1.6 களவிற்குரிய கிளவித் தொகைகள் - III

இந்தப் பகுதியில் பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி,
இரவுக்குறி இடையீடு, வரைதல் வேட்கை, வரைவு கடாதல்,
ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயின்
பிரிதல் ஆகிய (10 முதல் 17 வரையிலான களவியல்) கிளவித்
தொகைகளைக் காணலாம்.

1.6.1 பகற்குறி

களவு ஒழுக்கத்தில் ஈடுபடுகின்ற தலைவனும் தலைவியும்
சந்தித்துக் கொள்ளும் இடம் குறியிடம் என்று அழைக்கப்படும்.

தலைவனும் தலைவியும் பகற்பொழுதில்
தாங்கள் சந்திப்பதற்கு ஓர் இடத்தைத்
தீர்மானித்துக் கொள்வர். இதற்குப்
பகற்குறி என்று பெயர்.

பெரிய படத்தைக் காண

இப்பகற்குறி கூட்டல், கூடல், பாங்கியிற் கூட்டல், வேட்டல்
என்று நான்கு வகைப்படும். இவற்றின் விளக்கங்களை 1.5.4 என்ற
பகுதியில் 9, 10, 11, 12 ஆகிய எண்களில் காணலாம்.

1.6.2 பகற்குறி இடையீடு

மேற்காட்டியவாறு பகற்குறியில் தலைவனும் தலைவியும்
சந்திக்க முடியாமல் பல இடையூறுகள் ஏற்படுவது இயல்பு.
இதனைப் பகற்குறி இடையீடு என்பர். இந்த இடையீடு மூன்று
வகைப்படும். அவை :

(1) விலக்கல் - பகற்குறியிடத்துத் தலைவனும் தலைவியும்
வராமல் தோழி தடுத்தல்.
(2) சேறல் - பகற்குறியிடத்துத் தலைவியை அனுப்பாமல்
வேறு இடத்துக்கு அவளைத் தோழி
அழைத்துச் செல்லல்.
(3) கலக்கம் - தோழியால் குறியிடையீடு ஏற்பட்டுத்
தலைவனும் தலைவியும் மனம் கலங்குதல்.

1.6.3 இரவுக்குறி

களவொழுக்கக் காலத்தின் தொடக்கத்தில் பகற்பொழுதில்
சந்தித்த தலைவனும் தலைவியும் அச்சந்திப்பிற்குப் பல
இடையூறுகள் ஏற்பட்டமையால் இரவுப் பொழுதில் சந்திக்கத்
தொடங்குவர்.

இரவு பொழுதில் தாங்கள் சந்திப்பதற்கு
உரிய இடத்தை முடிவு    செய்வர்.
அவ்விடம்     இரவுக்குறி     என்று
அழைக்கப்படும். இந்த இரவுக்குறி
ஒன்பது வகைப்படும். அவை :

பெரிய படத்தைக் காண

(1) வேண்டல் - தலைவன் தலைவியை மீண்டும் சந்திக்க
விரும்புவதாகத் தோழியிடம் கூறுதல்.
(2) மறுத்தல் - தலைவனின்     வேண்டுகோளைத்
தோழியும் தலைவியும் மறுத்தல்.
(3) உடன்படல் - தலைவனின்     வேண்டுகோளைத்
தோழியும் தலைவியும் ஏற்றல்.
(4) கூட்டல் - தோழி, தலைவியை இரவுக்குறியிடத்து
அழைத்துச் செல்லல்.
(5) கூடல் - தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.
(6) பாராட்டல் - இரவுக்குறியில் நிகழ்ந்த புணர்ச்சிக்குப்
பின் தலைவன் தலைவியைப் புகழ்தல்.
(7) பாங்கியிற்
கூட்டல்
- இரவுக்குறியில் நடந்த புணர்ச்சிக்குப்
பின் தலைவன் தலைவியைத் தோழியிடத்து
அனுப்பல்.
(8) உயங்கல் - இரவுக்குறியின்     பொருட்டு வரும்
தலைவனுக்குச் சுரத்தில் (பாதையில்)
ஏற்படும் இடையூறுகளை நினைத்துத்
தலைவி வருந்துதல் - அது கண்டு
தலைவன் வருந்துதல்.
(9) நீங்கல் - தோழி, தலைவியை இரவுக் குறியிடத்து
விட்டு நீங்கல், தலைவன் தலைவியை
இரவுக் குறியிடத்துக் கூடிய பின்பு நீங்கல்.

