2.3 சிற்றிதழ்கள் அமைப்பும் உள்ளடக்கமும்

இதழ்களின் எண்ணிக்கையும், சென்றடையும் மக்களின் எண்ணிக்கையும் குறைவானவையாக அமைவன சிற்றிதழ்கள். இவை வணிகத்தைப் பொருட்படுத்தாது வருவன. ஆதலால் அமைப்பும் உள்ளடக்கமும் வெகுசன இதழைவிட வேறுபட்டவையாக அமைகின்றன.

உயிர்மை, தீராநதி, காலச்சுவடு, உண்மை, புதிய பார்வை, வல்லினம், கவிதாசன், தலித் முரசு, கூட்டாஞ்சோறு, நறுமுகை, அட்சரம், புதுவிசை, புதுப்புனல், கோடாங்கி, நிழல், போதி, தாமரை, கல்வெட்டு, முகம் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன.

பெரும்பாலும் மாத இதழ்களாகவே இவை வெளிவருகின்றன. உள்ளடக்கம் முதல் பக்கத்திலே இடம்பெறுவது இவற்றில் தான் காணப்படுகிறது.

தமிழ் இலக்கியத்திற்கென வரும் இதழ்களாக இவை அமைகின்றன. இலக்கியத் தரமான படைப்பாளிகளே இதில் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

சிற்றிதழில் நடத்துபவரின் கொள்கைக்கு ஏற்ப உள்ளடக்கம் தீர்மானிக்கப்படுகிறது.

A4 அளவில் இவை அமைகின்றன. பொதுவாக ஒரு நேர்காணல், இடைஇடையே கவிதை, இரண்டு சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், கதை சொல்லும் படம், நூல் விமர்சனம், பதிப்பக வெளியீடுகள், கட்டுரைகள் முதலியனவும் இதழ் ஆசிரியர் குறித்த விளக்கம், உறுப்பினர் கட்டணம், படைப்பு, அனுப்ப வேண்டிய முகவரி, படிப்பவர் குரல் முதலியனவும் முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன.

இச்சிற்றிதழ்களும் சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன. அவ்வக் காலத்திற்கு ஏற்றாற் போலவும், புகழ்பெற்ற இலக்கியவாதி இறந்தால் அவருக்கான சிறப்பிதழாகவும், சிறுகதைச் சிறப்பிதழ் முதலியனவாகவும் வெளியிடுகின்றன.

இச்சிற்றிதழ்களின் நடை முற்றிலும் கல்வி கற்றவர்கள் படிக்கக்கூடியதாகவே அமைகின்றது. குமுதம், தீராநதி இதழின் உள்ளடக்கமும் மொழிநடையும், புது எழுத்து, உயிர்மை போன்ற இதழ்களின் உள்ளடக்கமும் மொழிநடையும் வேறானவையாக அமையும்.

தலித் முரசு போன்ற இதழ்கள் குறிப்பாக அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை விளக்குவனவாகவும், அவ்வப்போது தலித்துகளுக்கு ஏற்படும் சிக்கல்களை அம்பலப்படுத்துவனவாகவும் அமைகின்றன.

இணையத் தளத்தில் பல இதழ்கள் வெளிவருகின்றன. நாளிதழ்; வார, மாத இதழ்களும் இவ்வாறு வெளிவருகின்றன. புத்தக வடிவில் அச்சில் வரும் பல சிற்றிதழ்கள் இணையத் தளத்தில் வருகின்றன. இணையத் தளத்தில் மட்டுமே வரும் இதழ்களும் வருகின்றன. இவை உலக அளவில் படிக்கப்படுவதால் அதற்கேற்ப உள்ளடக்கத்தைப் பெறுகின்றன.

எனவே இதழ்களின் பெயர், பருவம், நடத்துபவரின் கொள்கை முதலியன இதழ்களின் அமைப்பையும் உள்ளடக்கத்தையும் கட்டமைக்கின்றன என்பதை அறியலாம்.

சமயம் சார்ந்தும், அரசியல் பிரமுகர்களின் நேரடி வெளியீடாகவும் பல இதழ்கள் வருகின்றன. தமிழில் வெளியாகும் இதழ்கள் பெரும்பாலும் இந்து சமய இதழ்களாகவே வெளிவருகின்றன.

மேலும் கிறித்தவ, இசுலாமிய சமய இதழ்களும் வருகின்றன. அவை அந்தந்தச் சமயக் கொள்கைக்கு ஏற்பவும், அம்மக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகளை உள்ளடக்கியும் அமைகின்றன.

சமரசம், சமநிலைச் சமுதாயம், விடியல், முஸ்லிம் பெண்மணி என்ற இதழ்கள் முஸ்லிம் மக்களின் இதழ்களாக வருகின்றன.

பெரிய அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் இதழ்களும் உள்ளன. முரசொலி தி.மு.க. இதழாகவும், டாக்டர் நமது எம்.ஜி.ஆர் அ.தி.மு.க இதழாகவும் வெளிவருகின்றன.

இவை தத்தம் அரசியல் தலைவர்களின் கொள்கை, கொடை, பணி, எதிர்க்கட்சிகளின் நிலை முதலியனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவருகின்றன.