இதழ்களின் செய்திகளைப் படிப்பவர் மனத்தில் ஆழப்பதிக்கும் திறன் வாய்ந்தவை படங்கள். ‘ஒரு படம் பத்தாயிரம் சொற்றொடருக்கு ஒப்பானது’ என்று கூறுவர். கற்றல், கேட்டல் இவற்றைவிடக் காணல் மிகவும் பயன்தரும் என்பது நாம் அறிந்ததே ஆகும். இதையே நாம் 'சித்திரமாகப் பதிந்து விட்டது', ‘எழுதிய சித்திரம் போல்’ என்றெல்லாம் பேச்சுவழக்கில் பயன்படுத்துகிறோம். உண்மையில், இதழ்களின் அழகையும், கவர்ச்சியையும் செய்தி மதிப்பையும் கூட்டுவனவாகப் படங்கள் உள்ளன. வண்ணப்படங்கள் இல்லா இதழ்கள் படிப்பவர்களைக் கவர்வதில்லை. அச்சுக்கலை வளர்ச்சியும், நிழற்படத் தொழில்நுட்ப மேம்பாடும், ஓவியர்களின் பெருக்கமும் இன்றைய இதழ்களில் படங்களுக்குச் சிறப்பான இடத்தைத் தேடித் தந்துள்ளன. இன்றைய இதழ்களின் வெற்றிக்குப் படங்கள் பெருந்துணை புரிகின்றன. “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்பது ஒளவை காலத்துப் பழமொழி. ஆனால் இன்றோ, “படங்கள் இல்லா இதழ்கள் பாழ்” என்று கூறுமளவிற்குப் படங்களின் முக்கியத்துவம் கூடியுள்ளது. |