1.1 தமிழ் அக இலக்கிய மரபு

E


    தமிழில் உள்ள தொன்மையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில், களவியல், கற்பியல்,
பொருளியல் என்னும் இயல்களிலும், பிற இயல்களிலும் அக
இலக்கிய மரபுகள் விளக்கப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியங்களிலும், அகப்பொருள் பாடல்கள் மிகுதியாகக்
காணப்படுகின்றன.     சங்கம்     மருவிய     நூல்களாகிய
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் ஆறு நூல்களில் அகப்பொருள்
பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.


1.1.1 அகப்பொருள் பாடல்கள்


    ‘அகம்’ என்பது, உள், உள்ளம், வீடு எனப் பல பொருள்படும்.
அகப்பொருள் என்பது, இன்ப ஒழுக்கம் பற்றிக் கூறுவதாகும்.

    மணப்பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் மனம் ஒருமைப்பட்டு,
இருவரும் ஒருவராய் ஒன்றி வாழ்வதை, ‘அக ஒழுக்கம்’ என்று
கூறுவர். அக ஒழுக்கம் என்பதே , அகத்திணை எனப்படும். அறம்,
பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் உறுதிப் பொருள்கள்.
அவற்றுள் ‘இன்பம்’ ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு,
பாடப்பெறுவன ‘அகப்பொருள்பாடல்கள்’ என்பர். இப்பாடல்களை
எல்லாம் ஐந்திணை நெறியில் யாராவது ஒருவர் கூற்றாக, அதாவது,
தலைவன் அல்லது தலைவி அல்லது தோழி கூற்றாக அமையும்.