3.4 ஜெயமோகனின் சிறுகதைகளில் கருப்பொருள் இப்பகுதியில் படைப்பாளர் ஜெயமோகன் குறித்த செய்திகளையும் அவரது கதைகளின்
கருப்பொருள் தன்மையையும் ‘கடைசிவரை’ என்ற சிறுகதைக் கருப்பொருளின் விளக்கத்தினையும்
காணலாம்.
படைப்பாளர் வரலாறு
படைப்பாளர் ஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி
குமரி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர் எஸ். பாகுலேயன்
பிள்ளை, பி.விசாலாட்சி அம்மா. வணிகவியல் இளங்கலைப்
படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில்
வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள்
அலைந்தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில்
தொலைபேசித் துறையில் தொலைபேசி உதவியாளராகத் தற்காலிக
வேலையில் சேர்ந்தார். 1988இல் பணி மாறுதல் பெற்று,
தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத்
தொடங்கினார். இவருடைய மனைவி அருண்மொழி நங்கை.
குழந்தைகள் அஜிதன், சைதன்யா. 1997 முதல் இவர்
நாகர்கோவிலில் வசித்து வருகிறார்.
இவரது படைப்புகள்
ஜெயமோகனின்
முதல் சிறுகதைத் தொகுப்பு 'திசைகளின்
நடுவே'. இது 1991இல் வெளிவந்தது.
சிறுகதைத் தொகுப்புகள்
1) மண் (1993)
2) ஆயிரங்கால் மண்டபம் (1998)
3) கூந்தல் (2003)
4) ஜெயமோகன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு (2004)
நாவல்கள்
1) விஷ்ணுபுரம் (1997)
2) பின் தொடரும் நிழலின் குரல் (1999)
3) கன்னியாகுமரி (2000)
4) காடு (2003)
5) ஏழாம் உலகம்
6) ரப்பர்
திறனாய்வு நூல்கள்
இவர் பத்துத் திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்தன. இவரது பிற படைப்புகள்:
1) நாவல் (1991)
2) நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் (1998)
3) நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை தேவதேவனை
முன்வைத்து (2001)
4) பனி மனிதன் (2002)
5) சங்கச் சித்திரங்கள் (2003)
6) இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (2003)
7) வாழ்விலே ஒரு முறை (2004)
8) உள்ளுணர்வின் தடத்தில் (2004)
9) எதிர் முகம் (2004)
இவர் மலையாளத்திலும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது கருத்துகள்
கவிதையாக மாற முடியாத, கதையில் உறுப்பாக இடம்பெறமுடியாத சில வரிகள் படைப்பாளரின் கருத்தாக வெளிப்படுகின்றன. இவற்றுள் சில வரிகள் பொருள்படும் அளவிலும், சில வரிகள்
பொருள்படா அளவிலும், மனம் செயல்படுவதன் அடையாளமாக வெளிப்பட்டுள்ளன. போடப்படாத
அல்லது அழிந்துவிட்ட கோலங்களின் புள்ளிகளாக இவை கருதப்படுகின்றன. அவற்றுள் சில
கருத்துகள் இங்கே தரப்பெறுகின்றன.
எ.கா.
அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு
அவள் பாசம் தான் காரணமா?
வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து
மொழியில் புதைத்து விடுகிறோம்.
விரியத் திறந்த வீட்டுக்குள்ளும் சுரங்கம் போட்டு
நுழைபவன் இலக்கிய விமரிசகன்.
இவருடைய இக்கருத்துகள் சிந்தனையைத் தூண்டுகின்றன.
இவரது படைப்புகளில் கருப்பொருள்
இவர் நவீன இலக்கியத்தில் தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த சிறந்த படைப்பாளராக
விளங்குகிறார். இவருடைய கதைகள் இடம், சூழல் ஆகியவற்றை விவரிக்கும் அளவில் களம் சார்ந்த
கதைகளாக விளங்குகின்றன. இவருடைய கதையின் கருப்பொருள்கள் ஆழமான தன்மை கொண்டவை. ஆதியோடு அந்தமாகக் கதைசொல்லும் பாங்கினை உடையவை; வாசகர்களை வசப்படுத்தும் தன்மை
கொண்டவை.
