2.2 வெகுசன இதழ்களின் அமைப்பு

இதழ்கள் எண்ணிக்கையையும் அதைப் படிக்கும் மக்களின் எண்ணிக்கையினையும் கொண்டு நாளிதழ் தவிர்த்த பிற இதழ்களை வெகுசன இதழ், சிற்றிதழ் என இரண்டாகப் பிரிக்கலாம்.

அதிக எண்ணிக்கையும், படிப்பவர்களையும் கொண்ட வெகுசன இதழ்களின் அமைப்பு, வடிவம் என்பது புத்தக அளவிலும் A4 அளவிலும் அமைகின்றன.

ஏறக்குறைய 50 பக்கம் முதல் 200 பக்கம் வரை கொண்டதாகவும் முகப்புப் பக்கம் வண்ணக் காகிதத்துடன் இதழின் பெயர், விலை, தேதி முதலியனவற்றைக் கொண்டதாகவும் வெகுசன இதழ் அமைகின்றது. பெரும்பான்மையான வெகுசன இதழ்கள் வணிகத்தை முதன்மையானதாகக் கொண்டு விளம்பரத்தினாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

வெகுசன இதழ்கள் அவற்றின் கால அளவுக்குத் தக்க உள்ளடக்கத்தைப் பெறுகின்றன. மிகுதியாக அரசியல், சினிமா முதலியனவற்றை மையமாகக் கொண்டே வெகுசன இதழ்கள் தங்களின் உள்ளடக்கத்தை அமைக்கின்றன.

பெரும்பான்மையான வெகுசன இதழ்கள் வாரம் இருமுறை, மாதம் இருமுறை, வார இதழ், மாத இதழ், சிறப்பிதழ் முதலிய நிலையில் அமைகின்றன. உள்ளடக்கமும் இவற்றைச் சார்ந்தே அமைகின்றது.

குமுதம், ஆனந்த விகடன், ராணி, குங்குமம், கல்கண்டு, தேவி, மங்கையர் மலர் முதலியன வெகுசன இதழ்களாகக் கருதப்படுகின்றன.

வெகுசன இதழ்களின் உள்ளடக்கத்தைவிட அட்டைப் படம் அதன் விற்பனையை அதிகரிக்கிறது. நடிகைகளின் கவர்ச்சிப் படம், அரசியல் கிசுகிசுக்களை மேல் அட்டையில் போடுவது முதலியன முக்கியமானதாக அமைகின்றன.

வெகுசன இதழ்களில் ‘இந்தியா டுடே’ குறிப்பிடத்தக்க சில சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக அமைகிறது.

ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், நக்கீரன் முதலிய வெகுசன இதழ்கள் அந்தந்த நாளின் அரசியல், சினிமா, சமூகம் குறித்த கருத்தாடல்களுக்கு முக்கிய இடம் கொடுப்பனவாக அமைகின்றன.

ஒரு பேட்டி, 1,2 சிறுகதைகள், சில கவிதைகள், ஒரு தொடர், விமர்சனம், சில சினிமா, அரசியல் கிசுகிசு, புதிர்ப் போட்டிகள், படிப்பவர் குரல், நகைச்சுவைகள், விளம்பரம், ராசி பலன் முதலியன வெகுசன இதழ்களின் பொதுவான உள்ளடக்கமாக அமைகின்றன.

மேலும் சினிமா இதழ், பக்தி இதழ்; தொழில், கல்வி, மகளிர் இதழ்கள் முதலியன தலைப்பிற்கேற்றாற் போல் உள்ளடக்கத்தைப் பெறுகின்றன.

பெரும்பாலும் உள்ளடக்கத்தில் இடம்பெறும் செய்தியின் தலைப்புகள் படிப்பவர்களை ஈர்ப்பனவாக அமையும். வாங்கும் வரை இருக்கும் ஈர்ப்பு, படித்து முடித்தவுடன் இருப்பதில்லை.

மேலும் இதழின் ஆசிரியர், துணையாசிரியர் பெயர், ஆண்டுச் சந்தா, படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி முதலியனவும் உள்ளன. அவ்வப்போது தொலைக்காட்சியிலோ, நாளிதழ்களிலோ பரவலாகப் பேசிக் கொள்ளும் செய்தியே முக்கியச் செய்தியாக அமைகிறது.

