5.0 பாட முன்னுரை

செய்தியாளரின் பணிகளில் மிகவும் சுவையானது நேர்காணல் நடத்துவதாகும். இதழியலாளருக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், பலவற்றை அறிந்து கொள்ளும் வழிமுறையாகவும் நேர்காணல் விளங்குகிறது.

“நேர்காணல் இல்லையேல் செய்திகள் இல்லை”, “செய்தி மூலங்களில் முதன்மையானது நேர்காணல்”, “நேர்காணல் நடத்தத் தெரியாதவர் செய்தியாளராக முடியாது” என்று பலவகையாகக் கூறி, நேர்காணலின் சிறப்பை வலியுறுத்துகின்றனர்.

“பேட்டி ஒரு கலை. அதற்கு அறிவும் அனுபவமும் வேண்டும்” என்று ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகின்றார்.

நேர் காணும் கலையாக விளங்கும் இந்த முறை, செய்திகளைச் சேகரிக்க ஒரு நெகிழ்ச்சியான முறையாகும். பொதுவாக, நேர்காணல் என்பது நேர்காணப் படுவோர்க்கும் விளம்பரமாக அமைவதால் பெரும்பாலானவர்கள் நேர்காணலை விரும்புகின்றனர். ஒரு சிலர் நேர்காணல் தரத் தயங்கவோ, தவிர்க்கவோ நினைக்கின்றனர்.