திருவள்ளுவர்,
தமிழ் அக இலக்கிய மரபைப் பின்புலமாகக்
கொண்டே, காமத்துப்பாலை அமைத்துள்ளார். காமத்துப்பாலின்
அதிகாரப் பகுப்பு முறையும், அக இலக்கிய நூல்களில் இடம்
பெற்றுள்ள நிகழ்ச்சிகளைக் கூறும் முறையும் நோக்கும்போது,
அவை அக இலக்கிய மரபை மேலும் வளப்படுத்தும் வகையில்
அமைந்துள்ளன. களவு, கற்பு என்ற இரு பிரிவுகளும்
அகப்பாடல்களில் முக்கியமானவை. வள்ளுவத்திலும் களவியல்,
கற்பியல் என்னும் இரு பெரும்பிரிவுகள் தலைவன், தலைவி
இடையே நிகழும் களவு ஒழுக்கமும், கற்பு ஒழுக்கமும் சிறப்பாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
ஊடலும்,
கூடலும் அக இலக்கிய மரபில் சுவை மிகுந்த பகுதி.
தலைவன் மீது வீணாக ஐயம்கொண்டு, தலைவி ஊடல் கொள்ளும்
நிகழ்ச்சிகளையும், ஊடல் தீர்ந்து கூடுகின்றபொழுது அடைகின்ற
இன்பத்தையும் மரபு மாறாமல் வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
மேலும்
அக இலக்கிய மரபில், சிறப்பு வாய்ந்தவை, தலைவன்,
தலைவி ஆகியோர் கூற்றுகள். இவை எவ்வாறு, அவர்களின் மன
உணர்வுகளை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றன என்பதனையும்
வள்ளுவர் காமத்துப்பாலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
|