3.1 சிறுகதையின் கருப்பொருள் |
|
ஒரு கதையின் சிறப்பிற்கு அதன் கருப்பொருளே காரணமாகிறது. இக்கருப்பொருள் எளிமையானதாக அமைதல் வேண்டும். சிறுகதைக்கு அதன் கருப்பொருளே உயிர்நாடியாக உள்ளது. அடுத்து, சிறுகதையின் கருப்பொருள் எங்ஙனம் அமைதல் வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். சிறுகதையின் கருப்பொருள் ஒரு புதிய கருத்து, ஒரு புதிய விளக்கம், ஒரு புதிய பார்வை, ஒரு புதிய அழுத்தம், ஒரு புதிய அம்சத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். படைப்பாளர் சமூகத்தை ஊடுருவும் திறனே கதைக் கருவிற்கு அடிப்படையாகிறது. சிறுகதையின் கருப்பொருளே அதன் பொருண்மையாக உணரப்படுகிறது. சிறுகதையின் பொருண்மை வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும். வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உதவ வேண்டும். சமூகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வாழ்க்கையை நெறிப்படுத்த வேண்டும். சமூகச் சீர்கேடுகளை எடுத்துக்காட்டி விழிப்புணர்ச்சியை எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வளவில் அமையும் சிறுகதைகளே இலக்கியப் பயனை அளிக்க வல்லனவாக விளங்கும். கல்கி, அகிலன், புதுமைப்பித்தன் ஆகியோருடைய சிறுகதைகளில் இத்தகைய பொருண்மையைக் காணலாம்.
இப்பாடத்தில் கல்கி, அகிலன்,
ஜெயமோகன் ஆகிய
படைப்பாளர்களின் சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின்
கருப்பொருள் எங்ஙனம் வாழ்க்கைப் பயனுக்கும், சமூகப் பயனுக்கும்
உரியனவாக, இலக்கியப் பயனுக்கு இடம் கொடுக்கின்றன என்பதைக்
காண்போம். |