சிறுகதைக்குரிய கூர்மை அதன் கருப்பொருளையே அடிப்படையாய்க் கொண்டது. கதையின் கருவைப் பற்றிப் படைப்பாளர் கூறும்பொழுது, ‘கதைக்கரு என்பது கற்பனை ஓட்டத்தில் மிதக்கும் படகு. ஓட்டைகளின் வழியாக உள்ளே வருவதே இலக்கியமாகிறது' என்கிறார்.
இவருடைய சிறுகதைகள் அனுபவக் கதைகளாக விளங்குகின்றன. சில சிறுகதைகள் கற்பனை
கலந்த அனுபவக் குறிப்புகளாகவும் உள்ளன. சில கட்டுரை வடிவிலும் அமைந்திருக்கின்றன. இவருடைய சிறுகதைகளின் கருப்பொருள்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுட்டுகின்றன. ஒவ்வொரு
நிமிடமும் மனிதன் பெறும் அனுபவங்களும், அதனால் அறியப்படும் கருத்துகளுமே
கருப்பொருள்களாகின்றன. ஜெயமோகன் சிறுகதைகளில் கருப்பொருள் அமைந்துள்ள அடிப்படையில்
அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. குடும்ப அனுபவக் கதைகள்
2. சமூக அனுபவக் கதைகள்
குடும்ப அனுபவக் கதைகள்
இக்கதைகளில் உறவுநிலை கருப்பொருளாகிறது. உறவுநிலை
கொடுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகள்
உரைக்கப்படுகின்றன. இதன்
மூலம் அனுபவப் பாடமானது பெறப்படுகிறது. இத்தகைய கதைகள்
குடும்பத்தையும், அதன் சூழலையும் களமாகக் கொண்டு
வெளிப்படும்பொழுது மேலும் சிறப்பான அனுபவங்களாகின்றன.
படைப்பாளரும் 'அனுபவங்களை வாசகர்களுக்கு அளிப்பதன் மூலம்
அவர்கள்
என்னுடைய உணர்வுகளைப் பெறமுடியும்' என்கிறார்.
சமூக அனுபவக் கதைகள்
இக்கதைகளில் சமூகக்கருத்துகள் கருப்பொருளாகின்றன. குடும்ப உறுப்பினர்களன்றி, சமூக
உறுப்பினர்களுடன் பெறும் அனுபவங்கள் இத்தகு கதைகளில் இடம்பெறுகின்றன. இவருடைய கதைகளில்
பல்வேறு சமூகத்தினர்கள் கருப்பொருள்களாவது, இவரது சமூக அக்கறையைக் காட்டுவதாக உள்ளது. களம் சார்ந்த கதைகளான இவை, இலக்கியத் தரத்திற்கும் உரியவாகின்றன.
இப்பகுதியில் இவரது
'வாழ்விலே ஒரு முறை' அனுபவக்கதைத் தொகுப்பிலிருந்து
'கடைசி
வரை' என்னும் சிறுகதை, தேர்ந்தெடுக்கப்பட்டு, பாடப்பகுதியில் விளக்கப்படுகின்றது.
3.4.1
'கடைசிவரை' சிறுகதையின் கதைப்பொருள்
படைப்பாளரே தம் அனுபவத்தைக் கூறுவதுபோல் இக்கதை
அமைந்துள்ளது. ''தீவட்டிப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்
சேலம் இரயில் நிலையத்தில் மூட்டைகளுடன் ஏறி என்னருகில்
அமர்ந்தார். மணி என்ன? என்று கேட்க, நான் 'கடிகாரம் என்னிடம்
இல்லை' என்றேன். வியப்புடன் என்னைப் பார்த்தார். நான்
காசர்கோட்டில் வேலை பார்க்கிறேன் என்று மாணிக்கத்திற்குத்
தெரிந்தபோது நெகிழ்ந்து போனார். 'அருமையான ஊரு சார்.... மத்தி
மீனு ரொம்ப சல்லிசு.
