2.1 தலைவி அறிமுகம்

E


    பொதுவாகப் புலவர்கள், ஆண்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,
அவர்களது உடல் வன்மையையும் வீரத்தையும் பற்றிக் குறிப்பிடுவர்.
பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,     அவர்களது
மென்மைத்தன்மையையும், உடல் அழகையும் குறிப்பிடுவர்.
வள்ளுவரும் காமத்துப்பாலில், தலைவியை அறிமுகப்படுத்தும்
பொழுது அவளது அழகையும், அந்த அழகைக் கண்டு மயங்கிய
தலைவனின் மயக்கத்தையும் பற்றியே முதலில் குறிப்பிடுகிறார்.
காமத்துப்பாலின் முதல் குறளே, தலைவியின் அழகைப் பற்றிய
குறிப்புத்தான். தலைவியைப் பார்த்ததும் தலைவன்,


அணங்குகொல்ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு



(குறள்: 1081)


(குழை = காதணி, மாலும் = மயங்கும்)

என்று மயங்குகின்றான்.


காட்சி

    அரியதாகக் காட்சிதரும் அவளது அழகு அவனுக்குப் பலவிதமான
ஐயங்களை உருவாக்கியது. இவளது ஒப்பற்ற அழகைப் பார்த்தால்
‘இவள் ஒரு தேவதையோ? சாயலைப் பார்த்தால் மயில் போல்
இருக்கிறாள். எனவே இவள் பறவை இனத்தைச் சார்ந்த மயிலோ?
இவள் காதிலே கனத்த குண்டலங்களை அணிந்திருக்கிறாள்.
எனவே மானிடப் பெண்தானோ? இவள் யார் என்று அறிய
முடியாமல் என் மனம் திகைக்கிறதே!’ என்று தலைவன் கூறுகிறான்.

    அடுத்த நிலையில், தலைவனைத் தலைவி திரும்பிப் பார்க்கிறாள்.
அந்தப் பார்வை தலைவனை மிகுதியும் பாதித்தது. பார்வையால்
பாதிக்கப்பட்ட தலைவன்,


கூற்றமோ! கண்ணோ! பிணையோ! மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து



(குறள்: 1085)

(பிணை = பெண் மான்)

என்று அவளது பார்வையைப் பற்றி
நினைக்கிறான்.

    அவள் பார்வை, தன்னைக் கொல்வது
போல் துன்புறுத்துவதால் உயிரைக்
கவர வரும் எமனோ? கருவிழி
ஓடுவதால் கண்தானோ?
அவள்
பார்வையில் மருட்சி இருக்கிறது.
மருட்சி இருப்பதால் பெண் மானோ?
என்று பலவாறு எண்ணுகிறான்.
இவ்வாறு     அழகு     மிகுந்த
தோற்றமுடைய பெண்ணாகத் தலைவி
அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

    புறத்தோற்றத்தால், தலைவனை ஈர்த்த தலைவி, தனது அக
அழகாலும், ஆழமான அன்பாலும் தலைவனது உள்ளத்தில், நீங்காத
இடத்தைப் பெறுகிறாள்.

பயில்முறைப் பயிற்சி - I

    தலைவியின் கண் கூற்றுவனின் (எமனின்)
வடிவினைக் காட்டுவதாகத் தலைவன் கூறுவது
போல் அமைந்த குறள் ஒன்றைக் ‘காதல்
வாழ்க்கை’ என்ற பாடத்தில் படித்தீர்கள்.
நினைவிருக்கிறதா? இல்லை எனில் அப்பாடத்தைத்
திரும்பப்பார்த்து, அக்குறளை இதோடு ஒப்பிட்டுப்
பாருங்கள்!