6.2 சமூக நாவல்கள்

'ஒவ்வோர் இலக்கிய வகையின் தோற்றத்திற்கும், சமுதாய வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீரப்பாடல்கள், காவியங்கள் போன்ற ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலச் சமுதாய அமைப்பின் அடிப்படையாகவே தோன்றின' என்பார் முனைவர் கா.சிவத்தம்பி.

நாவல் என்ற இலக்கிய வகை சமுதாயப் பிரச்சனைகளை, சமூக மாற்றங்களை, சமூக அவலங்களை எடுத்துக்கூற எழுந்ததாக நாம் கொள்ளலாம்.

மனிதன் தன்னைச் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டு ஒதுங்கிவிடாமல் தனது காலச் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும், நடை, உடை, பாவனைகளையும் உணர்ந்து, அறிந்து சமூகவயமாதல் ஆகும். அவ்வாறு சமூகவயப்பட்டு, அச் சமூக இயல்பையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் சமூக நாவல்கள் எனப்படும்.

6.2.1 இன்றைய சமூக நாவல்கள்

தமிழில் தற்போது சமூகவியல் நோக்கில் நாவல்களை எழுதி வருபவர்களில் முன்னோடிகளாக இருப்பவர்கள் பொன்னீலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் ஆவர்.

பிரபஞ்சன் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர். பிரபஞ்சன் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், நாளை ஒரு பூமலரும், எனக்குள் இருப்பவள் போன்ற நாவல்களால் புகழ் பெற்றவர். எனக்குள் இருப்பவள் என்ற நாவலில் வரும் டேவிட் முத்தையா என்ற பாத்திரத்தின் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வினைப் பிரபஞ்சன் சுட்டிக்காட்டுகின்றார். பொருளற்றவர்கள் எளிய உணவை உண்ணுவதால் அவர்களின் தகுதி குறைவாக மதிப்பிடப்படுகிறது. இதனை டேவிட் முத்தையாவின் வார்த்தைகளால் உணர்த்துகிறார் பிரபஞ்சன்;

‘ஓட்டல்ல அப்பா இட்லி வடைக்கு ஆர்டர் கொடுத்தார். அப்புறம் மசால்தோசை. என் வாழ்நாளிலேயே முதன் முறையாக பி.யூ.சி. படிக்கிறபோதுதான் மசால் தோசையைக் கண்ணால் பார்த்தேன். சாப்பிட்டேன். எனக்கு ஆச்சரியம் எல்லாம் தினம் தினம் இட்லியும் தோசையும் சாப்பிடற ஜனங்களும் இருக்காங்க என்கிறதுதாங்க. தினம் கம்பஞ்சோறும், கேழ்வரகு களியும் வாரத்திலே எப்போதாவது ரெண்டு வேளை அரிசிச்சோறும் சாப்பிட்டு வளருரவங்க நானு. இப்பவும் என் அம்மாவும், தம்பியும் ஊருலே கம்பஞ்சோத்தைத் தின்னுகிட்டுதான் காலம் தள்ளுறாங்க. அதை நினைக்கிற போதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.’

பிரபஞ்சனைப் போல எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் நாவல் உலகில் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுபவராக உள்ளார். அவரது நெடுங்குருதி, உறுபசி போன்ற நாவல்கள் சமூகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் செய்திகளைக் கூறுகின்றன.

நெடுங்குருதி என்ற நாவலில் வேம்பலை என்ற சிற்றூரில் குற்றப் பரம்பரையினர் எனக் காவல் துறையினரால் நாள்தோறும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட ஆண்கள் பாத்திரங்களாக வருகின்றனர். ஜெயமோகன் காடு, ஏழாம் உலகம், விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை எழுதியுள்ளார். ஜெயமோகனின் ஏழாம் உலகம், குறைப்பிறவிகளான முடமான பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களின், அவர்களைச் சுரண்டி ஏய்ப்பவர்களின் உலகம், பெருங்கோயில்களின் முன்னால் அமர்ந்திருக்கின்ற முடமான பிச்சைக்காரர்களுக்கும் ஒரு முதலாளி உண்டு என்பதை இந்நாவல் எடுத்துக் காட்டுகிறது. அறம், கருணை, மனிதநேயம் என்றெல்லாம் நாம் காலம் காலமாக வளர்த்து வந்த நம்பிக்கைகளை இந்நாவல் வேரொடு பிடுங்கி விடுகிறது.

மனிதர்கள் விற்பனைப் பொருள்களாக மாறிப் போன காலம் இது. இங்கு நேர்மைக்கு இடமில்லை. உண்மைக்கு இடமில்லை. பணமே இங்குக் கடவுள். அதுவே வணங்கத்தக்கது என்ற கருத்தை இந்நாவல் எடுத்துரைக்கிறது.

பொன்னீலனின் புதிய தரிசனங்கள் என்ற நாவல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது. மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவல் சமூகவியல் நோக்கில் எழுதப்பட்ட எதார்த்த நாவலாகும். இந்நாவலின் கதை இந்தியாவில் நெருக்கடி நிலைமை (1975-77) நடைமுறையில் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது.

கவிஞர் வைரமுத்து கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தாலும், தமிழ் நாவல் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியுள்ளார். அவரின், தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை தமிழ் நாவல் போக்குகளைச் சற்று மாற்றி அமைத்தன. ஒரு நாவலுக்கு இதிகாசம் என்று பெயரிட்ட அவரின் செயல்பாடு காணத்தக்கது. அவரே தன் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டா? இது ஒரு குடியானவனின் இதிகாசம்’

என்று கூறி, தமிழ் நாவல் உலகை இன்னொரு தடத்திற்குக் கொண்டு செல்கிறார்.

இன்னும் பல்வேறு நாவல் ஆசிரியர்கள் சமூக நாவல்களை எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். இந்நாவல்களின் மூலம் தமிழ்ச் சமூக வரலாற்றையும் நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள இயலும்.