ஐந்து ரூபாய்க்கு 50 மீன் வாங்கியிருக்கிறேன்'
என்றார். மேலும் மாணிக்கம்
‘அங்கிருக்கும் கட்டடங்களையும்,
மேஸ்திரிகள், எஞ்சினியர்கள் பெயர்களையும் கூறி, தெரியுமா?'
என்று கேட்டார். நான், 'தெரியாது' என்று கூறினேன். அப்படியே
சுற்றி வந்த பேச்சிலிருந்து, மாணிக்கத்தைப் பொறுத்தவரை
கேரளத்தில் வாழும் பிராமணர்கள் நல்லவர்களாகவும்,
அறிவாளிகளாகவும்
இருக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.
மாணிக்கம் வன்னியக் கவுண்டர் சாதியைச் சார்ந்தவர். ஊரில்
தனக்கு இருக்கும் வசதியையும், உடன்பிறந்தவர்கள் பற்றியும்
கூறினார். அம்மாவும், தங்கையும் தன் குடும்ப உறுப்பினர்கள்
என்றும் கூறினார். 'இப்பொழுது அவர்கள் எங்கே?' என நான்
கேட்டபொழுது முகம் கறுத்து,
‘தெரியவில்லை; அவர்களைத்தான்
நான் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றார்.
மழை பொய்த்துவிட்டால் விவசாயமோ, வேறு தொழிலோ ஏதும் செய்ய முடியாத நிலையில் தான் கேரளாவிற்குக் கட்டட
வேலைசெய்யும் பொருட்டு வந்ததாகக் கூறினார். கேரளா மாணிக்கத்திற்கு
மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறினார். அவருடைய
பேச்சிலிருந்து மாணிக்கத்திற்கு
சினிமா தான் உயிர்மூச்சு என்பது
விளங்கியது. சினிமா பற்றிய தகவல்களைக் கூறும்போது அவர்
கலைக்களஞ்சியத்திற்கான அறிவைப் பெற்றிருப்பதை அறிய
முடிந்தது. மாணிக்கம் எந்த
இடத்தைக் குறிப்பிட்டாலும் அதைச்
சினிமா காட்சிகளாலேயே அடையாளப்படுத்தினார். அனைத்து
நிகழ்வுகளையும் சினிமா நிகழ்வுகளோடு ஒப்பிட்டார். மனிதர்களுடன்
நடிகர்,
நடிகைகளை ஒப்பிட்டார்.
அங்கு வேலைசெய்பவர்கள் கூலி வாங்கிக்கொண்டு நேரடியாகக் கள்ளுக்கடைக்குத்தான் செல்வார்கள்
என்று குறிப்பிட, நான் ஒரு உறுத்தலுடன், ‘பெண்களும் குடிப்பார்களா?’ என்றேன்.
‘பெண்கள் குடிக்காவிட்டால் எப்படி சாலையோரத்தில் குடித்தனம் நடத்த முடியும்’ என்றார்.
‘முதலில் இந்த வாழ்க்கை கஷ்டமாகத்தான்
இருக்கும். பிறகு பழகிவிடும்’ என்றார். பிறகு கேரளக் கள்ளின்
சுவையை ரசித்து மகிழ்ந்து கூறினார். ‘ஆனால் விலை அதிகம்.
வீட்டில்
பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாததால் பிரச்சனை
இல்லை’ என்றார். ‘குறைவான கூலியில் பெண்கள் எப்படிக்
குடும்பத்தைச் சமாளிப்பார்கள்?’ என்று கேட்க, மாணிக்கம் தலையை
உருட்டிச் சிரிக்கிறார். ‘கள் குடித்து, தலை சுற்றிக் கீழே கிடக்கும்
நிலையில் அந்தப் பெண்களைப் போலீசும், கேடிகளும்
விட்டுவிடுவார்களா என்ன? போகப் போக நிறையப்பணம்
கிடைக்கும்’ என்றார்.
