ஒன்றைப் பற்றிப் பலருக்கும் அறிமுகம் செய்வது எதுவோ அது விளம்பரம் எனப்படும். தெளிவாக அறிமுகம் செய்ய வலுச்சேர்ப்பனவாகப் படம், எழுத்து, வண்ணம் முதலியன அமைகின்றன. உள் நாட்டு அளவில் மட்டும் இன்றி உலக அளவில் அச்செய்தியைப் பரப்புவதாகவும் அமைவது விளம்பரம்.
இதழியல் வல்லுநர்கள் விளம்பரம் என்பதற்கு ஒரு விளக்கம் தருகின்றனர். “ஒரு குறிப்பிட்ட அரசோ, உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ தமது கொள்கைகளைப் பரப்புவதற்கோ, தம் பொருட்களை விற்பதற்கோ, தம் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கோ தாமே பணம் செலவிட்டு எழுத்து மூலம் வெளிக்கொணரும் கருவிதான் விளம்பரம்” என்பதன்வழி இதழ்களில் இடம் பெறும் விளம்பரத்தின் நிலை அறியப்படுகின்றது. எனவே, ஊடகங்களில் விளம்பரம் என்பது முக்கியச் செய்தியாக அமையினும், இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்களின் தன்மையினையே இக்கட்டுரை விளக்க முனைகிறது.
செய்தியைப் பரிமாறிக் கொள்வதில் எளிமையை உண்டு பண்ணிய ஊடகங்களில் குறிப்பிடத்தக்கனவாக அமைவன இதழ்கள். அவ்விதழ்கள் படிப்பவரின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டுவதோடு புதுப்புது உற்பத்திப் பொருளையும் வழங்குகின்றன. இதழ்களைப் பொருளாதாரச் சிக்கல் இன்றி நடத்துவதை விளம்பரங்களின் வழி வரும் வருவாயே தீர்மானிக்கின்றது. விளம்பரங்களை அக விளம்பரம், புற விளம்பரம் என்று இரண்டு பகுப்புகளாகக் கூறலாம்.
அக விளம்பரம் (1) அச்சு விளம்பரம், (2) அஞ்சல் வழி விளம்பரம், (3) வானொலி, தொலைக்காட்சி விளம்பரம் என மூவகைப்படும். இதில் அச்சு விளம்பரம் (1) செய்தித்தாள் விளம்பரம், (2) பருவ இதழ் விளம்பரம், (3) வணிக இதழ் விளம்பரம் என்று மூவகையாகப் பிரித்துரைக்கப்படும். அஞ்சல் வழி விளம்பரம் : பதிப்பு, பட்டியல், சுற்றறிக்கை, சிறு வெளியீடுகள், மடிப்புத்தாள்கள் முதலியவற்றை அஞ்சலில் அனுப்பி விளம்பரம் செய்வது அஞ்சல்வழி விளம்பரம் ஆகும். காட்சிப்படுத்தல்வழி உற்பத்திப் பொருளை மக்களின் கண்முன் காட்டும் விளம்பரங்கள் தொலைக்காட்சி வழி வெளியாகின்றன.
சுவரொட்டிகள், அறிக்கைகள், தட்டிகள், கட்டடச் சுவர்கள், தொட்டிகள், பேருந்துகள் முதலியவற்றில் வண்ணம் தீட்டி விளம்பரம் செய்தல், மின்விளக்கு, இலக்கமுறைப் பதாகைகள் (Digital Banners) இவற்றின் வழி விளம்பரப் படுத்துதல், வானூர்தி மூலம் விண்ணில் எழுதுதல் இவை புற விளம்பரம் எனப்படும். விளம்பரம் பல நோக்கங்களை உட்கொண்டே வெளியிடப்படுகிறது. அவற்றில் முக்கியமான சில நோக்கங்களைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.
பொருள் என்று குறிப்பிடுவது வெறும் பயன்பாட்டுப் பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. திட்டங்கள், சட்டம், கொள்கைகள், கருத்துகள் இவையெல்லாம் நுகர்வோருக்கான பொருட்கள் ஆகின்றன. இவை பற்றிய விளம்பரங்களினால் விளம்பரதாரர்களும், நுகர்வோரும் பயன்பெறுகின்றனர். ஆனால் இவை நுகர்வோரைக் கவரும் விதத்தில் அமைய வேண்டியது இன்றிமையாதது ஆகும். வாங்குவதற்கான தூண்டுதலை அவை வழங்கவேண்டும். |