2.4 நாட்டுப்புறக் கூத்துகள்

உழைக்கும் மக்களாகிய நாட்டுப்புற மக்களிடம் பலவிதமான இசை, நாடகக் கலைப் பண்புகள் இன்றும் வழங்கி வருகின்றன. பரம்பரை பரம்பரையாக வாழும் கிராமியக் கலைஞர்கள் கூத்துகளை ஆடி வருகின்றனர். அவர்களால்தான் கிராமியக் கலைகள் காப்பாற்றப்பட்டும் வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள் தமிழ்நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் விளங்கி வருகின்றன. மேலும் பல ஆடல்கள் நாடகத்தின் பகுதிகளாகவே உள்ளன. நாடகக் கூறுகள் நிறைந்த சில, குறிப்பிட்ட ஆடல்களை ஆய்வது தொன்மை நாடகப் போக்கை உணர உதவும்.

2.4.1 கும்மிப் பாட்டு

இரு கைகளையும் கொட்டியவாறு ஆடிப்பாடுவதைக் கும்மிப் பாட்டு என்று கூறுவர். பெரும்பாலும் பெண்களே இக்கூத்தை ஆடுவர். கைகொட்டிப் பாடிக் கொண்டே சுற்றி வருவர். ஒரு பாடலுக்கு மாத்திரமன்றிக் கதைத் தொடர்பான பல பாடல்களுக்கும் அவிநயம் செய்து ஆடுவதைக் காணலாம். அவற்றை நோக்கும்போது அவற்றுள் காக்கப்படும் நாடகப் பண்புகள் நமக்குத் தெளிவாகின்றன.

பல கும்மிப் பாடல் நூல்கள் அச்சாகியுள்ளன. இந்நூல்களில் மற்றைய நாடக நூல்களைப் போன்று காப்பு, வாழ்த்து, வணக்கம், கதை வரலாறு, வாழி என்ற முறை வைப்புக் காணப்படுகின்றது. சில இடங்களில் அந்தாதி அமைப்பில் கண்ணிகள் தொடர்ந்து காணப்படுகின்றன. அவை நாடக உரையாடல் போன்று அமைந்துள்ளன.

கும்மிப் பாட்டு வளர்ச்சியடைந்த நிலையில் ஒயில் கும்மி அல்லது ஒயிலாட்டம் என்ற ஆடல் நடைபெறுகிறது. இதில் பங்கு பெறும் நடிகர்கள் பாத்திரங்களுக்குத் தக்க உடைகளை அணிந்திருப்பர். பாடல்களுக்கு இடையே சிறிய உரைநடை, உரையாடல் இடம் பெறும். கோவை மாவட்டத்தில் இந்த ஆட்டம் அதிகம் நடைபெறும். முருகன், காத்தவராயன், மதுரை வீரன் ஆகிய கதைகள் நடித்துக் காட்டப்படும்.

2.4.2 பாவைக் கூத்து

பாவைக் கூத்து என்பது பயன்படுத்தப் பெறும் பாவைகளைக் கொண்டு இருவகைப்படும். அவை தோற்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என்பனவாகும். சூத்திரதாரி போன்று ஒரு மனிதன் பாவைகளை நிகழ்ச்சிகளுக்குத் தக்கவாறு ஆட்டிப் பல குரலில் பாடியும் பேசியும் கதையை வளர்த்துச் செல்வான். ஒன்றை ஒன்று மோத வைத்துச் சண்டைக் காட்சிகளைக் காட்டுவான். நகைச்சுவைக் காட்சிக்குத் தக்க பாத்திரங்களைக் கற்பித்துக் கொள்வதோடு, இடத்துக்குத் தக்கவாறு உரையாடல்களைப் பொருத்தமாகவும் நகைச்சுவையுடனும் அமைத்துக் கொள்வான். இராமாயணம் போன்ற கதைகளைப் பல நாட்களுக்கு நடத்துவர்.

2.4.3 பிற கலைகள்

நெல்லை, குமரிமாவட்டங்களில் பாடப்பெறும் வில்லுப்பாட்டில் கிராமத் தேவதையின் கதைகள் பாடப்படும். பல வில்லுப்பாட்டுக் கதைகள் பிற்காலத்தில் நாடகமாக நடிக்கப் பெற்றன. அதேபோல் உடுக்கடிப் பாட்டும் கதை நிறைந்த கலையாகும். கோவைப் பகுதியில் அண்ணன்மார்சுவாமி கதை, நாடகம் போன்றே, கதையுடன் பாடி நடிக்கப்படுகிறது.

காவடியாட்டம் என்பது முருகக் கடவுளின் வழிபாட்டுத் தொடர்பாக நடத்தப்படுவதாகும். ஆடலும், பாடலும் நிறைந்த இக்கலையும் நாடக அமைப்பைப் பெற்று விளங்குகிறது.

கரக ஆட்டம் இன்றும் தென் மாவட்டங்களில் மதிப்புடன் விளங்குகிறது. மாரியம்மன் கோயில்களில் பெரும்பாலும் நடக்கும் இந்த ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் கலந்து நாடகத் தன்மை பெற்றுள்ளது.

2.4.4 நாட்டுப்புறக் கூத்துகளும், நாடகங்களும்

நாட்டுப்புறக் கூத்துகள் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. நடிகர்கள் பெரும்பாலும் ஒப்பனையுடன் ஆடிப்பாடி நடிக்கின்றனர். பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இவை நடிக்கப்பட்டன. இவற்றில் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன அதிகமான பாடல்களும், ஓரளவு உரையாடல்களும் அமைந்திருந்தன. நாடகம் பெரும்பாலும் தொடக்கக் காலத்தில் நடனத்திலிருந்தும், சடங்கிலிருந்தும் தோன்றியதால் அவை ஆரம்பத்தில் கூத்து நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறக் கூத்துகளே மெல்ல மெல்ல நாடக வடிவம் பெற்றிருக்கும் என்பதே ஆய்வாளர்கள் கருத்தாகும்.

நாடகமாகிய நாட்டுப்புறக் கூத்துகள் கடவுளையும், வீரச்செயல் புரிந்தவர்களையும் பற்றியுமே கதையமைப்பைக் கொண்டிருந்தன. புராணக் கதைகளும் நடிக்கப் பெற்றன. மொத்தத்தில் எளிய, உழைக்கும் மக்கள் கலையாக நாட்டுப்புறக் கூத்து வடிவம் அமைந்திருந்தது.

2.4.5 தெருக்கூத்து

தெருக்களிலும், களத்து மேடுகளிலும், கிராமப் பொது இடங்களிலும், கோயில் வளாகங்களிலும் நடத்தப்பட்ட கலையாகத் தெருக்கூத்து விளங்கியது. இவை நடைபெற்ற இடத்தை ஒட்டியே இவற்றிற்குத் தெருக்கூத்து எனப் பெயர் ஏற்பட்டது.

தெருக்கூத்து மேடைகள் திறந்த வெளிகளிலேயே அமையப் பெற்றிருந்தன. நடிப்பதற்கேற்ற தனிமேடையமைப்பு காணப்படவில்லை. மேடைகளிலோ, காட்சிப் பின்னணிகளோ, திரைகளோ இடம் பெறவில்லை. இரண்டு கலைஞர்கள் மேடையின் முன்னே வெள்ளைத் துணியினை முன் திரையாகப் பிடித்திருப்பர்.

மக்களுக்குத் தெரிந்த பழைய புராண, இதிகாச மற்றும் நாட்டுப்புறக் கதைகளே தெருக்கூத்தில் நடிக்கப் பெற்றன. முறையான உரையாடலோ, பாடலமைப்போ இன்றி அவை இருந்ததால் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வழங்கலாயிற்று.

இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம் மற்றும் பெரிய புராணம் போன்ற இதிகாச புராண இலக்கியங்களின் கதைகள் தெருக்கூத்தாயின. மதுரை வீரன், நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, காத்தவராயன் போன்றவை தெருக்கூத்துக்கென விரும்பி ஏற்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகளாகும். இவை பெரும்பாலும் வீர வரலாறுகளாகவே இருந்தன. பெண் வேடங்களையும் பெரும்பாலும் ஆண்களே ஏற்று நடித்தனர்.

தெருக்கூத்து நாடகங்களின் பொதுவான போக்கு, நீதி போதனைகளை (நெறிகளை) மக்களிடையே தெளிவுபடுத்துவதும், பொழுதுபோக்கிற்குத் துணை செய்வதுமேயாகும். இவ்வாறு நிகழ்த்தப்பட்ட கூத்துகள் எழுத்து வடிவில் நாடக இலக்கியமாக வளராமல் போயின.