தீபாவளி மலர், பொங்கல் மலர், ஆண்டு மலர், மாணவர் மலர், மருத்துவ மலர் முதலியன ஆண்டுக்கொரு முறை வருதலால் அவற்றின் பெயரின் தன்மைக்கேற்ப உள்ளடக்கத்தையும், A4 அளவையும், அதிகப் பக்கங்களையும் கொண்டு அமைகின்றன.

மேற்குறித்த ஆண்டு மலர்கள் நாளிதழ், வார இதழின் சிறப்பு வெளியீடாக வரும்.

சான்றாக மாணவர் மலர் தினமணி போன்ற நாளிதழின் வெளியீடாக வரும். இதில் பள்ளி, கல்லூரியின் பெயர்கள், படிப்பின் பெயர்கள், பாலிடெக்னிக், ஐ.ட்டி.ஐ., கணினி மையம் முதலியவை பற்றிய செய்திகள் உள்ளடக்கமாக அமைகின்றன.

வெகுசன இதழ்கள் பல அதன் பெயர் (தலைப்பு)களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தைப் பெறுகின்றன.

சோதிடம், சக்தி விகடன், குமுதம் பக்தி, ஞானபூமி, ஆன்மிகம் முதலியன குறிப்பிடத்தக்க பக்தி இதழ்களாக அமைகின்றன. இவற்றில் ராசி பலன், வருடப் பலன், பிறந்த தேதிப் பலன், குருப்பெயர்ச்சி, தெய்வ நம்பிக்கை குறித்த கதைகள், தெய்வங்களின் சிறப்பு முதலியன முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன.

ஹெல்த், தொழில் முன்னேற்றம், விவசாயம், தமிழ்க் கம்ப்யூட்டர், அறிவுக்கண் முதலிய இதழ்கள் அவற்றின் தலைப்புக்கு ஏற்ப உள்ளடக்கத்தைப் பெறுகின்றன.

சான்றாக, விவசாயம் என்ற இதழ் கலப்பினப் புதிய ரக விதைகள், பயிர்களைப் பாதுகாத்தல், விவசாயக் கடன் பெறும் முறை முதலியனவற்றை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவருகின்றது.

தமிழ்க் கம்ப்யூட்டர் என்ற இதழ் கணினியைத் தமிழில் அறிமுகம் செய்வதோடு இயக்கவும், புதிய புதிய திட்டத்தை உருவாக்கவும், கணினி உதிரிப் பாகங்களை அறிமுகப்படுத்தவும், புதிய கணினிப் பாடங்களைச் சொல்லவும் முக்கிய உள்ளடக்கத்தைப் பயன்படுத்துகிறது.

இச்சிற்றிதழ்களின் நடை முற்றிலும் கல்வி கற்றவர்கள் படிக்கக் கூடியதாகவே அமைகிறது.

சினிமா இதழ்

சினிமா நட்சத்திரங்களுக்கென ரசிகர் மன்ற இதழ்கள் வெளிவருகின்றன. விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், அஜித் போன்ற நடிகர்கள் குறித்து இவை வருகின்றன. அந்தந்த நடிகர்கள் நடித்த படம், நடிக்க இருக்கும் படம், சுவையான தகவல்கள் முதலியன உள்ளடக்கமாக அமைகின்றன.

மகளிர் இதழ்கள்

மங்கையர் மலர், மங்கை, பெண்ணே நீ, மகளிர் சிந்தனை, அவள் விகடன் முதலியன பெண்கள் இதழாக வெளிவருகின்றன. இவை பெண்கள் குறித்த சிந்தனையைத் தம் உள்ளடக்கமாகக் கொள்கின்றன.

பெண்கள் உடலைப் பாதுகாத்தல், மாதவிடாய் காலம் முதலிய நாட்களில் உடம்பைப் பேணுதல், சமையல் குறிப்புகள் முதலியன முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன. மகளிர் சுய முன்னேற்றக் குழு நடத்தும் மன்ற இதழும் பெண்கள் குறித்த இதழாக வெளியாகிறது.

சிறுவர் இதழ்கள்

குழந்தைகளுக்கென, குழந்தைகள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் நிலையில் பல இதழ்கள் வருகின்றன. துளிர், பெரியார் பிஞ்சு, சுட்டி விகடன், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன.

குழந்தைகளுக்கு அறிவு, சிந்தனையைத் தூண்டும் கதைகள், விடுகதை, வேடிக்கைக் கதைகள், ஓவியம், வினோதக் கதைகள் முதலியன முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன.