3.5 காலத்திற்கேற்பச் சிறுகதைகளில் கருப்பொருள்

இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மூன்று சிறுகதைகளும் வெவ்வேறு கால இடைவெளிகளில் படைக்கப்பட்ட கதைகளாகும். ஆகவே இவைகளின் கருப்பொருள்கள் ஒரே மாதிரியான அணுகுமுறையில் அமையாமல் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்றுள்ளன. படைப்பாளர்களின் சமூக அணுகுமுறை மாற்றங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. இம்மூன்று சிறுகதைகளையும் ஒப்பீடு செய்து அதன் மூலம் கருப்பொருள்களின் அமைப்பு மாற்றங்களை இப்பகுதியில் காணலாம்.

  • கல்கியின் சிறுகதையில் தனிமனிதன் மற்றும் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரச்சனை பேசப்படுகிறது. அகிலனின் சிறுகதையில் சமூகப் பிரச்சனையே வெளிப்பட்டுள்ளது. ஜெயமோகன் சிறுகதையில் தனிமனிதனைச் சார்ந்த சமூகச்சிக்கல் வெளிப்படுகிறது.

  • கல்கியின் சிறுகதையில் சமூகப்பிரச்சனையை எதிர்க்க இயலாமல் தனிமனிதர்கள் வருந்துவதும், உயிரை விடுவதும் காட்டப்படுகிறது. அகிலனின் சிறுகதையில் சமூகப் பிரச்சனையைத் தட்டிக்கேட்கும் சிறுவனைக் காணமுடிகிறது. ஜெயமோகன் சிறுகதையில் தனிமனிதர் சமூகத்திற்குக் கட்டுப்படாமல் வாழும் வாழ்க்கையில் சமூகம் பாதிப்பிற்கு உள்ளாவது காட்டப்படுகிறது.

  • கல்கியின் சிறுகதையில் சரியோ தவறோ வாழ்க்கை நெறிகளை மீறாமல் வாழவேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது. அகிலனின் சிறுகதையில் வாழ்க்கை நெறிகளைத் தங்களுக்கும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் வாழ்க்கை காட்டப்படுகிறது. ஜெயமோகன் சிறுகதையில் நெறியற்ற வாழ்க்கை காட்டப்படுகிறது.

  • கல்கியின் சிறுகதையில் பெண்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமையைக் காலம் மாற்றவேண்டும் என்பது உரைக்கப்படுகிறது. அகிலனின் சிறுகதையில் சமூகக்கொடுமையை உடனே தட்டிக் கேட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஜெயமோகன் சிறுகதையில் சமூகக்கொடுமையை விளைவிக்கும் தனிமனிதன் பிரச்சனைக்கு உரியவன் ஆவது காட்டப்படுகிறது.

  • இம்மூன்று சிறுகதைகளும் சமூகச்சிக்கல்களுக்கு இடமளிக்கக் கூடியவைகளாய் உள்ளன. கல்கியின் சிறுகதையில் சமூகநெறிகளைப் பேணுபவர்களும், சில தேவையற்ற சமூகநெறிகளைப் பேணுவதன் மூலம் பாதிப்பினை அடைபவர்களும் காட்டப்படுகின்றனர்.

எ.கா: கேதாரி தன் அம்மாவுக்குச் செய்யப்பட்ட அலங்கோலங்களைக் காணச் சகிக்காதவனாய் மனம் பாதிப்படைந்து இறக்க நேரிடுவது.

அகிலனின் சிறுகதையில் ராஜுவின் தாய் தந்தையர் சமூக நெறிகளைப் பேணாத காரணத்தால் கிராமத்தினர் துன்பம் அடைவதும், ராஜு மனவருத்தம் அடைவதும் காட்டப்படுகின்றன.

ஜெயமோகனின் சிறுகதையில் சமூகநெறியினைப் பேணாத மாணிக்கம் சமூகச் சிக்கலுக்கு உரியவனாகக் காட்டப்படுகிறான்.

மேற்கண்ட சிறுகதைகளின் மூலம் நெறியுடைய வாழ்க்கை வாழும் கேதாரி, ராஜு போன்ற தனிமனிதர்களால், அவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் வாழும் சமூகம் காக்கப்படுவது காட்டப்படுகிறது. நெறியில்லாத மாணிக்கம் போன்றவர்களால் அவர்களுக்கும் பயனின்றி, சமூகமும் பாதிக்கப்படுவது காட்டப்பட்டு, காலமாற்றத்தை உணர்த்துகிறது.

3.5.1 சிறுகதைகளின் மொழிப்பயன்

ஒரு படைப்பின் சிறப்பிற்கு அதன் மொழி ஒரு முக்கியக் காரணமாகிறது. மொழியின் வன்மையே மக்கள் அதன் கருத்தைப் பெறுவதற்கு உதவுகிறது. இவ்வகையில் இம்மூன்று சிறுகதைகளிலும் மொழி எங்ஙனம் சிறப்பிடம் பெறுகிறது என்பதைக் காண்போம்.

