வரலாற்றையும் சுவைபடக் கூறின. இவை நாவல் படிப்பவர்களின் வட்டத்தை அதிகப்படுத்தின. பெரும்பாலும் இல்லத்தரசிகள் இந்நாவல்கள் தொடர்கதையாய் வரும் போது, தாமும் படித்து, படிக்கத் தெரியாதவர்களுக்கும் வாசித்துக் காட்டுவர். தொடர்கதைகள் தமிழுலகில் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் நாவல் இலக்கியத் துறையில் தம்மை இணைத்துக் கொண்டு செந்தாமரை, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, கயமை, வாடாமலர் போன்ற நாவல்களை எழுதினார். இவரின் சமூக நாவல்கள் அறிவுரை கூறும் நாவல்களாகவும், நல்லோர் தீயோர் செயல்பாடுகளை விளக்குவனவாகவும் வெளிவந்தன. இந்நாவல்கள் ஐம்பதுகளில் கல்லூரி மாணவர்களிடமும், கற்றவர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அகிலன், ராஜம் கிருஷ்ணன், லட்சுமி போன்றோர் தொடர்கதை மூலமாகவும் தனி வெளியீட்டின் மூலமாகவும் வெளியிட்ட நாவல்கள் சமூக அவலங்கள், மக்கள் பிரச்சனைகள், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள், தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்தன. அகிலனின் பால்மரக்காட்டினிலே நாவல் மலேயா ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் மிக மோசமான வாழ்க்கைச் சூழலை விளக்குகிறது. இராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிப்படுத்தியது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி (1950-க்குப் பிறகு) தொடங்கி இன்று வரையிலான காலப்பகுதியைத் தற்காலம் என்று கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியையும் முற்பகுதி, பிற்பகுதி எனப் பிரித்துப் பார்க்கலாம். முற்பகுதியில் தொடக்க கால வகைகளை ஒட்டியே நாவல்கள் வெளிவந்தன. இவற்றைப் பற்றி இரண்டாம் பாடத்தில் (P20322) விரிவாகப் படித்தோம். பிற்பகுதியில் பெண்ணியம், தலித்தியம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் வெளிவரும் நாவல்களைப் பற்றி இந்தப் பாடத்தில் படிக்கலாம். ஜெயகாந்தன் இருபதாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் ஆவார். பொதுவுடமைச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன் தமிழ் நாவல் உலகில் சிறந்து விளங்கினார். அவர் பொதுவுடமையில் தொடங்கி, ஆன்மிக நாவல்களையும் எழுதினார். அவரின் ஜெயஜெய சங்கர, பல்வேறு விமரிசனங்களுக்கு ஆட்பட்ட ஓர் ஆன்மிக நாவலாகும். அவருடைய சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன் போன்றவை புகழ்பெற்ற நாவல்களாகும். ஜெயகாந்தனுக்கு அடுத்து பிரபஞ்சன், டி.செல்வராஜ், பூமணி க.நா.சுப்பிரமணியன், அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், இந்திரா பார்த்தசாரதி போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் நாவல் இலக்கிய உலகில் தம் தரமான படைப்புகளால் புகழ் பெற்றவர்களாவர்.
இன்றைய தமிழ் நாவல்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட
அடிப்படையில் எழுதப்படுகின்றன.
|