5.3 நகைச்சுவைத் துணுக்குகள்

இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக விளங்குபவை நகைச்சுவைத் துணுக்குகள் ஆகும். எட்டு வகையான மெய்ப்பாடுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது நகைச்சுவை. அதனைப் பொதுவாக எல்லாரும் விரும்புவர். உள்ளத்திற்கும் உடம்புக்கும் உரம் அளிப்பதோடு, சிந்திக்கவும் தூண்டுவதாக அமைவது இதன் சிறப்பு ஆகும். இதழ்களை வாங்கியவுடன் முதலில் நகைச்சுவைத் துணுக்குகளைப் படிப்பவர்களும் உண்டு. பொழுதுபோக்காகவும் இவை அமைவதுண்டு. நகைச்சுவைத் துணுக்குகளை அரசியல் சார்ந்த துணுக்குகள், பொதுவான பிற துணுக்குகள் என்று இரண்டு வகையாகக் காணலாம்.

அரசியல் சார்ந்த நகைச்சுவைத் துணுக்குகளே பொதுவாக மிகுதி. அவை யாரையாவது தாக்குவனவாக இருந்தாலும் கூட அவர்களாலேயே இரசிக்கத் தகுந்த முறையில் அவற்றை இதழ்கள் வழங்குகின்றன. இதுவே இதழ்களின் பலம் ஆகும். சில சமயம் சில துணுக்குகள் கடுமையானவையாகத் தோன்றினாலும் அவை சுவைக்கும்படியாகவே உள்ளன.

இங்கிலாந்தில் வெளியான ஹியூமரிஸ், டிட்பிட்ஸ் ஆகியவை நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் புகழ் வாய்ந்தவை. இவற்றின் தாக்கத்தால் ஆனந்த விகடன் என்ற இதழில் நகைச்சுவைத் துணுக்குகள் மிகுதியாக உருவாகின என்பர். அத்தகைய நகைச்சுவைத் துணுக்குகளின் சிறப்புக் காரணமாகவே ‘The Punch of South India’ என்று ஆனந்த விகடனுக்குப் பெயர் வந்ததாக, சோமலே அவர்கள் கூறுகிறார்கள். உணவுக்கு ‘ஊறுகாய்’ போல் இவை சுவையூட்டுகின்றன.

அரசியல் சார்ந்த நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்து இதழ்களிலும் வருகின்றன. இவை நேரிடையாக இல்லாமல், பெயர் சொல்லாமல் அரசியல் தாக்குதல்கள் அடங்கியவையாக இருக்கும். உள்ளார்ந்த நகைச்சுவையின் காரணமாக, இவை பற்றி எந்தத் தலைவர்களும், கட்சிகளும், தனி மனிதர்களும் தன்மானப் பிரச்சனையாகக் கருதிச் சினம் கொள்வதில்லை. அதிலும் தேர்தல் காலங்களில் இவை கூடுதலாகவே இடம் பெறக் காணலாம்.

எடுத்துக்காட்டு:

“தலைவர் அப்செட் ஆகி இருக்கிறாரே, என்ன விசயம்.” “அவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது அறிவிச்சிட்டாங்களாம்,”

பொதுவான நகைச்சுவைத் துணுக்குகளும் இதழ்களில் அதிகம். இவை அன்றாடச் சிக்கல்கள், சாதாரணச் செய்திகள், விலைவாசி போன்ற எதனையும் அடிப்படையாகக் கொண்டு வருகின்றன. இவற்றில் ‘சொல் ஜாலம்’ எனப்படும் வார்த்தை வித்தைகள் மிகுதியாக இருக்கும். இவற்றிலும் ஏதேனும் நல்ல கருத்துகளும் இருக்கும். இவை புரிதலுக்கும், பொழுது போக்கிற்கும் என இருக்கின்றன.

எடுத்துக்காட்டு:

“உங்களுடைய வாழ்நாள்ல ஆபிஸ்ல ஒரு நாள் கூட லீவு போட்டதில்லையே ... அதன் ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்க." "வேற ஒண்ணுமில்லைங்க. வீட்டுல படுத்தாப் பகல்ல தூக்கம் வரமாட்டேங்குது.”

“சாம்பார் கூட்டு ரசம் எல்லாமே இன்று அருமை கமலா.” "சே! தற்புகழ்ச்சியை விடவே மாட்டீங்களா?”