இதைக் கேட்டதும்
என் உடல் நடுங்கியது. நான் உணர்வு பூர்வமாக என்றும்
தமிழன்; இவையனைத்தும் என் உடலில் அக்கணம் அழுகி
நாறுவதாகப்பட்டது. மாணிக்கம் என் உணர்வுகளைப்
புரிந்துகொள்ளாத நிலையில் அவராக ஏதேதோ பேசிக்கொண்டு
வந்தார். நான் மாணிக்கம்
கூறியதை எண்ணியபொழுது பல விஷயங்கள் என் நினைவிற்கு
வந்து போயின. பிழைப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது
நம் பாரம்பரியம், நிலம், நெறி, நினைவுகளை விட்டு விடுவோம்
போலும் என்று எண்ணினேன். மாணிக்கம்
நாடோடியல்ல.
நாடோடிகளுக்கு அவர்களுக்கே உரிய கலாச்சாரம் உண்டு. நாடோடி
மக்கள் இவர்களைத் தங்கள்
பக்கத்தில் கூட வர
அனுமதிக்கமாட்டார்கள். விவசாயிகள் நாடோடிகள் ஆவதில்லை;
சிதறி, மட்கி அழிகின்றனர். இந்தியாவில்
எந்தப் பெரும்
நகரங்களிலும் மாபெரும் தமிழ்ச்சேரிகள்
இருக்கும். இந்தியத் தெருக்களில் வாழ்பவர்கள் பெரும்பாலானவர்கள்
தமிழர்கள். கேரளத் தெருக்களில் பதினேழு லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.
இவையனைத்தும் நம் இலட்சியக் கனவுகளையும், வெற்றிகளையும் தகர்ப்பவையாக
அமைகின்றன.
மாணிக்கம் கண்ணனூருக்குப் போவதாகக் கூறினார். அங்குப்
போனால் தன் குடும்பத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்றார்.
இதுவரை தான் சிறையில் இருந்ததாகவும், இப்பொழுது பரோலில்
வந்திருப்பதாகவும் கூறினார். ‘ஒருவன் கழுத்தை வெட்டப் போக
அவன் தடுக்கக் கையை வெட்டிவிட்டேன்'
என்றார். குடிபோதையில்
வெட்டினீர்களா? என்று கேட்க, ‘இல்லை வேண்டுமென்று தான்
வெட்டினேன்’ என்றார். அப்பொழுது மாணிக்கத்தின் அந்தப் புதிய
முகம் என்னைப் பயம் கொள்ளச் செய்தது.
வெட்டப்பட்டவன் மாணிக்கத்தின் சகோதரியின் காதலன். அவர்கள் இருவரும் திருமணம்
செய்துகொள்ளத் திட்டமிட்டபோது மாணிக்கம் அவனைத் தட்டிக்கேட்டார். எதிர்க்கவே கையை
வெட்டிவிட்டதாகக் கூறினார். மாணிக்கத்திடம் நான் ‘அவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன? உனக்கேன் இத்தனை கொலைவெறி’ என்றேன். ‘அவர்களுக்கு நான் யார் என்பது புரிய
வேண்டும். அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் அவன் தலையை எடுத்துவிட்டுத்தான் மறுவேலை. குழந்தை
இருந்தால் அதன் தலையையும் எடுப்பேன்’ என்றார்.
நான், இது பைத்தியக்காரத்தனமான செயல் என்றேன். உடனே
மாணிக்கம் உணர்ச்சி வேகத்தில் நடுங்கினார். ‘ஆமாம் நான்
பைத்தியம் தான். தெருப் பொறுக்கியானாலும், குடிகாரனானாலும்
நான் அப்புனுக் கவுண்டனின் மகன். மாதய்யக் கவுண்டனின் பேரன்.