1.6.4 இரவுக்குறி இடையீடு

தலைவனும் தலைவியும் சந்திக்க முடியாமல் பகற்குறியில்
இடையீடு ஏற்பட்டது போலவே இரவுக்குறியிலும் இடையீடு
ஏற்படுவது உண்டு. இதனை இரவுக்குறி இடையீடு என்பர். இந்த
இடையீடு இரண்டு வகைப்படும். அவை :

(1) அல்ல குறி
(2) வரும் தொழிற்கு அருமை

  • அல்ல குறி


  • பெரிய படத்தைக் காண

    இரவுக் குறியில் தலைவன் தன் வருகையைத் தலைவிக்குத் தெரிவிக்கும் வகையில் சில குறியீடுகளைச் செய்வான்.
    உதாரணமாக நீரில் கல்லை எறிதல், பறவையின் ஒலி போல எழுப்புதல். சில
    நேரங்களில் இயற்கையாகவே இவை

    நிகழ்ந்து விடும்.அதாவது, புன்னைக்காய் நீரில் வீழ்கின்ற ஒலியைத்
    தலைவன் நீரில் கல் எறிந்ததாக நினைத்து, தலைவி
    குறியிடத்துக்கு வருவாள். ஆனால் தலைவன் வந்திருக்க
    மாட்டான். இது குறி மாறுபட்டதால் ஏற்பட்ட குழப்பம். இதனை
    அல்ல குறி என்பர். இதுபோல, பறவை எழுப்பிய ஒலியைத்
    தலைவனின் குறிப்பொலி என்று நினைத்துத் தலைவி ஏமாற்றம்
    அடைதலும் உண்டு.

  • வரும் தொழிற்கு அருமை


  • சில வேளைகளில் இரவுக் குறியிடத்துத் தலைவன் வருதலுக்கு
    வழியில் பல இடையூறுகள் நிகழலாம். உதாரணமாக விலங்கு,
    கள்வர் போன்றவர்களால் இடையூறு நிகழலாம். மேலும் அச்சம்,
    சுரத்தின் (பாதையின்) கடுமை போன்றவையும் இடையூறாக
    அமையும். இதனை, வரும் தொழிற்கு அருமை என்பர்.

    1.6.5 வரைதல் வேட்கை

    வரைதல் என்றால் மணத்தல் ; வேட்கை என்றால் விருப்பம்.
    களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டத் தலைவனும் தலைவியும் திருமணம்
    செய்து கொண்டு வாழ விரும்புதல் வரைதல் வேட்கையாகும்.
    இந்த வரைதல் வேட்கை மூன்று வகைப்படும். அவை :

    (1) அச்சம்
    (2) உவர்த்தல்
    (3) ஆற்றாமை

  • அச்சம்


  • பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு போன்றவற்றால்
    தலைவன் உறவு கிட்டாமல் போய்விடுமோ என்று தலைவிக்கு
    ஏற்படும் பயத்தால் வரைதல் வேட்கை ஏற்படும்.

  • உவர்த்தல்


  • களவு     ஒழுக்க     நிலையைத்     தோழி வெறுத்து
    அவ்வொழுக்கத்துக்கு உதவ மறுப்பாள். இதனால் தலைவன்
    வரைதல் வேட்கை கொள்வான்.

  • ஆற்றாமை


  • தலைவனைச் சந்திக்க முடியாமல் தலைவி தவிப்பாள்.
    இதனால் அவளுக்கு வரைதல் வேட்கை ஏற்படும்.

    1.6.6 வரைவு கடாதல்

    வரைவு - மணம் ; கடாதல் - வினாவுதல் (கேட்டல்). களவு
    வாழ்க்கையைத் தொடர விரும்பாது தலைவியும் தோழியும்
    திருமண வாழ்க்கையை நாடுவர். இவ்விருப்பத்தை அவர்கள்
    தலைவனிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துவது
    வரைவு கடாதல் எனப்படும். இது நான்கு வகைப்படும். அவை :

    (1) பொய்த்தல் - தலைவன், தலைவியை மணந்து கொள்ள
    வேண்டி தோழி,     சில பொய்யான
    செய்திகளைக் கூறுதல்.
    (2) மறுத்தல் - பகற்குறி, இரவுக்குறிகளில் தலைவியைச்
    சந்திக்க வரும் தலைவனை மறுத்துப்
    பேசுதல்.
    (3) கழறல் - தலைவியுடன் களவு ஒழுக்கத்திலேயே
    இருக்க விரும்பும் தலைவனிடம், இஃது
    உனக்கும் உனது நாட்டுக்கும் உனது
    பண்புக்கும் ஏற்றது அன்று என்று தோழி
    கூறுதல்.
    (4) மெய்த்தல் - தலைவியின் உண்மை நிலையைத் தோழி
    தலைவனிடம் எடுத்துக் கூறி மணம்
    வேண்டல்.

