6.2 அறிஞர்களின் கருத்துகள்

இதழ்களின் சுதந்திரம் பற்றி அறிஞர்களின் கருத்துகளைக் காண்போம்.

  • வின்ஸ்டன் சர்ச்சில்
  • ‘சுதந்திர மனிதன் போற்றும் ஒவ்வொரு உரிமையையும் தூங்காமல் கட்டிக் காக்கும் காவலன் சுதந்திரமான இதழே’ என்கிறார்.

  • காந்தியடிகள் கருத்து
  • ‘இதழ்களின் நோக்கம் மக்களுடைய எண்ணங்களை நல்ல முறையில் புரிந்து கொண்டு அதை வெளியிடவேண்டும். மக்களிடம் சில நல்லெண்ணங்களை, இலட்சியங்களை வளர்க்கவும் உருவாக்கவும் முயல வேண்டும். மூன்றாவதாகச் சமுதாயத்தில் காணப்படும் பொதுவான குற்றங்களைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்’ என்கிறார்.

    மேலும், ‘சுதந்திரமாகப் பேசுதல், சுதந்திரமாகக் கூடுதல், சுதந்திரமான இதழ்கள் முதலியவற்றைக் கொண்டு வருவதுதான் சுயராஜ்யம் என்பதன் முழுப்பொருள் ஆகும்’ என்றும் உரைக்கின்றார்.

  • நேருவின் கருத்து
  • ‘இதழ்களின் சுதந்திரம் என்பது வெறும் கோரிக்கை முழக்கம் மட்டும் அல்ல. அது மக்களாட்சி வழிமுறையில் மிகவும் இன்றியமையாத இயல்பாகும். இதழ்கள் எடுத்துக் கொள்ளும் உரிமைகளை அரசு விரும்பாவிட்டாலும் அவற்றை ஆபத்தானது என்று கருதினாலும், இதழ்களின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை’ என்று நேரு கூறுகின்றார்.

  • ஹென்றி காபோட் லாட்ஜ்
  • ‘இதழியல் சுதந்திரம் என்பது உலகமெல்லாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயரிய கொள்கை ஆகும். விமரிசனத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் யாரிடமும் குறையற்ற உண்மை இல்லை என்பதும் இக்கொள்கையின் அடிப்படையாகும்’ என்று கூறுகிறார்.

  • ஆர்.சி.எஸ். சர்க்கார் கருத்து
  • ‘இதழ்கள் மக்களுக்கு எல்லாவற்றையும் தெரிவிக்கவும், பொது விவாதத்தையும் அறிவார்ந்த திறனாய்வையும் உருவாக்கும் வாய்ப்பினை வழங்கவும் வேண்டுமானால் இதழ்கள் சுதந்திரமாகவும் (Freedom) தனித்தும் (Independent) இருக்க வேண்டும். இந்த இரண்டு பண்புகளும் பிரிக்க முடியாதவை. இவை இரண்டும் மிகவும் இன்றியமையாதவை. சுதந்திரமான இதழ் தனித்து நிற்கும் இதழாகவும் இருக்க வேண்டும்’ என்று விரிவாக இதழியல் சுதந்திரம் பற்றி உரைக்கின்றார்.

    6.2.1 இதழியல் சுதந்திரம் : வரையறை

    இதழியல் சுதந்திரம் என்பது சில ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டதாகும்.

    • உண்மையை மட்டுமே இதழ்கள் வெளியிட வேண்டும்.

    • ஒருவருக்கும் அஞ்சக் கூடாது.

    • ஆணவமாக நடந்து கொள்ளக் கூடாது.

    • உண்மையை வெளியிடுவதில் எவ்விதமான தியாகமும் செய்யத் தயங்கக் கூடாது.

    • செய்திகளின் மூலத்தை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

    • எல்லாப் பருவத்தினரும் பால் வேறுபாடு இல்லாமல் படிக்கும் விதத்தில் எழுத்துகளின் தன்மை இருக்க வேண்டும்.

    • குரல் எழுப்ப முடியாத எளியவர்களையும் அணுகி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வெளியிட வேண்டும்.

    • ஒருவர் மீது குற்றம் சாட்டி எழுதினால் குற்றம் சாட்டப்பட்டவர் பதில் அளிக்கவும் இதழ்களில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

    இந்நெறிகளின்படி செயல்பட்டால் இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதோடு இதழ்களின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும் எனலாம்.

    இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதோடு தமக்குள்ள பொறுப்பினையும் கடமையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பொறுப்பும் கடமையும் இல்லாத சுதந்திரம் படிப்படியாகக் குறைந்து மறைந்து போகும். ஆகவேதான் காந்தியடிகள், ‘இதழியல் சுதந்திரம் என்பது ஆற்றல் மிக்க கருவி. அது கட்டுப்பாடற்றுச் செயல்பட்டால், அழிவினை உண்டாக்கும் காட்டாற்று வெள்ளமாகிவிடும்’ என உரைக்கின்றார்.