நான் உயிரோடு இருக்கையில்
ஒரு கவுண்டிச்சி கீழ்ச்சாதிக்காரனுடன்
வாழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன். அதில்
மாற்றம் இல்லை’.
மாணிக்கத்தின் கோபம், ஆவேசம் அவர் கழுத்துத் தசைகளும்,
நரம்புகளும், தாடையும் இறுகுவதிலிருந்தே தெரிந்தது. அதன் பிறகு
அவர் பேசவே இல்லை. இத்துடன் கதை நிறைவடைகிறது.
கருப்பொருள்
சாதி வெறி கொண்ட தனிமனிதன் மூலம் சமூகச்சிக்கல்
வெளிப்படுத்தப்படுகிறது. படைப்பாளியின் சிந்தனை, அனுபவம்
நம்மையும் பற்றிக்கொள்வதைக் காணமுடிகிறது. இக்கதை
கருப்பொருளை ஒட்டிய களம் சார்ந்த கதையாகி, சிறந்த
அனுபவமாகிறது.
3.4.2
கடைசிவரை - சிறுகதையின் வாழ்க்கைப் பயன்
நாம் வாழும் வாழ்க்கை நமக்கும், பிறருக்கும் பயனுள்ள வகையில் அமையும்பொழுதே
அது பயனுடையதாகிறது.
இச்சிறுகதையில் கடைசி வரையிலும் வாழ்க்கைப்பயனுக்கு இடமின்றி
வாழும் மனிதனைக் காணமுடிகிறது. இச்சிறுகதையின்
கதைமாந்தர்களாகப் படைப்பாளரும், மாணிக்கமும்
விளங்குகின்றனர்.
இவர்களின் எண்ணங்களும், செயல்களும் வாழ்க்கைப்பயனையும்,
பயனற்ற
தன்மையையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.
படைப்பாளர்
சேலம் இரயில் நிலையத்தில் இருந்து மாணிக்கத்துடன் சேர்ந்து
பயணம் செய்கிறார் படைப்பாளர். மாணிக்கத்தின் இடைவிடாத
பேச்சைக் கூர்ந்து கவனித்து, அதிலிருக்கும் கருத்துகளை
அசைபோடுவதன் மூலம் பிறரோடு இயைந்துவாழும் வாழ்க்கைக்கு
உரியவராகக் காட்டப்படுகிறார். மாணிக்கம் போன்றோர் ஊரை
விட்டு ஊர் வந்து பிழைப்பு நடத்துவதற்கான காரணத்தை ஆராயும்
அளவில் அவர் பிறர் மீது கொண்டிருக்கும் அக்கறை
வெளிப்படுகிறது. கேரளத்தில் வாழும் நம் ஊர்ப் பெண்கள் கள்
குடிப்பதையும், வீதியில் குடும்பம் நடத்துவதையும் கேள்விப்பட்டுப்
படைப்பாளர் வேதனை கொள்வது அவருடைய கலாச்சாரப்பற்றைக்
காட்டுவதாயுள்ளது. நாடோடிகளுக்கு இருக்கும் உணர்வு கூட
இவர்களுக்கு இல்லை என்று வேதனை கொள்வது
சிந்தனைக்குரியதாகிறது. இந்தியத் தெருக்களிலும், தமிழகத்
தெருக்களிலும் அதிகமாய் வாழ்பவர்கள் தமிழர்களே என்றறிந்து
வேதனைப்படுவது நாட்டு நலம் பேணும் பண்பாகக் கருத
இடமளிக்கிறது. நம்முடைய
இலட்சியக் கனவுகளும், கலையிலக்கிய
வெற்றிகளும் தோல்வியடைந்து விட்டதாக எண்ணி
வேதனைப்படுவது இவரது உயரிய வாழ்க்கைச் சிந்தனையாகிறது.
