1.2 சிறுகதை இலக்கணம்

வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.

சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர்.

  • இலக்கணம்
  • 1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.

    2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.

    3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

    4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

    5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

    6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

    7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

    8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.

    9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

    10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

    ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.

    ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.

    குறிஞ்சிக் கலியில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டது’ என்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.

    இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.

    1.2.1 சிறுகதையின் தொடக்கம்

    சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.

    சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனத்தில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாதிரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தல் என்பதும் இயலாமல் போய்விடும்.

    மேற்கண்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.

    1.2.2 சிறுகதையின் முடிவு

    சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.

    சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில வேளைகளில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே அந்க் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.

    முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன், புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

    1.2.3 சிறுகதையின் உச்சநிலை

    உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாயுள்ளது. படைப்பாளரின் மறைமுகக் கருத்துகள் சில வேளைகளில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.

    சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைப்புத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்.

    கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறார்.

    1.2.4 சிறுகதையின் அமைப்பு

    சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும். கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.

    சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளன் கதையில் இன்ன உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
     

  • உணர்ச்சிகள்
  • 1) காதல்
    2) வீரம்
    3) சோகம்
    4) நகை
    5) வியப்பு
    6) வெறுப்பு
    7) அச்சம்
    8) சாந்தம்
    9) கருணை

    இந்த ஒன்பது வகையான உணர்ச்சிகளுள் ஒன்றோ, பலவோ கலந்து சிறுகதைகளை உருவாக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள் படைப்பாளரின் மொழி, நடை, கற்பனை, வருணனை ஆகியவற்றைக் கொண்டு அமையும்.

    சிறுகதைகள் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். சிறுகதையின் நீளம் என்பது வரையறுக்கப்படாத ஒன்று. ஒரு பக்கத்தில் முடிந்த சிறுகதைகளும் உண்டு. அறுபது பக்கம் வரை வளர்ந்த சிறுகதைகளும் உண்டு. பொதுவாக, கதையின் கருத்துக்குப் பொருந்துகின்ற நீளம்தான் உண்மையான நீளம். இதைப் படைப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும். சிறுகதைகள் எளிய நடையமைப்பில் அமைதல் வேண்டும்.