6.3 விளம்பர வகைகள்

விளம்பரங்கள் பல வகையாக இருக்கின்றன. அரசு, உற்பத்தியாளர், நிறுவனங்கள், தனிமனிதர்கள் வெளியிடும் விளம்பரங்கள் எனப் பல வகையாக உள்ளன. இவற்றைப் பொருள், காட்சி, பகுக்கப்பட்ட விளம்பரம், அறிவிப்பு, சில்லறை, அரசு, சட்ட விளம்பரம் என்ற ஏழு வகைகளில் அடக்கலாம்.

உற்பத்தி நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்காக இதழ்களின் வாயிலாக விளம்பரம் செய்கின்றன.

உற்பத்திப் பொருள் விளம்பரம்

உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இதழ்களின் வாயிலாக விளம்பரப்படுத்துதல் உற்பத்திப் பொருள் விளம்பர வகையைச் சேர்ந்தது. பருவ இதழ்களையும், தொலைக்காட்சியையும் இவை ஆட்கொண்டுள்ளன. துணிசோப்பு, நறுமணப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் இதில் சேரும். சாரதா பட்டு, நல்லி சில்க், ராஜ்கமல், ஜான்சன் வேட்டிகள், S.குமார் சூட்டிங்ஸ், என்டைஸ் யூனிபார்ம், போத்தீஸ் இது போன்ற விளம்பரங்கள் துணிகளுக்கு மட்டுமே நிறைய வருகின்றன.

ஹார்லிக்ஸ், விவா, காம்ப்ளான், மைலோ இவைபோலச் சத்துக்காகக் குடிக்கத்தக்கவை பற்றி விளம்பரம் வருகிறது. இதுபோன்றே எத்தனையோ பொருள்களுக்கு விளம்பரம் வருகிறது.

நிறுவனப் பொருள் விளம்பரம் (Institutional Advertisement)

பொருள் விளம்பரத்தில் நிறுவனப் பொருள் விளம்பரமும் உள்ளடங்கும். இவ்விளம்பரங்கள் நம்பிக்கையோடு மக்களை வாங்கத் தூண்டுபவையாக உள்ளன.

எடுத்துக்காட்டு:

கோத்ரெஜ் - பீரோ, சோப்பு
புராக்டர்&காம்பில் - ஷாம்பு, சோப்பு, அழகுப் பொருட்கள்
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்
- பற்பசை, சோப்பு, அழகுப் பொருட்கள்
பி.பி.எல் இந்தியா - தொலைக்காட்சி, சலவைப்பொறி, மின்னணுச் சாதனங்கள்
மாருதி உத்யோக் லிமிடெட்
- சிற்றுந்து
டி.வி.எஸ் சுசுகி -
மொபெட்
மற்றும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் குரூப்.

நிதி நிறுவனங்களும், கூட்டுறவு நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தம் தொழிலை இலாபகரமாக நடத்துவதற்கான விளம்பரங்களைக் கொடுக்கின்றன.

நிதி நிறுவன விளம்பரம் (Finance Advertisement)

நிதி நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள், வங்கிகள் இவை முதலீடு, தவணை, சீட்டு, கடன் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள் தருகின்றன.

எடுத்துக்காட்டு:

எஸ்.பி.ஐ - SBI Mutual Funds

ஐசிஐசிஐ - ICICI Credit Cards

எல்.ஐ.சி - எல்.ஐ.சி வீட்டுவசதிக் கடன் நிறுவனம்.

ஸ்ரீராம் சிட்ஸ் - சீட்டு நிறுவனம்.

கூட்டுறவு விளம்பரம் (Co-operative Advertisement)

கூட்டுறவு நிறுவனங்கள் தருகின்ற விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தன. இவை சேமிப்புக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்கின்றன. சில தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு விளம்பரம் செய்கின்றன

எடுத்துக்காட்டு:

கோ ஆப்டெக்ஸ் - துணிவகைகள்
ஆவின் -
பால் மற்றும் பால்பொருள்
அமுதம் சிறப்பங்காடி -
உணவுப் பொருள், நுகர்பொருள்கள்

மேற்குறிப்பிட்டவற்றைத் தவிரவும், தொழில் விளம்பரம், வணிக விளம்பரம், காட்சி விளம்பரம், அறிவிப்பு விளம்பரம் முதலிய பல விளம்பரங்களும் இதழ்களில் இடம் பெறுகின்றன.

தொழில் விளம்பரம் (Industrial Advertisement)

தொழில் சார்ந்த இவ்விளம்பரங்களில் மூலப்பொருள், எந்திரங்கள் பற்றிய விளம்பரங்கள் இடம் பெறும்.

எடுத்துக்காட்டு:

SAIL - Steel Authority of India Ltd.
Indian Railways
BSNL

காதிகிராம நிறுவனம்

வணிக விளம்பரம் (Trade Advertisement)

வணிக நிறுவனங்கள் தமது பொருள்களைப் பற்றி விளம்பரம் செய்தல் இவ்வகையினைச் சாரும்.

