6.0
பாட முன்னுரை
அமெரிக்க
இதழாளர் எச்.மார்னிஸ், செய்தி என்பதை “அவசர அவசரமாக நடைபெறும்
வரலாறு” என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட செய்தியைச் சுமந்து
வரும் செய்தித்தாளை எப்படிப் படித்தாலும், எவ்வளவு நேரம் படித்தாலும்,
செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடிவதற்குக் காரணம் அவற்றை
எழுதும் முறைகளே.
ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திற்கும் பல்லாயிரக்கணக்கான செய்திகள்
வந்தாலும் அவற்றை முழுமையாக வெளியிட முடியாது.
இந்திய நாட்டுப் பத்திரிகைகள் எட்டு முதல் இருபது பக்கங்கள் வரை மட்டுமே
கொண்டு வெளிவருகின்றன. இதனால் சில தேர்ந்தெடுக்கப்பட்ட
செய்திகளையே, சுருக்கமாக, செய்தி இதழ்களில் வெளியிட முடிகிறது. மேலும்
வாசகர்களாலும் குறிப்பிட்ட அளவு நேரமே இதழ்களைப் படிக்க ஒதுக்க முடிவதால்,
செய்தியின் மையக் கருத்துச் சிதையாமல் செய்தியாளர்களும், செம்மையாளர்களும்
செய்திகளைச் சுருக்கித் தருகின்றனர்.
அவசரமான
நேரங்களில் வாசகர்கள் செய்தித்தாளைப் படிப்பதால் அலங்கார நடை, குழப்பமான
மிக நீண்ட வாக்கியங்கள், அகராதியில் அர்த்தம் தேட வேண்டிய சொற்கள்
ஆகியவற்றை நீக்கி, மிக எளிதான ஒரு நடையைப் பத்திரிகையாளர் பின்பற்றுகின்றனர்.
இவ்வாறு பின்பற்றும் நடையைக் கொண்டு, எவ்வாறு செய்திகளை எழுதுகின்றனர்,
அவற்றை எவ்வாறு செம்மையாக்குகின்றனர் என்பவை பற்றிய கருத்துகள் இங்குத்
தொகுத்துக் கூறப்படுகின்றன. |