5.5 தொகுப்புரை

மொழியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும் உரைநடை, தமிழ் மொழியிலும் கவிதையுடன் பிறந்தது. அதற்கு உரைகூறும் விதமாக வளர்ந்தது. தொடக்க கால உரைநடை, கவிதையிலிருந்து பெரிதும் வேறுபடாமலிருந்தது.

கல்வெட்டுகளில் எழுதப்பட்ட உரைநடை மக்கள் பேசும் பேச்சு மொழியிலேயே அமைந்திருந்தது. சிறுசிறு வாக்கிய அமைப்புகளுடன் உரைநடை அமைந்திருந்தது.

தொல்காப்பியம் உரைநடைக்கு இலக்கணம் வகுத்தது. நான்கு வகை உரைநடைகளைக் கூறியது.

சங்க காலத்தில் செய்யுள்களின் கீழ், செய்யுளைப் புரிந்து கொள்ளும் விதமான குறிப்புகள் உரைநடையில் எழுதப்பட்டன. அந்த உரைநடை கற்றோர் மட்டுமே அறியும்படி அமைந்திருந்தது.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்த சிலப்பதிகாரந்தான் தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தைக் காட்டுகிறது. இசை, நாடகப் பகுதிகளில்தான் உரைநடை மிகுதியாக உள்ளதால், இசை, நாடகத்தை ஒட்டியே உரைநடை பிறந்திருக்கலாம் என்பர்.

உரை என்னும் முறையில் சிறப்புப் பெற்ற இறையனார் களவியல் உரை, கவிதையிலிருந்து உரைநடை வேறுபட்டது என்பதை உணர்த்தும் முதல் நூலாகும். வினா-விடை நடையில் உரைநடையின் தன்மை அமைந்துள்ளதையும் காணலாம். இதேபோல் பாரத வெண்பா உரைநடையும் எளிமையுடன் அமைந்துள்ளது.

உரையாசிரியர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

இளம்பூரணர் உரைநடை - நூற்பா விளக்கம், தெளிவுரை, தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்னும் சிறப்புக்கள்.

சேனாவரையர் உரை - மாணவர்களுடன் நேரில் பேசுவது போல் அமைந்த கடுமையான உரைடை.

பேராசிரியர் உரைநடை - சிறு சிறு வாக்கியங்களில் அமைந்தது.

பரிமேலழகர் உரைநடை - தேவையற்ற சொற்கள் இல்லாத தன்மை.

அடியார்க்கு நல்லார் உரைநடை - உணர்ச்சி மிகுந்த தன்மை.

நச்சினார்க்கினியர் உரைநடை - சான்றுகள் நிறைந்த தன்மை.

தெய்வச்சிலையார் உரைநடை - புதிய சிந்தனைகள் தரும் தன்மை.

சங்கரநமச்சிவாயர் உரைநடை - மேற்கோள்கள் நிறைந்த தன்மை

தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை பிற்காலத்தில் வைணவ உரையாசிரியர்களால் வளர்ந்தது. சமணர்கள் நடையும் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடையாக அமைந்தது.

தொன்மைக் கால உரைநடை இவ்வாறான தன்மைகளுடன், மேலைநாட்டார் வந்த காலம் வரை அமைந்திருந்தது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

‘உரையாசிரியர்’ என்றே அழைக்கப்படுபவர் யார்?

விடை
2.

சேனாவரையர் என்ற தொடரின் பொருள் யாது?

விடை
3.

பேராசிரியரின் உரைநடை யாரைப் பின்பற்றியதாக அமைகிறது?

விடை
4.

திருக்குறளுக்கும், பரிபாடலுக்கும் உரை எழுதிய உரையாசிரியர் யார்?

விடை
5.

‘உரைவேந்தர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை