| 
 2.1 செய்தியாளர் (நிருபர்)
  
தொடக்கக் காலங்களில் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்திகளைக் கடிதம் மூலம் அனுப்பினர். கடிதத்தினை வடமொழியில் நிருபம் என்று அழைப்பர். எனவே     செய்திகளை எழுதி அனுப்புகின்றவர்களை நிருபர்கள் (Reporters) என்று கூறினர். தமிழில் இவர்களைச் செய்தியாளர்கள் என்று குறிப்பிடுகிறோம். 
 • பெயர் வெளியிடல் 
 ஒரு காலத்தில் செய்தியாளர்களின் பெயர்களை வெளியிடாமல் இதழ்கள் இரகசியமாக வைத்திருந்தன. பொதுமக்களும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. பெரிய நாளிதழ்கள் முக்கியமான செய்திகளோடு     அவற்றை எழுதிய செய்தியாளர்களின் பெயர்களையும் வெளியிடுகின்றன. இது திறமையான செய்தியாளர்களுக்குப் பெயரையும் புகழையும் தேடித் தருகின்றது.  
 • விளக்கம் 
 நாளேட்டிற்கு வேண்டிய செய்திகளை இனங்கண்டு நாடித் தேடிச் சென்று சேகரித்து, தொகுத்துத் தருபவர்கள் செய்தியாளர்கள்.  
 2.1.1 செய்தியாளரின் முக்கியத்துவம் 
 செய்தியாளர்கள் இல்லை என்றால் செய்திகள் இல்லை; செய்திகள் இல்லையென்றால் செய்தித்தாள்கள் இல்லை என்னும் 
 அளவுக்குச் செய்தியாளர்கள்  முக்கியம் வாய்ந்தவர்கள். 
 • கட்டிடச் செங்கல் 
 "கட்டிடம் கட்டும் ஒரு கொத்தனாருக்குச் செங்கல் எப்படி முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு செய்தி நிறுவனத்திற்குச் செய்தியாளர். ஒரு செய்தித்தாள் என்பது அதனுடைய செய்தியாளர்கள் எப்படி உருவாகின்றார்களோ அப்படித்தான் அமையும்" என்று எம்.வி.காமத் கூறுகிறார்.  
 • காலும் கையும் 
 “பத்திரிகைகள், நாட்டின் கண்களும் காதுகளும் ஆகும் என்றால் நிருபர்கள், பத்திரிகைகளின் கால்களும் கைகளும் ஆவார்கள்” என்று எம்.செல்லையா என்பவர் விளக்குகிறார்.  
 • ஆக்கலும் அழித்தலும் 
 “ஒரு செய்தித்தாளின் பெருமையும் நம்பிக்கையும் பெரிதும் 
 அதனுடைய செய்தியாளர்களையே சார்ந்துள்ளன. அவர்களால் ஒரு செய்தித்தாளை ஆக்கவோ அழிக்கவோ முடியும். அவர்கள் தான் ஒரு செய்தித்தாளிற்கு வாழ்வு தரும் குருதி போன்றவர்கள்” என்று ரெங்கசாமி பார்த்தசாரதி என்பவர் கூறுகிறார். 
 • முகவர் 
 “தொழில் முறைச்     செய்தியாளர்கள் வாசகரின், பார்வையாளரின் அல்லது கேட்பவரின் கண்களாகவும், காதுகளாகவும், கால்களாகவும், மூளையாகவும் திகழ்கின்றனர். ஒரு செய்தியாளர் வாசகரின் சிந்திக்கும் முகவர் (thinking agent) ஆவார்” என்று ஜேம்ஸ் எம். நீல் என்பவர் கூறுகிறார்.  
 • இதயம் 
“செய்தியாளர் இதழியலின் இதயமாவார்” என்று சூசானே எஸ்.பிரவுன் என்பவர் கூறுகிறார். 
 இவ்வாறு இதழியல் அறிஞர்கள் செய்தியாளரின் சிறப்பைக் கூறியுள்ளார்கள். 
 • அடிப்படை 
 ஒரு செய்தித்தாளின் அடிப்படையாகச் செய்தியாளர் திகழ்கிறார். செய்தித்தாளுக்கு வேண்டிய மூலப்பொருட்களைத் திரட்டித் தருகின்ற, அருமையான, கடினமான, சுவையான பணி அவருடையது. அவர் சாதாரண மனிதர் என்றாலும், தொழிலைச் செய்கின்ற பொழுது சகலகலா வல்லவராகப் பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.  
 • முத்து எடுப்பவர் 
 சிறந்த செய்தியாளர்கள் வரலாறு படைக்கிறார்கள். கடலில் மூழ்கி முத்து எடுப்பது போல, பல செய்திகளை வெளியே கொண்டு வந்து பெருமையும் புகழும்  பெற்ற செய்தியாளர்கள் இருக்கின்றனர். 
 ஆதலால் “ஓர் அறிவார்ந்த ஆசிரியரை விட அறிவார்ந்த செய்தியாளர் மிகவும் மதிப்புடையவர்” என்று அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தை (Associated Press) அமைத்த மெல்வில் இ.ஸ்டோன் கூறுகின்றார்.
   |