1.2 செய்திப் பரிமாற்றம்

மக்கள் தோன்றிய பொழுதே இதழியலும் தோன்றிவிட்டது எனத் தமிழ் இதழியலாளரான அ.மா.சாமி கூறுகின்றார். என்ன நிகழ்ந்தது ? என்ற ஆர்வமே செய்திப் பரிமாற்றத்திற்கான களம் ஆகும்.

1.2.1 குறிகள், கொடிகள், வண்ணங்கள்

சைகை மூலமாகச் செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்தது; பின்னர் சித்திரம், மொழி என வளர்ந்தது. நாளடைவில் குறிகள்,  கொடிகள், வண்ணங்கள் முதலியனவும் பயன்படுத்தப்பட்டன.

  • குறிகள்
  • இதய வடிவம் காதலின் சின்னமாக உலகம் முழுவதும்  குறிப்பிடப் படுகிறது.

  • கொடிகள்
  • மீனக்கொடி பாண்டியப் பேரரசைக் குறிக்கும். மூவர்ணக்  கொடி பாரததேசத்தைச் சுட்டும். கப்பலில் மஞ்சள் கொடி  பறந்தால் அது கொள்ளை நோயின் அறிகுறியாகும்.

  • வண்ணங்கள்
  • வெண்மை நிறம் சமாதானத்தையும், பச்சை நிறம்  வளமையையும், சிவப்பு நிறம் அபாயத்தையும் குறிப்பிடுகின்றது.

    நாகரிகம் வளர வளரச் செய்திப் பரிமாற்றம் மேம்பட்டது.  அரசுகள் ஏற்பட்ட காலகட்டத்தில், மக்களுக்கு அரசாணைகளை  அறிவிப்பதற்கும், மக்கள் கருத்துகளைப் பெறுவதற்கும் தனிப்  பணியாளர்கள்  நியமிக்கப்பட்டனர்.

    1.2.2 பழந்தமிழகத்தில் செய்திப் பரிமாற்றம்

    பழந்தமிழகத்தில் செய்திப் பரிமாற்றத்துக்கான பணியை மேற்கொள்வதற்கு     வள்ளுவன், ஓலைநாயகம்    என்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மன்னனது கடமைகளுள்  மக்களின் கருத்தை அறிவது இன்றிமையாத பணியாக இருந்தது.

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்     (குறள் : 582)

    என்பது திருக்குறள். அதாவது நாட்டில் நடக்கும் எல்லா  நிகழ்வுகள் பற்றியும் அறிவது அரசனது கடமை என்பது  பொருள்.

    வேற்று நாட்டு ஒற்றர்கள் வழி ஒரு நாட்டின் செய்திகள் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. சிலப்பதிகாரத்தில்

    வம்பணி யானை வேந்தர் ஒற்றே
    தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ              (வஞ்சிக் காண்டம் :175-6)

    என்று சுட்டப்படுகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புப் பற்றிய  செய்தியை வஞ்சி மாநகரில் பறையறிவித்தால் ஒற்றர்கள் வழி  அந்தந்த நாடுகளுக்குச் செய்தி சென்று சேர்ந்துவிடும் என்பது  பொருளாகும்.

    1.2.3 மேலைநாடுகளில் செய்திப் பரிமாற்றம்

    உரோம்    நாட்டிலும்,    இத்தாலியிலும் செய்திகள் அனுப்பப்பட்டன.

  • உரோம்
  • உரோம் நாட்டில் ஜூலியஸ் சீஸர் ஆட்சிக் காலத்தில்  அரண்மனைச் செய்திகள் படைத்தளபதிகளுக்கு அனுப்பப்பட்டன.  இச்செய்திகள் ஆக்டா டைர்னா (Acta Diurna) என்று  அழைக்கப்பட்டன.

  • இத்தாலி

    இத்தாலி நாட்டில் அரசாங்கச் செய்திகளை எழுதித்  தெருக்களில் வைத்தனர். அதனை அருகில் வந்து படிப்பதற்கு  கெஜட்டா என்னும் சிறு நாணயம் கட்டணமாகப் பெறப்பட்டது.அதன் தொடர்ச்சியாகவே அரசிதழ்கள் கெசட் எனப்பட்டன.

    1.2.4 இந்தியாவில் செய்திப் பரிமாற்றம்

    இந்தியாவில் அசோகர் காலத்தில் நாட்டில் நிகழ்ந்தவைகளைக் கல்வெட்டில் பொறித்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.     புத்தமதக் கொள்கைகள்,     அரசாணைகள்  முதலியனவும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றன. இவற்றை  இந்திய இதழ்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் என்பர்.

    பிற்காலச் சோழர்களில்     இராசராசன் காலத்தில் சாஸனங்களும் கல்வெட்டுக்களும் ஏற்படுத்தப்பட்டன. இவையும்  அரசாங்கச் செய்திகளை மக்களுக்கு அறிவித்தன.

    மொகலாயப் பேரரசர்கள் ஆட்சியில் பலதரப்பட்ட  செய்தியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஒளரங்கசீப்  மன்னனது காலத்தில் நாட்டு மக்களிடமிருந்து செய்திகளைச்  சேகரிப்பதற்கு வாக்யா நாவிஸ் (Vaquia Navis) என்ற  செய்தியாளர்கள் இருந்தனர். அரசிடமிருந்து மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்வோருக்கு சவானிக் நாவிஸ்  (Savanik Navis) என்ற செய்தியாளர்கள் இருந்தனர். இரகசியச் செய்திகளைச் சேகரிப்பவர் கோஃபியா நாவிஸ் (Cofia Navis) எனப்பட்டனர்.    இச்செய்தியாளர்கள் அனுப்பும்  செய்திகள் ஒளரங்கசீப்பின் அவையில் நள்ளிரவு வரையில் பெண்களால் படிக்கப்பட்டன. இச்செய்திகளின் அடிப்படையில்  அரசாங்கம் முடிவெடுத்தது. இதனை நிக்கோலோ மானுசி  என்ற வெனிஸ் பயணி தமது குறிப்பில் சுட்டுகின்றார்.

    செய்தி மற்றும் செய்தியாளர்களின் அவசியத்தைப் புரிந்து  கொண்ட ஆங்கிலேயர்களும் செய்தியாளர்களைப் பணியில்  அமர்த்தினர். 1704ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் நாள்  இராமச்சந்திரா என்பவரை ஹூக்ளியில் வக்கீலாக நியமித்தனர்.  ஆங்கிலேயர்கள் தொடர்பான    செய்திகளைத் தமது தாய்மொழியிலேயே தெரிவிக்கலாம் என்றும் அவருக்கு  அறிவிக்கப்பட்டது.

    இவ்வாறு இந்தியாவில் செய்திப் பரிமாற்றம் வளர்ந்து  வந்திருக்கிறது.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    ‘ஜர்னலிஸம்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம்  எது ?

    2.

    ‘இதழ்’ என்பதனைக் குறிக்கும் வேறு தமிழ்ச்  சொற்கள் யாவை?

    3.

    பழந்தமிழகத்தில் செய்திப் பரிமாற்றத்திற்கு என  நியமிக்கப்பட்டிருந்த பணியாளர்கள் யாவர்?

    4.

    ‘ஆக்டா டைர்னா’ - விளக்குக.

    5.

    ‘இந்திய இதழ்களின் முன்னோடி’ - குறிப்பு வரைக.