எடுத்துக்காட்டு:

Western Union Money Transfer American Express -
Credit Cards Citi Bank
Standard Chartered ANZ Grindlays

காட்சி விளம்பரம் (Display Advertisement)

நிறுவனங்களாலும், வணிகர்களாலும் இத்தகைய விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இதழ்களில் எந்தப் பக்கத்தில் விளம்பரம் அமைகிறதோ அதற்கேற்ற கட்டணம் உண்டு.

எடுத்துக்காட்டு:

(Dixcy) திக்சி பனியன்கள், ஷெல்டான் பிரிமியம் ஷர்ட்ஸ், அம்மன் முறுக்குக் கம்பிகள் பற்றிய விளம்பரம், (தினமணி)

பகுக்கப்பட்ட விளம்பரம் (Classified Advertisement)

வேலைவாய்ப்பு, திருமணம், வாடகை வீடு, வீடு விற்பனை, மனை விற்பனை இவைபோல் வருவன எல்லாம் இவற்றில் அடங்கும். இவற்றிற்கு என்று தனிப் பக்கமும், இடமும் ஒதுக்கப்படுகின்றன. இதனால் இதழ்களுக்கு வருவாய் மிகுதியாகக் கிடைக்கும். தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி போன்ற இதழ்களிலும், பருவ இதழ்களிலும் இத்தகைய விளம்பரங்கள் மிகுதியாக வருகின்றன.

எடுத்துக்காட்டு:

ஆங்கில இதழ்களில் :

National, Business offer, Educational, Rental, Real Estates. Situations vacant, Miscellaneous என்று வருகின்றன.

தமிழ் இதழ்களில் :

மனை விற்பனை, ஒப்பந்தப் புள்ளி, கல்வி, தொகுப்பு வீடுகள் விற்பனை. தங்குமிடம், சீட்டு நிறுவனங்கள் (Finance Corporations) மணமேடை, தொலைக்காட்சி, வானூர்தி, ஒப்பந்தப்புள்ளி (Tender-டெண்டர்), புதிய பொருட்கள் அறிமுகம் போன்ற விளம்பரங்கள் வருகின்றன.

அறிவிப்பு விளம்பரம் (Informative Advertisement)

மக்களுக்கு இன்றிமையாத சில செய்திகளை அறிவிப்பதற்காக இத்தகைய விளம்பரங்கள் வருகின்றன. வானூர்தி, கப்பல், தொடர்வண்டி இவை புறப்படும் நேரம், காலதாமதம் போன்ற தகவல் அறிக்கைகள் இவ்வகையைச் சார்ந்தவை.

சில்லறை விளம்பரம் (Retail Advertisement)

சில்லறைப் பொருட்கள், சிறு சிறு பொருட்கள் இவை பற்றிய விளம்பரங்கள் இந்த வகையைச் சாரும். பற்பசை, அழகு சாதனங்கள், சமையல் பொடிகள் இவைபோன்ற பொருட்கள் நிறைய விளம்பரங்களில் வருகின்றன.

எடுத்துக்காட்டு:

அரசன் சோப், 501 பார் சோப், சக்தி மசாலா பொடி, அவிட்டா மசாலா, ரஸ்னா, த்ரீ ரோஸஸ் டீ, பாண்ட்ஸ், ஜீவா சோப்பு, அருண் ஐஸ்க்ரீம் போன்றவை.

சட்ட விளம்பரம் (Legal Advertisement)

சொத்துத் தொடர்பாக உரிமையாளர்கள் சட்டப்படியாக வழக்கறிஞர் வாயிலாக வெளியிடும் விளம்பரம் இந்த வகையைச் சார்ந்தது.

அரசு விளம்பரம் (Government Advertisement)

அரசாங்கம் தான் எடுத்து நடத்தும் செயல்திட்டங்கள், சாதனைகள் பற்றி விளம்பரம் செய்வது இவ்வகையைச் சாரும்.

ஏலக் குத்தகை விளம்பரங்கள், நலத்திட்ட விளம்பரங்கள் இவையும் இதில் சேரும்.

எடுத்துக்காட்டு:

போலியோ சொட்டு மருந்து, எய்ட்ஸ், குடும்பநலத் திட்டம், பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, ‘இந்தியா ஒளிர்கிறது’, மழைநீர் சேகரிப்பு, நதிநீர் இணைப்புத் திட்டம்.

மேற்கூறப்பட்டவை மட்டுமன்றி இன்னும் பல வகையான விளம்பரங்கள் இருக்கின்றன.

விழாக்கால விளம்பரங்கள் (Seasonal Advertisement)

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற விழாக் காலங்களைத் முன்னிட்டுத் துணி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் முதலியனவற்றின் விளம்பரங்கள் குறிப்பிடத்தக்கனவாக அமையும்.

ஆடி அதிரடித் தள்ளுபடி, 50% தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், செய்கூலி சேதாரம் இல்லை முதலிய விளம்பரங்கள் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் I

1.

விளம்பரம் என்றால் என்ன?

2.

செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகங்களில் இன்றியமையாத கருத்துக் கருவியாக அமைவது எது?

3.

விளம்பர வகைகள் யாவை?

4.

முதன்முதலில் எந்த இதழில் விளம்பரம் எங்கு, எப்போது வெளியிடப்பட்டது?