6.2 இதழ்களில் விளம்பரம்

இதழ்களில் வெளியாகும் விளம்பரங்கள் அந்தந்த இதழின் நோக்கம் சார்ந்தும் வெளிவருகின்றன. குறிப்பாக மருத்துவ இதழ்களில் மருத்துவம் தொடர்பான விளம்பரங்களும், சிற்றிதழ்களில் புத்தகம், பதிப்பகம் தொடர்பான விளம்பரங்களும் வெளியாகின்றன.

தொடக்கக் காலங்களில் இதழ்களில் இவ்வளவு விளம்பரங்கள் கிடையாது. அரசு விளம்பரங்கள் மட்டுமே கட்டணமின்றி வெளியிடப்பட்டு வந்தன. 1861இல் இராபர்ட் நைட் அரசு விளம்பரங்களுக்குக் கட்டணம் வேண்டும் என்றார். 1658இல் இலண்டனிலிருந்து வெளியான இதழில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் குசராத்தில்தான் முதன்முதலில் விளம்பரம் வெளியானது. மெட்ராஸ் கெசட்டிலும் விளம்பரம் வந்தது. முதலில் ஏல விளம்பரம் மட்டுமே வெளியிட்ட இதழ்கள் உண்டு. இப்போது எல்லா இதழ்களிலும் விளம்பரங்கள் வருகின்றன. விளம்பரங்கள்தான் இதழ்கள் நடத்துவதற்கான செலவை ஈடுகட்டுகின்றன என்றும் கூறலாம். ஆனால் முன்பு, விளம்பரங்களே இல்லாத இதழ்கள் இருந்தன.

இதழ்கள் விற்பனை ஆவதற்கும் அவை பற்றி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அந்தந்த இதழிலோ அல்லது தொலைக்காட்சி வழியாகவோ அவற்றை வெளியிடுகின்றனர். இதழ்கள் அதிகம் விற்பனை ஆவதற்கும் விளம்பரங்கள் உதவி செய்கின்றன.

சான்றாக, ‘தமிழில் நம்பர் 1 நாளிதழ்’ என்ற தினகரன் நாளிதழின் விளம்பரம்.

குங்குமம் என்ற இதழ் தன் விற்பனையை அதிகப்படுத்த இலவசமாக எதையாவது தருவது முதலியன இத்தன்மையனவாக அமைகின்றன.

மேலும் பக்தி இதழ்கள், அந்தந்தக் காலங்களுக்கு ஏற்றபடி, இயந்திரம், கங்கை தீர்த்தம், தகடு முதலியனவற்றை இதழுடன் இணைத்துத் தருவது போன்றன இதழ்களின் விற்பனையைக் கூட்டுவதற்கு இதழ்களே செய்யும் விளம்பரங்கள் ஆகும்.

காந்தியடிகளின் யங் இந்தியா, அன்னி பெசன்டின் நியூ இந்தியா, இராஜாஜியின் விமோசனம் போன்ற இதழ்களில் விளம்பரங்களே இல்லை. இன்றும் சில இதழ்கள் மது, சிகரெட், திரைப்படம் போன்ற பொருட்களுக்கு விளம்பரம் தருவதில்லை. இதற்குச் சான்று: ரீடர்ஸ் டைஜஸ்ட், ஆனந்த விகடன். விடுதலை. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகைச் சிறப்பு இதழ்களில் கூடுதலான விளம்பரங்கள் இப்போது வருகின்றன. தனிப்பட்ட மனிதர்கள், நிறுவனங்கள், அரசு யாவரும் விளம்பரம் செய்வதால் ஒருவகையில் பொருளாதாரச் சுழற்சியின் இரத்த ஓட்டமாக விளம்பரம் இருப்பதாகக் கருதலாம்.

விளம்பரத்தின் வெற்றி அது வெளியாகும் இதழ் எந்த அளவிற்கு மக்களைச் சென்று அடைகிறது என்பதைப் பொறுத்து உள்ளது. அதேபோல் விளம்பரங்களும் ஒரு இதழின் விற்பனை, தரம் இவற்றை நிர்ணயிப்பனவாகவும் உள்ளன.

நாளிதழ்களில் விளம்பரம்

நாளிதழ்களில் பெரும்பாலும் சுருக்கமாக, ஆனால் பெரிய எழுத்துகளில் படிப்பவர்களைக் கவரும் வகையில் விளம்பரம் வரும். செய்தித்தாள்கள்தாம் எல்லா வகை மக்களையும் சென்று அடைகின்றன. அன்றாடம் அவை தொடர்ந்து வருவதால், உடனடிப் பலன் கிடைக்கும். அரசு விளம்பரங்கள் முழுப்பக்க விளம்பரங்களாகவும் இவற்றுள் அமையும்.

பருவ இதழ்களில் விளம்பரம்

பருவ இதழ்களிலும் விளம்பரங்கள் மிகுதி. அழகிய வண்ணப் படங்களோடு இவற்றில் வரும் விளம்பரங்கள் நடுத்தர, மேல்தட்டு மக்களை ஈர்க்கும் வகையில் அமைகின்றன. வணிக இதழ்கள், தொழில் நுட்ப இதழ்கள் ஆகியவற்றில் வரும் விளம்பரங்கள் கல்வியும், பொருளியல் வளமும் படைத்தவர்களிடையே நல்ல பயன் விளைவிக்கின்றன.

இதழ்களை நடத்துவதற்கு ஏற்படும் செலவினங்களை ஈடு செய்ய விளம்பரத்தின்வழி வரும் தொகையே உதவுகிறது.