மக்களின் குறிக்கோள் இல்லாத வாழ்வை எண்ணி
வேதனைப்படுகிறார். மாணிக்கம் வேண்டுமென்றே சகோதரியின்
காதலன் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்குச் சென்றதைக் கேட்டு
அதிர்கின்றார். மீண்டும் அவனைக் கொல்லும் பொருட்டே
பரோலில்
வந்திருப்பதை எண்ணிப் பதறுகிறார். இது பைத்தியக்காரத்தனம்;
அவர்கள் வாழ்வில் நீங்கள் ஏன் குறுக்கிட வேண்டும் என்று
கேட்கிறார். அதன்பின் மாணிக்கம்
உணர்ச்சி வேகத்தில் பேசுவதைப்
பார்த்து உறைந்து போகிறார். மாணிக்கத்தின் இச்செயல்களை
எல்லாம், அவர் வெறுப்பவராகக் காணப்படுகிறார். இதன் மூலம்
படைப்பாளர் கலாச்சாரம், இலட்சிய நோக்கு, பிறருக்குத் துன்பம்
செய்யாத மனம் ஆகியவற்றை வாழ்க்கைப் பயன்களாக
அடைய
வழிகாட்டுபவர் ஆகிறார்.
மாணிக்கம்
இக்கதைமாந்தர் வாழ்க்கைப் பயனின்றி வாழும் மனிதர்களை
அடையாளம் காட்டுகிறார். மாணிக்கம் பிராமணர்களைப் பற்றிய தம்
கருத்தைக் கூறுவதிலிருந்து அவர் மனத்தில் சாதி
வேற்றுமை
பதிந்திருப்பதை அறிய முடிகிறது. அவர் வன்னியக் கவுண்டராக
இருந்த போதிலும், வெள்ளாளக் கவுண்டருக்குச் சற்றும்
குறைந்தவரில்லை என்பதன் மூலம் சாதிப்பற்று வெளிப்படுகிறது.
நிலபுலன்கள் இருந்தும் விவசாயம் செய்யமுடியாமல் வெளி ஊருக்குச்
செல்வதன் மூலம் அவர் பிறந்த மண்ணுக்குப் பயனின்றி வாழும்
வாழ்க்கை காட்டப்படுகிறது. அவர் பேச்சில் எப்பொழுதும்
சினிமாவும், போதைதரும் கள்ளும், மீனும் இடம்பெறுவது அவரின்
சிற்றின்ப வாழ்க்கையைக் காட்டுவதாகின்றன. கேரளாவில் பிழைக்க
வந்தவர்களின் தெருவோர வாழ்க்கையையும், அதில் உள்ள
குறைபாடுகளையும், பெண்களின் நடைமுறைகளையும் மிகச் சாதாரண
நிகழ்வாக அவர் கூறுவதிலிருந்து
அவர் நெறிகளைக் கடந்தவராக
அறியப்படுகிறார்.
இங்ஙனம் ஊர் விட்டு ஊர் வந்து அனைத்து அடையாளங்களையும் இழந்துவிட்ட நிலையில் சாதியை
மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்வது அவரது அர்த்தமற்ற வாழ்க்கையைக்
காட்டுகிறது.
மாணிக்கம் கொண்டிருக்கும் சாதிவெறியினால் அவர் தமக்கும்
பிறருக்கும் பயனில்லா வாழ்க்கையை வாழ்பவராகக்
காட்டப்படுகிறார். தாய் மண்ணின் கலாச்சாரத்தையும்,
அடையாளங்களையும் கைவிடும் அவர், சாதி வெறியைக் கைவிடாது,
கொலை வெறியோடு அலைவது அவரது குணம் மற்றும்
அறிவுக்குறைபாட்டைக் காட்டுவதாயுள்ளது. இங்ஙனம் வாழ்க்கைக்குப்
பயன்படக் கூடியவற்றைக் கைவிடுவதும், வாழ்க்கைக்குப்
பயனில்லாதவற்றைக் கைக்கொள்வதும் ஆகிய அவர் வாழ்க்கை
பொருளற்றதாய்க் காட்டப்படுகிறது. அவர் கோபமும், வைராக்கியமும்
தேவையற்றனவாகவே
கருத இடமளிக்கிறது.