  • 'கேதாரியின் தாயார்' சிறுகதையில் பிராமண சமூகத்திற்குரிய மொழி பயன்படுத்தப்பட்டு, அச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. இக்கதையில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்களின் குணநலன்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. அச்சமூகத்திற்குரிய சிக்கல் அதன் மொழியின்மூலம் வெளிப்படும்போது அச்சமூகக் குறைபாடுகளையும் உணர முடிகிறது. 'புருஷனை இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தை ஒழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம் சாதிக்கு மட்டும் வேண்டாம்' என்று கேதாரி கூறும் சொற்களால் கதையின் கருப்பொருள் சிறப்பாக வெளிப்படுவதோடு, கேதாரியின் பாதிப்பினைப் படிப்பவர்களும் அடைய, மொழி துணை நிற்கிறது.

  • 'புயல்' சிறுகதை காட்டும் உயர்மட்டம் மற்றும் கீழ்மட்டச் சமூக நிலைகள் மொழியின் மூலம் அறியப்படுகின்றன. உயர் மட்டச் சமூகத்தினரின் எண்ணங்கள், செயல்பாடுகள் கீழ்த்தரமானவையாக இருப்பதை மொழி அடையாளம் காட்டுகிறது. கீழ்மட்டத்தினரின் அவல வாழ்க்கையை அவர்களின் சொற்கள் வெளிப்படுத்துவனவாயுள்ளன. 'ரொம்ப நேரம் பேரம் பேசி இந்த மூன்று போர்வையை ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்' என்பதைக் கேட்டவுடன், ஈரம் நிறைந்த இளம் நெஞ்சில் அப்பொழுதுதான் பயங்கரமான கோரப்புயல் ஆரம்பமாகிறது. ‘அந்தப் புயலுக்கு முன்னே சில தினங்களுக்குமுன் வீசிய புயல் அற்பமானது' என்பதிலிருந்து ராஜுவின் எதிர்கால நடவடிக்கையை மொழி, குறிப்பால் உணர்த்துவதைக் காணமுடிகிறது.

  • 'கடைசிவரை' சிறுகதையின் மூலம் ஊர்விட்டு ஊர் சென்று வாழும் மக்களின் கலாச்சார வாழ்க்கை மாற்றங்கள் மொழியின் மூலம் வெளிப்படுகின்றன. வெளியூரிலிருக்கும் கலாச்சார வாழ்க்கை முறைகளையும் அறிய மொழி துணை புரிகிறது. இதன் மூலம் மொழியின் வட்டார வழக்குகளை அறிய முடிகிறது. மாணிக்கத்தின் உரையாடல் மூலம் பல்வேறு இடங்களைப் பற்றிய செய்திகளை அறிய மொழி உதவுகிறது. மாணிக்கம் ஊர் ஊராகச் சுற்றிப் பலவகைப்பட்ட அனுபவங்களையும், வாழ்க்கை மாற்றங்களையும் அறிந்திருந்த போதிலும் கடைசிவரையிலும் அவனுடைய விடாப்பிடியான எண்ணமாகச் சாதி வெளிப்படுகிறது. இது அதிர்ச்சியூட்டும் செய்தியாக, சமூகச் சிக்கலாக மொழியின் மூலமே வெளிப்படுகிறது.

படைப்பாளர்கள் தங்கள் கருத்துகளை, செய்திகளைத் தெரிவிப்பதற்கு மொழியின் உதவியையே நாடுகின்றனர். அவர்கள் மொழியைச் சரியாகப் பயன்படுத்துவதன் வாயிலாகவே விரும்பிய பலனைச் சமூகம் அடைகிறது. மேற்கண்ட சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் மொழியின் ஆளுமைக்கு இடமளிப்பனவாயுள்ளன.

3.5.2 சிறுகதைகளின் இலக்கியப் பயன்

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மனித குலத்தின் மேம்பாடு, எதிர்காலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு நம்பிக்கையை வளர்க்கும் அளவில் அமைந்து இலக்கியப் பயன்மிக்கனவாகின்றன. இச்சிறுகதைகள் சமூக உணர்வுகளுக்கு இடமளித்து, தம் இலக்கியத்தரத்தைக் கனமாக்கிக் கொண்டுள்ளன. இச்சிறுகதைகள் சமூகத்தின் ஊக்கத்திற்கும், ஆக்கத்திற்கும் இடமளித்துள்ளன. இவை சிந்தனையைத் தூண்டி, சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கு வழியேற்படுத்தித் தருவதால் இலக்கிய உயர்வினை எட்டியுள்ளன. சமூகத்தின் நன்மை, தீமைகளை எடுத்துக் கூறும் அளவில் இச்சிறுகதைகள் இலக்கியப் பயன் நிரம்பியனவாயுள்ளன. இலக்கியத்தின் ஆதாரமாய் விளங்கும் வாழ்க்கை அனுபவங்களை இச்சிறுகதைகள் எடுத்தியம்பி இலக்கியப் பயனைத் தம்முடையதாக்கிக் கொண்டுள்ளன.

  • இலக்கிய நயம்
  • பாடப்பகுதிக்குரிய சிறுகதைகள் எதார்த்தம், தெளிவான நோக்கு, எதிர்காலச் சிந்தனை, சிறுமைகளைக் கண்டு சீறி எழும் சினம், உன்னத நோக்கு, உயர்வான கதைமாந்தர்கள், கதையில் ஊடுருவி நிற்கும் நன்மை, தீமைகள், ஆவேசம், புதிய உத்திகள், மொழிநடை, இலக்கியநயம் இவையனைத்தையும் ஒருங்கே பெற்று, இலக்கியத்தன்மை கொண்டுள்ளன.