|
6.4 உலக நாடுகளில் இதழியல் சுதந்திரம் இதழியல் வரலாற்றில் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை இதழியல் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதை அறிய முடிகிறது. சர்வாதிகார ஆட்சி முறை மட்டுமின்றி மக்களாட்சியும் இதழ்களை அடக்கியாள முயற்சி செய்கின்றன. இதழ்களின் ஆற்றலுக்கு அஞ்சாத ஆட்சியாளர்கள் இல்லை. நெப்போலியன், ஆயிரம் ஈட்டிகளைக் காட்டிலும், நான்கு கிளர்ச்சிப் போக்குடைய இதழ்கள் நாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கும்’ என்று அஞ்சியது நினைவிற்கு உரியது ஆகும். இங்கிலாந்து நாட்டில் ஜான் வில்க்ஸ் என்பார் நார்த்பிரிட்டன் என்ற இதழை நடத்தினார். அவ்விதழில் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சொற்பொழிவைக் கடுமையாக விமரிசித்தார். ஜான் வில்க்ஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கைது செய்யப்பட்டார். காமன் சபையினராலும் (House of Common) பிரபுக்கள் சபையினராலும் (House of Lords) குற்றம் சாட்டப்பட்டு இறுதியில் நாடு கடத்தப்பட்டார்; 1768ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இங்கிலாந்தில் நுழைந்தார். அதன் பின்னர் வில்க்ஸ் தொடுத்த வழக்குகள் தனிமனித சுதந்திரத்தோடு இதழியல் சுதந்திரத்திற்கும் அடித்தளம் இட்டன எனலாம். அமெரிக்காவின் பிரபலமான நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் என்பதாகும். அவ்விதழில் ஆண்டர்ஸன் என்பவர் 1972ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வென்ற நிக்ஸன் பற்றிக் கட்டுரை வெளியிட்டார். அக்கட்டுரையில், நிக்ஸன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளைத் தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டார் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு வாட்டர்கேட் ஊழல் என வரலாறு பெயரிட்டுள்ளது. இதழில் வெளிவந்த இச்செய்தியால் நிக்ஸன் பதவி விலகினார். இதழியல் சுதந்திரத்தால் மக்களாட்சி முறைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. |