3.4.3
கடைசி வரை - சிறுகதையின் சமூகப் பயன்
சிறுகதைகள் தாம் கொண்டுள்ள கருப்பொருள்களின் தன்மைக்கு
ஏற்பச் சமூகப்பயன்களை விளைவிப்பனவாயுள்ளன. சமூகப்
பயன்களை விளைவிக்கும் சிறுகதைகளே இலக்கியத்தன்மை
பெறுகின்றன. சமூகத்தினருக்கு அறிவுறுத்தும் அளவிலான
கருத்துகளைப் பெற்றிருக்கும் இச்சிறுகதையும் சமூகப்
பயனுடையதாகிறது. அதைக் கீழ்வருமாறு காணலாம்.
வெளியூர் சென்று
வாழ்பவர்கள் நம் கலாச்சாரத்தையும்,
அடையாளங்களையும் விட்டுவிடாமல் வாழ
வேண்டும். அன்றி, இன்பமோ துன்பமோ
நம் மண்ணிலேயே வாழும் வாழ்க்கை
உடையவர்களாக விளங்க வேண்டும் என்ற
சமூகப்பாடம் படிப்பினையாகிறது.
சினிமாப் பார்த்தே வாழ்க்கையைக்
கழிப்பதும், சிற்றின்பத்தை
நாடுவதும் பயனற்ற வாழ்க்கையாக உரைக்கப்படுகிறது.
குறிக்கோளுடைய சமூக வாழ்க்கை வற்புறுத்தப்படுகிறது.
சாதியின் காரணமாய்
ஏற்படும் குரோத உணர்வு சமூகத்தின்
நலனைப் பாதிக்கும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.
நாடோடிகள் தங்களது
பாரம்பரியத்தை, தங்களுடைய தோள்
மூட்டைகளில் சுமந்து செல்வதுபோல் தெருவோரங்களில்
வாழும் சமூகத்தினரும் அவரவருடைய கலாச்சாரத்தைப்
பேண வேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது.
சாதி வேற்றுமை
சமூக வளர்ச்சிக்கும் தடையாகி அழிவுக்கு
இடமளிப்பது காட்டப்படுகிறது. நெறியற்ற
தெருவோர வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மாணிக்கம்,
நெறியுடைய காதலை மறுப்பது மனிதர்களின் சிந்தனைக் குறைபாட்டைச்
சுட்டுகிறது.
விவசாயிகளும்,
இந்திய மக்களும் அகதிகளாக
வெளியேறுவதற்கு, அரசின் பயனற்ற திட்டங்களும்,
இயற்கைப் பாதிப்புகளும் காரணங்களாகக் காட்டப்பட்டு,
மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்
கொள்வதற்கு அரசும் தகுந்த
நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்
என்பது சுட்டப்படுகிறது.
கீழ்மட்டச் சமூகத்தினர்
கல்வியறிவு பெறுவதன் மூலம் சிந்தித்துச்
செயல்பட வழியேற்படும்
என்பது அறிவதற்குரியதாகிறது.
மனிதனின் கொள்கைப்பிடிப்பு
ஆக்கத்திற்குக் காரணமாக
வேண்டுமே ஒழிய, அழிவிற்குக் காரணமாகக்
கூடாது என்பது வற்புறுத்தப்படுகிறது.
மேற்கண்ட சிறுகதையின் மூலம் மனிதர்களின் சமூக உறவுகள்
சாதியின் அடிப்படையில்
அமையாமல், மனித நேய அடிப்படையில்
அமைந்து உறவுகள் வலுப்பட வேண்டும் என்பது
உணர்த்தப்படுகிறது. மூர்க்கத்தனத்தையும், தேவையற்ற கொள்கைப்
பிடிப்பையும் தவிர்த்து முன்னேற வேண்டும் என்பதும்
அறியப்படுகிறது.
|