இதழியலில் ஒரு முக்கியமான பகுதியாகிய துணுக்குகளைப் பற்றி இந்தப் பாடத்தில் படிக்கலாம். துணுக்குகள் இதழியலில் பல வகைகளில் பயன்படுகின்றன. பெரிய பெரிய செய்திகளுக்கிடையே உள்ள இடைவெளியை நிரப்புதல், படிப்பவரை ஈர்க்கும் விதமான தகவல்களை அளித்தல், களைப்புத் தரும் கடினமான நீண்ட பகுதிகளைப் படிக்கும் வாசகர் மேற்கொள்ளும் முயற்சியைக் குறைக்கும் விதமாகச் சிறுசிறு தகவல்களை அளித்தல் முதலிய பணிகளைத் துணுக்குகள் செய்கின்றன. பயணத்தின்போது படிப்பவர்கள், மேலோட்டமாகப் படிப்பவர்கள், அவசரமாக இதழைப் புரட்டுபவர்கள், புதியவற்றை அறிவதற்காகப் படிப்பவர்கள் முதலான எல்லா வாசகர்களும் தேடிப் படிப்பது துணுக்குகளையே. படிப்பவரைக் கவர்வதில் துணுக்குகளே இதழ்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. துணுக்குகளையே வாசித்துச் செல்லும் படிப்பவர் பலர் உள்ளனர். படித்ததை மற்றவர்களிடம் எடுத்துக் கூற விரும்புபவர்களுக்கு ஏற்றவை துணுக்குகளே. புதிய தகவல்களை அறிவதாலும் அவற்றை மற்றவரிடம் பகிர்வதாலும் ஏற்படும் உற்சாகம் துணுக்குகள் மூலமே கிடைக்கிறது. நாளிதழ், வார, மாத வெகுசன இதழ், சிற்றிதழ் என அனைத்து இதழ்களிலும் படிப்பவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதோடு பல அரிய செய்திகளைத் துணுக்குகள் வெளிக்கொணர்கின்றன. துணுக்குகளின் தன்மை, அவற்றின் நோக்கம், பயன் முதலியவற்றினை விளக்கும் நிலையில் இந்தப் பாடம் அமைகிறது. |