    மேற்கூறியவற்றின் அடிப்படையில், இதழியல் சுதந்திரம் என்பது ‘செய்திகளை உண்மை மாறாமல் யாருக்கும் அஞ்சாமல் உள்ளவாறே (அச்சிட்டு) வெளியிடுவதும் அது குறித்த பொறுப்பையும் கடமையையும் ஏற்றுக் கொள்வதும் ஆகும்’ என வரையறுக்கலாம். அதாவது இதழியல் சுதந்திரம் என்பது கட்டுப்பாடு, பொறுப்பு, கடமையுணர்வு ஆகியவற்றுடன் உண்மைகளை அறிவிப்பது ஆகும்.

    6.2.2 இதழியல் சுதந்திரத்தின் தேவை

    1977ஆம் ஆண்டு பிரண்ட்-ரிச்-நாவ்மான்-ஸ்டிஃபிங் என்ற பன்னாட்டு இதழியல் நிறுவனம் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியது. அக்கருத்தரங்கில் பங்கு கொண்ட இந்திய இதழியலாளர்கள் இந்தியாவில் இதழியல் சுதந்திரமும் மக்களாட்சியும் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டனர். அவ்வறிவிப்பு இதழியல் சுதந்திரத்தின் தேவையை உரைக்கிறது என இதழியல்கலை என்ற நூல் கூறுகின்றது. அவ்வறிவிப்பு வருமாறு :

    (1) எல்லாச் சுதந்திரங்களின் இதயமாக இதழியல் சுதந்திரம் இருக்கின்றது. செய்திகளையும், சிந்தனையையும் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள இயலாவிட்டால், வேறு எந்த உரிமையும் கிடைக்காமல் போய்விடும். சுதந்திர சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுதான் இதழியல் சுதந்திரம்.

    (2) மக்களாட்சியில், வேறுபட்ட பங்கினைச் செய்ய இதழ்களுக்குப் பிரிக்க முடியாத உரிமை இருக்கின்றது. பொதுநல ஈடுபாட்டோடு எல்லா நிலைகளிலுள்ள அதிகாரத்தையும் விமர்சிக்கும் உரிமை இதழ்களுக்கு உண்டு. சமுதாயத்திற்குப் பொறுப்புள்ளதாக, எல்லாவகைச் செய்திகளையும் அச்சமின்றி, சிதைக்காமல், மறைக்காமல் வழங்குவது இதழ்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றச் சுதந்திரம் தேவை.

    (3) மக்கள் தங்கள் விருப்பப்படி வெளியிடவும் செய்தித்தாள்களைப் படிக்கவும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியருக்கு நிர்வாகத்தின் தலையீடின்றிச் செயல்படும் உரிமை இருக்க வேண்டும்.

    (4) சுதந்திரமான இதழ்கள் அதன் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு இதழ்கள் தம்மைத்தாமே நெறிப்படுத்திக் கொள்வதும், கட்டுப்படுத்திக் கொள்வதும் தேவையாகும்.

    (5) ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி நிறுவனங்கள் (News Agencies) இருக்க வேண்டும். அவை அரசின் கட்டுப்பாடின்றி, போட்டி போட்டுக் கொண்டு செயல்பட வேண்டும்.

    (6) இதழியல் சுதந்திரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக் கூடாது. தனி இதழ்களின் விளம்பரக் கட்டணங்களை நிர்ணயித்தல், அரசின் விளம்பரங்களை வழங்குவதன் மூலம் கட்டுப்பாடுகளை விதித்தல், காகிதம் வழங்குவதில் மறைமுகமாக அச்சுறுத்தல் போன்றவற்றை அரசு பின்பற்றக் கூடாது.

    (7) செய்திகளின் கட்டுப்பாடற்ற ஓட்டத்திற்குச் சுதந்திரமான இதழ்கள் மட்டுமின்றி, சுதந்திரமாகவும் போட்டியிடும் வகையிலும் செயல்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் தேவை.

    மேற்கூறிய ஏழு கருத்துகளும் உலகளாவிய இதழியல் சுதந்திரத்தின் தேவையை உணர்த்துவனவாக உள்ளன எனலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    இதழியல் சுதந்திரம் குறித்து இதழியல் குழு (Press Commission) கூறுவது யாது?

    2.

    சுதந்திரத் தகவல் மையம் எங்குள்ளது?

    3.

    இதழியல் சுதந்திரம் - வரையறை செய்க

    4.

    இதழியல் சுதந்திரத்தின் தேவை குறித்து இரண்டு கருத்துகளை எழுதுக