6.0 பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடைக்குச் சிறப்பிடம் உண்டு. தொன்மைக் காலத்தில் உரைநடை முழு வளர்ச்சியின்றி இருந்தது. செய்யுளின் கையைப் பிடித்துத் தளர்நடையிடும் குழந்தையாய்க் காட்சியளித்தது. உரையாசிரியர்கள் செய்யுளுக்கு எழுதிய உரைகள், உரைநடைக்கு உரமிட்டன. உரைநடை வளர்ந்து கவிதையைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டது. இன்று எந்த ஒரு கருத்தை விளக்க வேண்டுமென்றாலும் அது உரைநடையிலேயே விளக்கப்படுகின்றது. இலக்கணமும், வடிவமும் பெற்று விளங்கிய கவிதை கூட உரைநடை வடிவமும், தன்மையும் பெற்று இன்று எழுதப்படுகின்றது. இதற்கு வித்திட்டது மேலைநாட்டார் வரவு என்பது உண்மையாகும். இப்போது தற்கால உரைநடைத் தன்மைகள் என்னும் தலைப்பில், மேலைநாட்டார் வரவால் உரைநடை பெற்ற வளர்ச்சி, அச்சு இயந்திரத்தின் வரவால் உரைநடையின் எழுச்சி, பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை உரைநடை பெற்றிருக்கும் சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றைப் பயில இருக்கின்றீர்கள். இதன் மூலம் காலங்காலமாய் உரைநடை எவ்வாறு வளம் பெற்று வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வீர்கள்.