4.0 பாட
முன்னுரை |
அன்பார்ந்த மாணவர்களே!
இலக்கியங்கள் காலங்களைக்
கடந்தும், கருத்துகளைக் கடந்தும் இன்றும் நிலை
பெற்றிருக்கின்றன. அதற்குக் காரணம் அவ்விலக்கியங்கள்
பெற்றிருக்கின்ற பல்வேறு தனிச்சிறப்பியல்புகளேயாகும். கூறும்
கருத்தால் மட்டுமல்ல, உணர்த்தும் திறத்தாலும் அவை உயிர்
பெற்றுத் திகழ்கின்றன. அவ்வாறான உணர்த்தும் திறத்துக்கு
ஏற்ற வாகனமாய் அமைவது உரைநடையே ஆகும்.
கவிதையோடு வளர்ந்து வந்த உரைநடை, அதன் எளிமை
காரணமாய் உலகெங்கும் ஆட்சி செய்கின்றது. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கியப் பரப்பில்
உரைநடையின் பங்கும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உரைநடை
பற்றிய இப்பாடப் பகுதி உரைநடை இலக்கியத்தை அறிமுகம்
செய்தல், தொன்மைக்கால உரைநடைப் போக்குகள், தற்கால
உரைநடைத் தன்மைகள் என மூன்று பிரிவுகளாக அமைகின்றன.
அதில் உரைநடை இலக்கியம் தோற்றம் பெற்ற விதம்,
வரையறை, வகைப்பாடுகள், வளர்ச்சி என்ற நிலையில் ஓர்
அறிமுகமாக இப்பாடம் அமைகின்றது. இதன் வழி உரைநடை
இலக்கியத்தின் சிறப்பையும், வகைகளையும் பற்றி அறிந்து
கொள்வீர்கள். |