    1.6.7 ஒருவழித் தணத்தல்

    தணத்தல் என்றால் நீங்குதல், பிரிதல் என்ற பொருள்கள்
    உண்டு. தலைவன் தலைவியரின் களவொழுக்கம் அம்பலாக
    (தொடக்க நிலை) இருந்த பொழுது அக்களவு ஒழுக்கத்திற்கு
    இடையூறு அதிகம் இல்லை. ஆனால், அவ்வொழுக்கம் அலராக
    (பலருக்கும் தெரிகின்ற நிலை - ஊரறிந்த இரகசியம்) மாறிய
    பொழுது அவர்களால் களவு ஒழுக்கத்தில் ஈடுபட முடியவில்லை.
    எனவே, அலர் சற்று ஓய்கின்ற வரை தலைவன் தலைவியைச்
    சந்திப்பதைச் சில காலம் தவிர்ப்பான். இஃது ஒருவழித் தணத்தல்
    எனப்படும். அதாவது, தலைவன் தலைவியைச் சந்திப்பதைச்
    சிலகாலம் தவிர்ப்பதே ஒருவழித் தணத்தல் ஆகும். இஃது ஏழு
    வகைப்படும். அவை :

    (1) செலவு
    அறிவுறுத்தல்
    - சில காலம் தலைவியை நான்
    குறியிடத்துக் காணாது இருப்பேன்
    என்று தலைவன் தோழியிடம் கூறுதல்.
    அதைத் தோழி தலைவியிடம் கூறுதல்.
    (2) செலவு
    உடன்படாமை
    - தோழியும் தலைவியும் அதற்கு
    மறுத்தல்.
    (3) செலவு
    உடன்படுத்தல்
    - இப்பொழுது உள்ள நிலையில் சில
    காலம் பிரிந்து இருப்பதே (ஒருவழித்
    தணத்தல்) நல்லது என்று தலைவன்
    தோழியை ஏற்குமாறுச் செய்வது.
    (4) செலவு
    உடன்படுதல்
    - அதை     உணர்ந்து     தோழி
    தலைவியிடம் கூறுதல்.
    (5) சென்றுழிக்
    கலங்கல்
    - ஒருவழித் தணத்தலால் தலைவி மனம்
    வருந்துதல்.
    (6) தேற்றி
    ஆற்றுவித்தல்
    - மனம் வருந்திய தலைவியைத் தோழி
    ஆறுதல் கூறி துயரம் நீக்கல்.
    (7) வந்துழி
    நொந்துரை
    - ஒருவழித் தணத்தலுக்குப் பிறகு
    தலைவன்     தலைவியைக்     காண
    வருவான். அப்பொழுது பிரிவால்
    ஏற்பட்டத் துயரங்களைத் தோழியும்
    தலைவியும் தலைவனிடம் எடுத்துக் கூறி
    வருந்துதல்.

    1.6.8 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

    களவு ஒழுக்கத்தின்கண் தலைவன் தலைவியைச் சில காலம்
    பிரிந்து செல்வது (ஒருவழித் தணத்தல்) உண்டு என்று மேலே
    கண்டோம். அதன் பிறகு பல காரணங்களால் தலைவன்
    தலைவியை மணந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலை
    ஏற்படும். அப்பொழுது தலைவன் மணம் செய்து கொள்வதற்கும்
    அதன்பின் இல்லறம் நடத்துவதற்கும் தேவையான பொருளைத்
    தேடி (சம்பாதித்து) வருகிறேன். அப்பொருளை ஈட்டிய பிறகு
    உன்னை மணம் முடிப்பேன். அதுவரை நீ பொறுத்திருப்பாயாக
    என்று கூறி தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல்
    வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்று பெயர்.
    இப்பிரிவு ஒன்பது வகைப்படும். அவை :

    (1) பிரிவு
    அறிவுறுத்தல்
    - வரைவிடை வைத்துப் பொருள் வயின்
    பிரிவு மேற்கொள்ள இருப்பதைத்
    தலைவன் தோழியிடமும் தலைவியிடமும்
    தெரிவித்தல்.
    (2) பிரிவு உடன்படாமை - அதற்கு அவ்விருவரும் மறுத்தல்.
    (3) பிரிவு உடன்படுத்தல் - தலைவன், தான் பிரிந்து செல்ல
    வேண்டியதன் அவசியத்தைத்
    தோழியிடம் எடுத்துக் கூறி, அவளை
    ஏற்க வைத்தல்.
    (4) பிரிவு
    உடன்படுதல்
    - அதற்குத் தோழியும் தலைவியும்
    சம்மதித்தல்
    (5) பிரிவுழிக்
    கலங்கல்
    - தலைவன்     பிரிவை     எண்ணி,
    தலைவியும் தோழியும் மனம் வருந்துதல்.
    (6) வன்புறை - தலைவன் பிரிவு தேவையானதுதான்
    என்று தோழி தலைவியிடம் வற்புறுத்திக்
    கூறுதல்.
    (7) வன்பொறை - தோழியின் ஆறுதல் மொழிகளைக்
    கேட்டுத் தலைவி பொறுத்திருத்தல்.
    (8) வரு வழிக் கலங்கல் - பொருள் ஈட்டி வருகின்ற தலைவன்
    பிரிவுத் துன்பத்தில் வாடிய தலைவியை
    நினைத்து மனம் வருந்துதல்.
    (9) வந்துழி
    மகிழ்ச்சி
    - பொருள் ஈட்டி வந்த தலைவனைக்
    கண்ட தலைவி மனம் மகிழ்தல்.